பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லாடல் என்றாலும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது.ஆம் சமூக விரோதிகள் என்கிற வார்த்தை தான் அது.முதலில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களும், பா.ஜ.க வினரும் அந்த வார்த்தையை ஜல்லிக்கட்டு போராட்டம் வீரியமெடுக்க தொடங்கியதிலிருந்து பிரயோகப்படுத்தி வந்தனர்.அந்த வார்த்தையானது தொடர்ந்து கடந்து அந்த போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் பலர் அந்த சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டனர் இது திசைமாறி போகிறது என கூறி ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகினர்.அந்த வார்த்தையை அவர்களாக கூறினார்களா அல்லது கூற வைக்கப்பட்டார்களா என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை காவல்துறை பாதுகாப்பு அளித்து ஆதரித்து வந்த தமிழக அரசும் திடீரென அந்த போராட்டத்தை வன்முறையை கொண்டு முடித்து வைத்தது.ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்பதற்கு தமிழக அரசு அளித்த விளக்கமும் கூட சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து விட்டனர் என்பதாகவே இருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த நெடுவாசல் போராட்டத்தையும் கூட பா.ஜ.க வை சேர்ந்த ஹெச்.ராஜா ஹைட்ரோ கார்பனை எதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதிகள் அவர்கள் தேச துரோகிகள் என குற்றம்சாட்டினார்.அதனை தொடர்ந்து அவர் மக்களுக்காக போராடுபவர்களை ஆண்டி இண்டியனாகவே சித்தரித்து வந்தார். இதன் நீட்சியாகவே தூத்துக்குடி போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்க்கு காரணமாக கூறப்பட்டதும் அந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதே,அதையும் முதலில் கூறியது தமிழக அரசு அல்ல,பா.ஜ.க வினரே….
சமூக விரோதிகள் என போராட்டக்காரர்களை பா.ஜ.க வினரும் அவர்களது அடிவருடிகளும் கூற காரணத்தை ஆராய்ந்தால் ஒரு போராட்டத்தை மக்கள் முன்னெடுக்கும் போது அதில் மக்களுக்காக போராட கூடிய பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும்,அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு அரசியல் புரிதலை ஏற்ப்படுத்துகிறார்கள் அதனாலேயே அந்த போராட்டம் வீரியமாக முன்னெடுக்கப்படுகிறது.அது ஜல்லிக்கட்டு போராட்டமாக இருந்தாலும் சரி,நெடுவாசல்,கதிராமங்கலம் போராட்டமாக இருந்தாலும் சரி,தூத்துக்குடி போராட்டமாக இருந்தாலும் சரி.
அத்தகைய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தான் வெறும் ஜல்லிக்கட்டுக்காக கூடிய கூட்டத்தில் விவசாயிகளுக்காக குரல் எழுப்பப்பட்டது,காவிரி விவகாரத்தில் உரிய தீர்வை ஏற்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது, அரசின் எஜமானர்களாக இருக்கும் கார்ப்பரெட்கள் குறித்து விமர்சிக்கப்பட்டது.அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து பேசப்பட்டது.இவையெல்லாம் தான் ஆட்சியாளர்களை கோபப்பட வைத்தது.ஆனால் போராட்ட களத்தில் பேசப்பட்டதில் தவறு எதுவும் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் அவையெல்லாம் அன்றாடம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள்.அதை எப்படி அரசிடம் கேட்பது என தெரியாமல் இருந்த மாணவ இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு போராட்டம் அதற்க்கான களம் தான் இதில் நாம் தாராளமாக கேட்கலாம் என்கிற புரிதலை அவர்களுக்குள் ஏற்ப்படுத்தியது அத்தகைய சமூக அமைப்புகள் தான்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமல்ல,தமிழகத்தில் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் தெளிவான புரிதலோடு நடப்பதற்கு சமூக அமைப்புகளே காரணம் என்றால் அது மிகையாகாது.
அது தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்துள்ள மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து சமூகத்திற்க்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என திட்டம் தீட்டி சித்தரித்து வருகின்றனர்.பா.ஜ.க வும் அவர்களது கட்டளையின் கீழ் இயங்கும் தமிழக அரசும் இதை கூறி கொண்டு வந்த நிலையில் திடீரென தூத்துக்குடியில் தோன்றிய ரஜினிகாந்த் இந்த வார்த்தையை அழுத்தம் திருத்தமாக கூறி தமிழகத்தில் ஒரு சலசலப்பை ஏற்ப்படுத்தினார்.
இதே ரஜினிகாந்த் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த அன்று அந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்,தூத்துக்குடி சென்று வந்த பின்பு தனது கருத்தை அப்படியே மாற்றிக் கொண்டு சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து அவர்கள் காவலர்களை தாக்கியதால் தான் அங்கு பிரச்சனை ஆரம்பமானது என கூறி அந்த சம்பவம் சமூக விரோதிகளால் தான் நடந்தது என்பது தனக்கு தெரியும் என ஆக்ரோஷமாக கூறினார்.அவர் கருத்தை மாற்றி கூறியது அவரை இயக்குபவர்களால் தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றாலும் சமூக விரோதிகள் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது அவர் தெளிவுப்படுத்த வேண்டும்,சமூக விரோதிகளை தனக்கு தெரியும் என கூறிய அவர் சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் காரணம் அவர்களை சமூக விரோதிகளா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அவர் கூறும் சமூக விரோதிகள் காந்தியை கொல்லவில்லை,இறை இல்லத்தை இடிக்கவில்லை,கர்ப்பிணி பெண்ணையும் அவரது சிசுவையும் கொல்லவில்லை,மாட்டை காக்க மனிதனை கொல்லவில்லை,தொப்பி அணிந்திருந்ததற்க்காக அப்பாவி இளைஞனை கொல்லவில்லை,பத்திரிக்கையாளர்களை கொல்லவில்லை மாறாக மக்களுக்காக போராடுகிறார்கள் சமூகத்தை காக்க போராட்ட களத்தில் நின்றார்கள் .சமூகத்தை காக்க போராடுபவர்களை சமூக விரோதிகள் என கூறினால் பெருமையோடு அனைவரும் கூறுவோம் நானும் சமூக விரோதியே என்று.ஆனால் ரஜினி போன்றவர்களுக்கும் அவரை இயக்குபவர்களும் இதை அறிய மாட்டார்கள் காரணம் சமூகம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது.