அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம் கிராமங்களை இரவோடு இரவாக புல்டோசர்கள் கொண்டு இடித்து தள்ளுவதும் அவர்களின் நெஞ்சின் மீது ஏறி நின்று ஆனந்த நடனமாடுவதும் சர்பானந்தா சோனுவால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக பாசிச பாஜக அனுபவிக்கும் ஒரு வகையான இன்ப வெறியாகும். அஸ்ஸாம் குடிமக்கள் விஷயத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவு பூர்வாங்க முடிவுகளை வெளியிடுவதற்கு முந்தைய நாட்களிலும் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறைந்தபட்ச உரிமை கூட இல்லை. இவை எதையும் ஊடகங்களும்உரக்கச் சொல்லுவதுமில்லை..
அசாமில் உள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் தரணிகாந்த் கோஸ்வாமியிடம் ஒரு நிருபர் இது குறித்து கேட்டார். ‘ஒரு ஊடுருவல்காரரை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. கோஸ்வாமி, பருவா, கலிதா, குமார் மற்றும் தாஸ் போன்ற பெயர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள். ஹசன், அலி மற்றும் முஹம்மது ஆகியோரின் பெயர்கள் ஊடுருவியவர்களுக்கு சொந்தமானது. அதாவது, ஒரு கிராமத்தை காலி செய்ய வேண்டும் என்றால், தரணிகாந்த் சொன்னது போல, அதற்கு ஒரு சில பெயர்கள் மட்டுமே தேவை.
இந்த பெயர்களைப் பற்றி சங் பரிவார் காலங்காலமாகச் சொல்லி வந்த கதைகள் எல்லாம் தேசியக் குடியுரிமைப் பட்டியல் வெளியான பிறகு வெறும் நீர் குமிழிகளாக வெடித்தன. அசாமில் உள்ள முஸ்லிம்களில் 10 சதவிகிதம் கூட உண்மையான இந்தியர்கள் இல்லை என்று கூறும் பாஜகவால், அவற்றில் ஒரு சதவிகிதம் கூட நிரூபிக்க முடியாத நிலையைதான் இறுதியாக குடியுரிமை பதிவு சர்ச்சை அடைந்துள்ளது. உண்மையில், அசாமில் முஸ்லீம் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாகவே இருப்பதை சிலர் கண்டறிந்துள்ளனர். அஸ்ஸாமில் பெங்காலி இந்துக்கள் அதிக அளவில் ஊடுருவியிருப்பதாகவும் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த ஊடுருவல் / தேசபக்தி சண்டை நாடகம் உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தும் விதமாக அசாமில் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. .
அசாம் அரசு கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை தரங், ஹோஜாய் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் இருந்து வெளியேற்றியது. இந்த அனைத்து பகுதிகளிலும், காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் எந்த வெளிப்படையான நடைமுறையையும் பின்பற்றாமல் நிழல் உலக தாதாக்களை போல மக்களின் வீடு மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்தனர். போலீசாருடன் சென்ற கூலிக்கு மாரடிக்கும் ஒரு நிருபர் செய்த மிருகத்தனமான செயலை யாரோ ஒருவர் மொபைல் போனில் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பின்புதான் அஸ்ஸாமில் பல நாட்களாக நடந்து வரும் இவ்வேட்டையை உலகம் அறிந்துள்ளது.
அண்மையில் தரங் மாவட்டத்தில் உள்ள தோல்பூரில் காவல்துறை நடத்திய நடவடிக்கைகளும் மோதல்களும்
இதே போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டு மே 17 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் அசாமில் நடந்தன. ‘வன நிலத்தை கையகப்படுத்திய வெளிநாட்டவர்களை வெளியேற்றி, உள்ளூர் மக்களுக்கு நிலம் கொடுப்போம்’ என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதிதான் இப்போது செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அசாமில், வன நிலம், அன்னியர், ஆக்கிரமிப்பு போன்ற வார்த்தைகளை தீர்மானிப்பது சட்ட அமைப்போ அல்லது நீதிமன்றங்களோ அல்ல. பாஜக என்ற ஒரு பாசிச அரசியல் கட்சிதான்.
உதாரணமாக, செப்டம்பர் 10 அன்று, தரங் மாவட்டத்தில் மக்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து சிஆர்பிஎஃப் வீரர்களை துப்பாக்கிகள் மற்றும் புல்டோசர்களுடன் அனுப்புவதற்கு முந்தைய தினம்தான் அங்கன்வாடி ஆசிரியைகள் மூலமாக அம்மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பொருள், நீதிமன்றத்திற்குச் சென்றால் மேற்படி ‘சட்ட’ வெளியேற்றங்கள் நடக்காது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்களின் அரசியல் எஜமானர்களுக்கும் உறுதியாக தெரிந்திருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு நந்திகிராமும் சிங்கூரும் தீப்பிடித்து எரிந்தபோது நாட்டில் ஊடகங்கள் வெளிப்படுத்திய உற்சாகம் இன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? கேரளாவிலிருந்து மட்டுமல்லாமல் வாஷிங்டன் மற்றும் லண்டனிலிருந்தும் நிருபர்கள் மேற்கு வங்காளத்திற்கு வந்தனர். மலேசியாவில் சலீம் குழுமத்திற்காக நந்திகிராமில் உள்ள விவசாய நிலங்களை அப்போதைய சிபிஐ (எம்) முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அதிகாரத்தின் பலத்தை பயன்படுத்தி கைப்பற்ற முடிவு செய்தபோது உலகம் முழுவதும் பெரும் அதிர்வு ஏற்பட்டது. இன்று, தரங்கின் தோல்பூரில் இன்னொரு அரசு அதைவிட இன்னும் பயங்கரமான முறையில் பேயாட்டம் ஆடி வருகிறது.
குடியுரிமை பதிவுக்கு முந்தைய நாட்களாக இருப்பின் , சட்டவிரோத குடியேற்றம் என்ற கோஷத்திற்குள் விஷயங்கள் சுருக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இன்று நிலை வேறு.. குடியுரிமைப் பட்டியலில் உள்ள தங்கள் பெயர்களை உயர்த்திக் கொண்டு ஹேமந்தா பிஸ்வாஸின் இனவெறி அரசாங்கத்தின் முகத்தில் தோல்பூர் மக்கள் காறித் துப்புகின்றனர். அவரது தம்பி சுஷந்தா பிஷ்வா சர்மாவின் வியாபார திட்டத்திற்காகத்தான் பெரும் மழைக்காலத்தில் அதுவும் பேரழிவு கொரொனோ காலத்தில் 20,000 பேர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நான்கைந்து தலைமுறைகளுக்கும் முன்புள்ள மூதாதையர்கள் விவசாயம் செய்து வாழ்ந்த வந்த நிலத்தை இரவோடு இரவாக புல்டோசர்கள் மூலம் அழித்து விட்டனர். மோடி அரசின் புதிய விவசாயச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கோருக்குடி பல்நோக்கு பண்ணை திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட தோல்பூரின் முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் உள்ள, 1,800 பிகா நிலத்தில் (சுமார் 5,000 ஏக்கர்) தலைமுறைகளாக அங்கு பயிரிட்டு வாழ்ந்த சுமார் 900 குடும்பங்களின் உரிமைகளை, ஒருநாள் அறிவிப்பு மற்றும் 1,200 பாதுகாப்பு வீரர்கள் மூலம் அபகரித்துள்ளனர்
சட்டப்பூர்வமான குடிமக்கள், முறைப்படி பசலி கட்டுபவர்கள், அவர்களுக்கு முறைப்படி ஒரு மாற்றுத்திட்டத்தை அறிவிக்காமலும், நீதிமன்றம் செல்ல வாய்ப்பளிக்காமலும் வெளியேறுவதற்கான அவகாசம் கூட அளிக்காமலும் அஸ்ஸாமின் முதலமைச்சர் தனது தம்பியின் திட்டத்திற்காக நிலங்களை அபகரித்துள்ளார். இதில், முதல் பிரிவைச் சேர்ந்த 48 குடும்பங்கள் சிவன் கோவில் கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு முதலமைச்சர் அத்துமீறல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, குறைந்தபட்சம் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். பல பதிற்றாண்டுகளாக மக்கள் வரி செலுத்திய, பயிரிடப்பட்ட மற்றும் அவர்களின் வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மசூதிகளை அபகரிக்க ஒரு முதலமைச்சர் ஒத்தாசை செய்துள்ளார்.
காசிரங்கா மற்றும் பார்பேட்டாவில் உள்ள சில கிராமங்களில் இருந்து இதே போன்ற வெகுஜன வெளியேற்றங்கள் 2016இல் அஸ்ஸாமில் நடந்தது . அந்த நேரத்தில் பாஜக தலைவர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். உபரி நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது அவர்களின் முக்கிய வாதம். அதிகாரிகள் யாரும் தேசிய ஊடகத்தின் முன் ஆஜராகவோ அல்லது ‘சட்டரீதியாக’ அவர்கள் எடுத்த நடவடிக்கையை விளக்கவோ தயாராக இல்லை.
ஆனால் அங்கு இருந்தவர்கள், அவர்கள் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன் இறந்தவர்கள் அடக்கப்பட்ட கல்லறைகள் இருந்த நிலத்திலிருந்துதான் அவர்கள் விரட்டப்பட்டனர். உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வார்த்தைகளில், இது ஒரு வகையான பரவசம் இருந்தது. வங்காளிகள் மற்றும் ஊடுருவல் என்ற வார்த்தைளால்தான் அந்த ஏழை விவசாயிகள் அழைக்கப்பட்டனர். பார்பெரெட்டாவில் இருந்து மைல் தொலைவில் உள்ள உட்கிராமங்களில் யாருக்கும் தெரியாமல் நடந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலமற்ற நிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அஸ்ஸாம் அரசிடமிருந்து நீதி பெற ஏதேனும் வழி இருக்கிறதா அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பம் குடியுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டபோதும் அசாமில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் நடத்தப்பட்ட வேட்டைக் குறி அவர்களில் குறைந்துவிட்டதன் ஒரு நிம்மதி.
டெல்லி பல்கலைக்கழகத்தில் முன்னாள் விரிவுரையாளராக இருந்த ஹிரன் கோஹைன் அப்போது இதைச் சுட்டிக்காட்டினார். ‘எண்பது அல்லது அதைவிட அதிக சதவீத அஸ்ஸாமிய முஸ்லிம்கள் பங்களாதேஷியர்கள் என்று சொன்னவர்கள் இனி என்ன செய்வார்கள்? சாத்தியமான அனைத்து நுட்பங்களையும் பயன்படுத்திய பிறகு அரசு வெளியிட்ட பட்டியலில் உள்ள அதிகமான பங்களாதேஷியர்கள் யார் என்று சொல்ல அவர்களுக்கு இப்போது தைரியமில்லை’
இந்தியாவில் இனவெறி மிக அதிகமாக உள்ள அஸ்ஸாமைக்குறித்து தேசிய ஊடகங்கள் பொதுவாக அமைதியாக இருக்கின்றன. ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர்’ அல்லது டி-வாக்காளர் என அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் வரையறுக்கப்படாத ஒரு மக்கள் கூட்டம் வாழும் மாநிலம் அது.. தேர்தல் நெருங்க நெருங்க, தேர்தல் அதிகாரி ஒருவர் தரணிகாந்த் கோஸ்வாமியின் ‘கோட்பாட்டை’ மனதில் வைத்து, வாக்களர் பட்டியலை எடுத்து சில பெயர்களில் கீழ் சிவப்பு மையால் அடையாளப்படுத்துகிறார். அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால், ஒருவர் டி.வோட்டராக மாறுவார். அவரது தாயும் தந்தையும் இந்திய குடிமக்களாக வாக்காளர்களாக இருப்பினும் அவரது மகன் ஒரு ‘பங்களாதேஷி’ ஆகிவிடுவார்,
அசாமில் இதுபோன்ற லட்சக்கணக்கான வழக்குகள் உள்ளன.. நீங்கள் புகார் செய்ய ஆவணங்களுடன் ஒரு அலுவலகத்திற்குச் சென்றால், அவை சேகரிக்கப்பட்டு மீண்டும் ஆய்வுக்கு அனுப்பப்படும். இந்த ஆவணங்கள் மீண்டும் வெளியிடப்படாது. அசாமில் அரசு அதிகாரிகளால் எத்தனை குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜனநாயகத்தின் காவலாளியாக இருக்க வேண்டிய ஊடகங்கள், இந்த உண்மைகளை கண்டுகொள்ளாதது போல் நடித்து, அருமனைகளுக்கு முன்னால் சிப்பந்திகளாக நிற்கிறார்கள்.
மார்பில் சுடப்பட்டு இறக்கும் நிலையில் இருந்த விவசாயியின் நெஞ்சின் மீது ஏறிக்குதித்து மிதித்த பிஜய் போனியா, இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அசாம் மக்களின் உண்மையான பிரதிநிதிதான். அவர் நம்மைச் சுற்றியுள்ள பலரின் ஆள்மனதில் மகனாகவும் மாறி வருகிறார். பிரதமரிலிருந்து சில தெரு மூளையிலுள்ள சாகாவில் கொடி ஏந்தியவர் வரை அவனைக் குறித்து பெருமிதம் கொள்வார்கள். இப்போது அவர் சட்டத்தால் தண்டிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அவர் பிரதாப் சந்திர சாரங்கி அல்லது பிரக்யா சிங் தாக்கூர் போன்றோ வருங்காலத்தில் அஸ்ஸாமின் எம்எல்ஏ அல்லது எம்.பியாகவோ மாறப்போகும் புண்ணிய ஆத்மாதான் பிஜய் போனியா. அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை.
பிரச்சனை அரசியலமைப்புச் சட்டத்தில்தான் உள்ளது. அதை பாதுகாப்பது என்பது பாஜக ஆளும் மாநிலத்தின் பொறுப்பல்ல என்றாகிவிட்டது.. குடிமகனாக இருந்தாலும் அல்லது ஜனாதிபதியின் பேரனாக இருந்தாலும் மதத்தின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு கொள்கையை அமல்படுத்தி வருகிறது பாசிச பாஜக.
k.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்