கடந்த செவ்வாயன்று வெளியான ஆய்வு ஒன்று ‘தொண்ணூறுகளின் முற்பகுதியிலிருந்து உலகின் பெரிய ஏரிகள், நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சுருங்கிவிட்டன, முக்கியமாகப் பருவநிலை மாற்றம், விவசாயம், நீர் மின்சாரம், மனித நுகர்வுக்கான நீர் பற்றாக்குறை பற்றிய விவசாயிகளின் கவலைகளும் தீவிரமடைந்துள்ளன’ எனக் கூறுகிறது.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான காஸ்பியன் கடல் முதல் தென் அமெரிக்காவின் டிடிகாக்கா ஏரி (Lake Titicaca) வரை இருக்கக் கூடிய உலகின் மிக முக்கியமான சில நன்னீர் ஆதாயங்கள் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக ஆண்டுக்கு சுமார் 22 ஜிகா டன்கள் என்ற மொத்த விகிதத்தில் தண்ணீரை இழந்திருப்பதாகச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான லேக் மீட்டின் அளவை விட 17 மடங்கு அதிகம்.
சயின்ஸ் இதழின் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மேற்பரப்பு நீர்வியலாளர் ஃபாங்ஃபாங் யாவ், இயற்கை ஏரிகளின் சரிவிற்கு 56% காலநிலை வெப்ப மயமாதலும் மனித நுகர்வும் முக்கிய காரணங்கள் எனவும், வெப்ப மயமாதலுக்கு அதில் பெரும் பங்குண்டு எனக் கூறுகிறார்.
காலநிலையை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் பொதுவாகக் காலநிலை மாற்றத்தின் கீழ் உலகின் வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போகும் எனவும், ஈரமான பகுதிகள் மேலும் ஈரப்பதமாகிவிடும் என்றும் கணித்திருந்தனர். ஆனால், மேற்குறிப்பிட்ட ஆய்வு ஈரப்பதமான பகுதிகள் கூடப் பெருமளவில் நீர் இழப்பைச் சந்தித்திருப்பதாகக் கூறுகிறது.
இந்த ஆய்விற்காக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 2,000 பெரிய ஏரிகளைக் காலநிலை, நீரியல் மாதிரிகளைச் செயற்கைக்கோள் அளவீடுகளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்துள்ளனர்.
தேவைக்கு அதிகமான அளவு மனிதப் பயன்பாடு, குறைவான மழைப்பொழிவு, நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வண்டல், உயரும் வெப்பநிலை ஆகியவை உலகளவில் ஏரியின் அளவுகளைக் குறைத்துள்ளன எனவும். 53% ஏரிகள் 1992 முதல் 2020 வரை பேரும் சரிவைச் சந்தித்துள்ளன எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இதனால் ஏரிப்படுகைகளில் வாழும் சுமார் 2 பில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிராந்தியங்கள் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்க, 1.5°C அதிகமாகப் புவி வெப்பமடைவதைத் தடுப்பது மிக அவசியம் என்று விஞ்ஞானிகளும், சமூக, அரசியல் மாற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர்களும் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர். ஆனால் உலகம் தற்போது 1.1°C (1.9°F) என்ற விகிதத்தில் வெப்பமடைந்து வருகிறது.
இந்த ஆய்வு, மத்திய ஆசியாவில் உள்ள ஆரல் கடல், மத்திய கிழக்கில் உள்ள சாக்கடல் போன்ற நீர் வறண்ட ஏரிகள், ஆப்கானிஸ்தான், எகிப்து, மங்கோலியாவில் உள்ள ஏரிகள் போன்றவை இவ்வகை உயரும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதுபோன்ற புவி வெப்பமயமாதல் வளிமண்டலத்திற்கு நீர் இழப்பை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் கூறுகிறது.
நன்றி – The Print