இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திருநாட்டில் சமூக மறுகட்டமைப்புக்காக அயராது செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் பொழுதும் SIO சார்பாக மாணவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றது. வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் மாணவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தல்களின் பொழுதும் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடும். அந்த தேர்தல் அறிக்கை என்பது அந்த அரசியல் கட்சி சார்ந்திருக்கும் கொள்கை, பின்புலத்தை மையமாக வைத்தே முதன்மையான கோரிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் SIO சார்பாக கல்வி மற்றும் சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைத் தொகுத்து மாணவர்கள், மக்களின் சார்பாக மாணவர் தேர்தல் அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. இதில் கல்வி, கல்வி வளாகம், இடஒதுக்கீடு, சமூக நலன் மற்றும் மாணவர் நலன் என்ற தலைப்புகளின் கீழ் 42 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் சில:
- இந்தியாவில் தற்போது இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சுக்களும், தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளன, வட இந்தியாவில் நடைபெறும் சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்துள்ளன. சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தின் சகோதரத்துவத்தையும், இறையாண்மையும் சீர்குலைத்து, இஸ்லாமியர்களுக்கெதிராக வெறுப்பை விதைக்க முயற்சி செய்து வருகின்றன. எனவே தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்டம் இயற்ற SIO வலியுறுத்துகிறது.
- சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையையும், மருத்துவ கனவையும் பறிக்கின்ற நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
- சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து விதமான போதை பொருட்களையும் முழுமையாக தடை செய்திட வேண்டும். முதல்கட்டமாக கல்வி வளாகங்களில் அருகில் இருக்கும் TASMAC கடைகளை இழுத்து மூட வேண்டும்.
- ஜனநாயக விழுமியங்களை மாணவ சமூகத்திடம் வார்த்தெடுக்கவும், சமூக அரசியல் புரிதலை மாணவ சமூகத்திடம் மேம்படுத்தவும், கல்வி வளாகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
- அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- தமிழகத்தில் பல பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதல் வளங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த மாணவர்கள் 9ஆம் வகுப்பிற்கு மேல் கல்வியை தொடர முடியாமல் போகும் சூழல் நிலவுகிறது. எனவே பழங்குடியின மக்கள் அனைவருக்கும் சாதிச் சான்றிதல் சரியான முறையில் வழங்கிட வேண்டும்.
- தனியார் பள்ளிகள்/கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
- மாணவர்களிடையே தற்போது உள்ள கல்விக்கடன் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
- கல்வி, வேலைகளில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5% இல் இருந்து உயர்த்தி வழங்கிட வேண்டும்.
இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட கோரி இந்த மாணவர் தேர்தல் அறிக்கை மூலம் SIO வலியுறுத்துகிறது.

