இந்து தேசியவாதம் பொதுவாக ஒரு பிராந்திய-மதவாத இயக்கமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால், அவை சமூக காரணிகளுடன் இணைந்த அடையாள அரசியலை முன்னெடுக்கலாம். போலவே, அவர்கள் வளர்ச்சியின் இறுதிக்கட்டமாக மண்டலுக்கு முதன்மையாக எதிர்வினையாற்றியதாக இருந்துள்ளது. அப்போதைய பிரதமர் விபி சிங் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்துவோம் என்று அறிவிக்கையில், ‘எதிர்பார்த்தபடி சூத்திரர்களின் புரட்சியால் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் தேசத்திற்கான நீதி மற்றும் ஆன்மீகப் படையை உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று எழுதியது ஆர்எஸ்எஸ் இதழான ஆர்கனைசர். மண்டல் இரண்டாம் கட்டமாக நிறைவேறயில், ‘காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி மத்தியில் தகுதிக்கான மெரிட் அரணையே தகர்க்கிறது’ என்று கூறியது அதே இதழ். 2004 மற்றும் 2009ல் பாஜக தொடர்ந்து தோல்வியுற்ற பிறகு, அதிகாரத்திற்கு வர மற்றும் இந்து தேசியவாத கொள்கை மற்றும் அதன் நலனிற்கும் எதிராக உள்ள செயல்பாடுகளைத் தடுக்க உடனடி திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது.
தேசியவாத பாப்புலிச பிராண்டை நரேந்திர மோடி குஜராத்தில் சிறந்த மாற்றாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அந்நிய சக்திகளுக்கு எதிராக (பிரிவினை வெறுப்பைத் தூண்டும் உத்தி) ஒற்றுமையை நிலைநிறுத்துகிறோம் என்ற பெயரில் சாதித் தடைகளைக் கடந்து அனைத்து பிற்படுத்தப்பட்ட, தலித்துகளைக் கூட கவர முடிந்தது. அதுவரை உயர்சாதிகளின் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட பாஜக, இந்த பிரிவினை பிரச்சாரத்திற்குப் பிறகு தன்னை அடித்தள சாதிகளின் இயக்கமாக உருவாக்க முயன்றது.
நரேந்திர மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து வந்தவர், டீ விற்று முன்னேறியவர், டெல்லி ஆங்கில கட்டமைப்பால் பாதிக்கப்பட்டவர் என்று பொதுவான பிற்படுத்தப்பட்டவர்களின் மனநிலையைப் பிரதிபலித்தார். பிற்படுத்தப்பட்டவர்கள் பலரும் மண்டலுக்கு பிறகு தங்கள் தடையிலிருந்து விடுவித்துக்கொண்டாலும் நடுத்தர வர்க்கத்தினராகக் கூட முன்னேற முடியவில்லை. அனைத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பை உருவாக்க ‘குஜராத் மாடலை’ உருவாக்குவேன் என்ற நரேந்திர மோடி அவர்களின் விரக்தியை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
நகரவாசிகள் மற்றும் உயர்சாதி நடுத்தர வர்க்கத்தின் ஆதரவு ஏற்கனவே பாஜகவுக்கு இருந்தபோது, மோடி கூடுதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கையும் கொண்டு வந்தார். 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 22% இருந்த ஓபிசியின் வாக்கு சதவீதம் 2014ம் ஆண்டு 34%மாகவும் 2019ம் ஆண்டு 44%மாகவும் அதிகரித்தது. இது மோடியின் பாஜகவின் எழுச்சியையும், அதேநேரத்தில் நேர் முரணான உயர்சாதி அரசியல்வாதிகளின் மறு ஆதிக்கத்தையும் விளக்குகிறது. 2014 மற்றும் 2019ம் ஆண்டு இந்தி பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45% பாஜக எம்பிக்கள் உயர் சாதியினர். பாஜகவின் தேர்வு யாரை மையப்படுத்தியுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது. பட்டியல் சாதியினரைத் தவிர்த்தால், இந்தி பிராந்தியத்தின் பொதுத் தொகுதியிலிருந்து தேர்வான பாஜக எம்பிக்களில் 62% பேர் உயர் சாதியினராக இருந்துகொண்டு மற்ற 37% பேரை எதிர்க்கிறார்கள். 2019ம் ஆண்டு நரேந்திர மோடி அரசின் 55 அமைச்சர்களில் 47% பேர் உயர் சாதியினர்கள். 13% ஜாட், படேல், ரெட்டி போன்ற ஆதிக்க சாதியினர்கள். இதுபோக, பிற்படுத்தப்பட்டவர்கள் 20%, தலித்துகள் 11%, பழங்குடியினர்கள் 7% மற்றும் முஸ்லிம், சீக்கியர் முறையே தலா ஒருவர் உள்ளனர்.
இதற்கு இணையாக இட ஒதுக்கீட்டு முறையிலும் மோடி அரசு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. முதலில் பொதுத்துறை நிறுவனங்களைக் கலைக்கும் செயல், சமூகத்தில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கிய வேலைவாய்ப்புகளைக் குறைத்து வருகிறது. அதேநேரத்தில், யுபிஎஸியால் வழங்கப்படும் சிவில் சர்விஸ் பணியிடங்களும் 40% வரை குறைந்துள்ளது. 2014ம் ஆண்டு 1236 பேர் தேர்வான நிலையில் 2018ம் ஆண்டு 759 பேரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவது, இந்திய நிர்வாகத்தில் செயல்படும் முறைகேடான நியமனங்கள் இட ஒதுக்கீட்டு நடைமுறையையே சிதைக்கின்றன. மூன்றாவது, 2019ம் ஆண்டு ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்'(EWS) என்ற பெயரில் உயர்சாதியினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு சமூக ரீதியில் இட ஒதுக்கீட்டிற்கான அர்த்தத்தையே தகர்த்தது. மேலும், இப்பிரிவில் இடம்பெறும் உயர்சாதியினர் பின்தங்கியவர்கள் கிடையாது. அவர்களுக்கான தகுதியாக ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வரையறுக்கப்பட்டது. இதன் மூலம் 95% உயர் சாதியினர்கள் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்களாக ஆனார்கள்.
தொடராக பாஜக தலைவர்கள் உயர்சாதி பெருமைகளைப் போற்றி புகழ ஆரம்பித்தனர். உதாரணமாக, ராஜஸ்தான் பாஜக தலைவரும் நாடாளுமன்ற சபாநாயகருமான ஓம் பிர்லா, ‘பிராமண சமுதாயம் எப்பொழுதும் மற்ற சமுதாயங்களுக்கு வழிகாட்டும் வேலையைச் செய்கிறது. பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதற்கான காரணம் அவர்களின் பிறப்பின் பண்பால் அமைகிறது’ என்று வெளிப்படையாக அறிவித்தார். சாதி சார்ந்த தங்களது தூய்மை வாத நம்பிக்கைகளை பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தவே செய்கிறார்கள். யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சரான பிறகு, அதுவரை மாயாவதி, முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் குடியிருந்த முதலமைச்சர் பங்களா முழுக்க புரோகிதர்களை அழைத்து தூய்மை சடங்கை நடத்தினார்.
உயர் சாதியினரின் நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்த சங் பரிவார் முயன்றுள்ளது. முஸ்லிம்களைக் குறிவைத்து ‘லவ் ஜிஹாதுக்கு’ எதிராகக் கண்காணிப்பு படை உருவான போது முஸ்லிம்களுக்கு இணையாகத் தாழ்த்தப்பட்டவர்களும் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். இது புதிதல்ல. 23 ஆண்டுகளுக்கு முன்பே பாபு பஜ்ரங்கி என்ற அகமதாபாத் பஜ்ரங் தள் தலைவன், முஸ்லிம் மற்றும் தலித் ஆண்கள் காதலிக்கும் படேல் சாதிப் பெண்களை மீட்டுக் கொண்டுவருவதே தன் பணியாகச் செய்துள்ளான். அவர்கள் தங்கள் உட்சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்படுகிறார்கள். 2014ம் ஆண்டு யோகி ஆதியநாத் இவ்வாறே அறிவிக்கிறார், ‘முஸ்லிம்கள் யார் இந்துமதத்திற்கு திரும்ப விரும்புகிறார்களோ, அவர்கள் புனிதப்படுத்தப்பட்டு அவர்களுக்காக புதிய சாதி உருவாக்கப்படும்.’ இந்த வார்த்தை சமூக கட்டமைப்பின் அங்கமாகச் சாதி நிறுவப்படுவதை உணர்த்துகிறது.
இதனை ஒன்றி தோல் பணிகளில் ஈடுபடும் தலித் தொழிலாளர்களை ‘கௌரக்சாஸ்’ தாக்குகிறார்கள். 2016ம் ஆண்டு குஜராத் மாநிலம் உனாவில் (மறுபடியும் குஜராத்) தலித் தொழிலாளர் ஒருவர் தோல்பொருள் பணியில் ஈடுபட்டபோது பசுவதை புரிகிறார் என்று கூறி தாக்கப்பட்டார். இந்து தலித்துகள் வேறொரு மதத்திற்கு மதம் மாறுவதற்கு எதிராகக் கண்காணிப்பு கும்பல்கள் முக்கிய எதிர்வினைப் புரிகிறார்கள். கர்வாப்ஸி இயக்கம் அவர்களில் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது. 2018ம் ஆண்டு ஒரு நிகழ்வாக உத்திர பிரதேசத்தில் முஸ்லிமாக மாறிய தலித் ஒருவரை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றினார்கள் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள்.
கண்காணிப்பு கும்பல்கள் முன்பிலிருந்தே செயல்பட்டு வருகையில், பசுவதைக்கும் மதமாற்றத்திற்கும் எதிரான புதிய சட்டங்கள் எதை வற்புறுத்துகின்றன. மீண்டுமொருமுறை தலித்துகள் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். குஜராத்தில் யார் புத்த மதத்திற்கு மாற விரும்புகிறார்களோ அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை 2003லிருந்து உள்ளது. இதே சிக்கலை ‘லவ் ஜிகாதுக்கு எதிரான’ சட்டக் கோரலில் உத்திர பிரதேசம் நிர்ணயித்துள்ளது தெரிகிறது. ஆனால், இந்த விஷயத்தில் சட்டம் மற்றும் விதிகள் மட்டுமல்லாமல் போலீஸையும் கையாள உறுதியாக உள்ளது உத்திர பிரதேசம். இதன் மூலம் அரசின் இலக்காகும் தலித்துகள் ‘அர்பன் நக்சல்கள்’ போன்ற சுலபமான விளக்கத்தோடு கட்டுப்படுத்தப்படலாம். பீமா கோரகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் வீட்டைச் சோதனையிட்ட போலீஸ் திரும்பத் திரும்ப கேட்டது, ‘ஏன் உன் வீட்டில் பூலே மற்றும் அம்பேத்கர் படம் இருக்கிறது, எந்த கடவுளின் படமும் இல்லை?’ என்றும், அவரது குடும்பத்தாரிடம் – ‘உனது கணவன் ஒரு தலித். ஆதலால் அவன் எந்த பண்பாட்டையும் பின்பற்றவில்லை. ஆனால், நீ ஒரு பிராமின். ஏன் நகைகளையும் சிந்தூரையும் அணியவில்லை? நீ ஏன் பாரம்பரிய மனைவி போன்று உடை உடுத்தவில்லை? என்றும் கேட்டனர்.
பாஜகவின் அதிகார எழுச்சியான உயர்சாதி அரசியலும் அதன் கொள்கைகளும் மண்டலுக்கு பிறகான எதிர் புரட்சியின் மூலம் மட்டும் சாத்தியமாகவில்லை. அவை நாடு முழுவதுமுள்ள கண்காணிப்பு கும்பல்களாலும் நடந்துள்ளது. இந்த புதிய நடைமுறை அரசியல் சக்திகளைப் போன்று சமூக ஒழுங்கை கட்டுப்படுத்துகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தின் நடைமுறையாகவும் பொருந்துகிறது.
- கிரிஸ்தோப் ஜாஃப்ரிலாட்.
விடுதலைக்கு பிறகான இந்தியா குறித்த ஜாஃப்ரிலாட்டின் ஆய்வுகள் முக்கியமானவை. சமூகவியல் பேராசிரியரான இவர், இந்திய அரசியலையும் அதன் சமூக காரணிகளையும் தலித்துகள், முஸ்லிம்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் பார்வையில் நின்று அணுகுபவர். ‘அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்’, ‘இந்தியாவில் சாதியும் மதமும்’, ‘இந்திய நகரங்களில் முஸ்லீம்கள்’ போன்ற ஜாஃப்ரிலாட்டின் நூல்கள் சமகாலத்தின் தேவையாக உள்ளது.
தமிழில்; அப்துல்லா.மு
Courtesy; The Indian Express.