1966இல் அறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் அழைத்து உரையாற்ற வந்தார்.காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சில மாணவர்கள் மேடையின் கீழே பட்டாசுகளை மறைத்து வைத்து அண்ணா மேடைக்கு வந்தபோது வெடிக்க வைத்தனர்.அன்றைய முதல்வராகயிருந்த மறைந்த பேராசிரியர்.எஸ்.பி. சண்முகநாதன் அதிர்ந்து போனார்.
அறிஞர் அண்ணா தனது உரையின் போது “என் மீது அன்பு செலுத்தும் மாணவர்கள் என்னை வரவேற்ற போது மாலை அணிவித்து வரவேற்றார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் வரவேற்பு இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பட்டாசுகளை வெடித்து, சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார்கள். எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.கல்லூரி முதல்வர் இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று அண்ணா கூறிய போது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் தொடர்ந்தது.
1967இல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி அமைந்தபோது மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் மோதலாக தொடங்கி வன்முறையாக மாறியது.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போக்குவரத்து ஊழியர்கள் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர்.இதை அறிந்த அறிஞர் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பார்ப்பதற்கு நேராக வந்தார்.கல்லூரி முதல்வர் முன்னிலையில் மாணவர்களிடம் முதல்வர் அண்ணா பேசி கொண்டிருந்த போது, அண்ணா குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.மேஜை மீது தண்ணீர் வைத்தபோது மாணவர் ஒருவர் அந்தக் கண்ணாடி கோப்பையைத் தட்டிவிட்டார்.குழுமியிருந்த உயர் அலுவலர்கள் , மருத்துவர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டனர்.அண்ணா எல்லோரையும் அமைதிப்படுத்தினார். தவறு செய்த மாணவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அண்ணா கூறிவிட்டார்.
இத்தகைய அண்ணா கடைப்பிடித்த ஜனநாயக மாண்புகளைத் தனது தந்தை சொல்லின் செல்வர் குமரி அனந்தனிடம் இசை மகள் கேட்டறியலாம்.பெண் மாணவி “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்றுதான் முழக்கமிட்டுள்ளார்.தமிழிசையை ஒழிக என்றோ அல்லது வன்முறையிலோ அந்த மாணவி ஈடுபடவில்லை.
கேட்பவர்களின் காதுகள் செவிப்பறை கிழியும் அளவிற்கு பெண்ணுரிமைக்காகக் கூக்குரல் எழுப்பும் தமிழிசை, பெண் மாணவி என்றும் பாராமல் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தோடு, காவல்துறையிடம் புகார் அளித்து, கைது நடவடிக்கை சரியே என்று வாதிடுவது தான் பாசிசப் போக்கின் உச்சம் என்பதை வசை மகள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பாஜக செய்யும் கொலைப் பாதகச் செயல்கள் மீது அடுத்து வரும் ஆட்சியினர் இது போன்ற நடவடிக்கைளை எடுத்தால் என்னவாகும்.அந்தமான் தீவில் புதிய திகார் சிறை ஒன்று அல்லவா கட்ட வேண்டியிருக்கும்.
பேராசிரியர்.மு.நாகநாதன்