இன்றைய உலகை பெரும்பாலும் ஆளும் வலதுசாரி ஆட்சியாளர்களின் முதல் சுரண்டல் இயற்கையிலிருந்தே தொடங்குகிறது. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி நரேந்திர மோடி வரை அவர்கள் மக்களுக்கு மட்டும் விரோதிகளாக இல்லை. ஒட்டுமொத்த பூவுலகிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு உலகின் பெரிய வனமான அமேசான் பற்றியெரிந்தபோது பிரேசிலின் ஜேர் போல்சனேரோ அசட்டை செய்யவில்லை. ஆஸ்திரேலிய காட்டுத்தீ உலகையே பதறடித்தபோது அதன் அதிபர் ஸ்காட் மாரிசன் மட்டும் மௌனம் காத்தார். மேலும், கடந்த ஆண்டு மூன்றில் இரண்டு பங்கு இயற்கை பேரழிவுகளைக் கண்ட நாடு அமெரிக்கா. அதைப்பற்றிச் சிறு கவலையும் அடையாமல்தான் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தைதை எதிர்த்தார் டொனால்ட் ட்ரம்ப். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சூழலியல் குறித்தான விவாதம் முக்கிய பேசுபொருளானது.
இந்தியாவைப் பொறுத்தவரை அது உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாகத்தான் இயங்கி வருகிறது. சூழலியல் கழிவுகளை உற்பத்தி செய்வதிலும், வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும் பன்னாட்டு, முதன்மையாக உள்நாட்டு முதலாளிகளின் வேட்டைகளமாக உள்ளது. குறிப்பிட்ட முதலாளிகளின் நலனிற்காக மட்டும் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசில் இயற்கை மீதான அத்துமீறல்களும் எல்லை மீறியுள்ளது. அதன் வெட்டவெளிச்சமாக கடந்தாண்டு உருவாகியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020.
சூழலியல் தாக்க மதிப்பீட்டைப் பாரதிய ஜனதா அரசு புதுப்பித்தது அனைத்து தளங்களிலும் பேசுபொருளானது. குடியுரிமை திருத்தச் சட்டம் போல் அதைக் குறிப்பிட்ட சாரார்களின் பிரச்சினையாக மட்டும் பெரும்பான்மைவாதம் ஒதுக்காமல் சமூக வலைத்தளங்கள் வரை வெகுஜனமாக விவாதிக்கப்பட்டது. பாரதிய ஜனதாவின் திருத்தத்திற்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – முதலில் இந்த பெயர் இயற்கையின் அழகையும் அதன் பயன்களையும் மதிப்பிடுகிறதா என்றால் இல்லை. அது இயற்கை வளங்கள் மீதான மூலதனத்தின் ஆதிக்கத்தை மதிப்பிடுகிறது. ஆம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்ற முறைமை நிறுவப்பட்டது என்பதே நவ தாராளமயத்திற்கு பிறகான முதலாளியத்தின் கட்டுக்கடங்காத சுரண்டலை அங்கீகரிக்கத்தான். அப்படிப்பட்ட நடைமுறை இந்தியாவில் உலகமயத்திற்குப் பிறகு 1994ல் அமல்படுத்தப்படுகிறது. ‘சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986’ சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த கருவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் சூழலியல் தொடர்பான அனைத்து ஒழுங்கும் தகர்த்தெரியப்பட்டன. இந்தியாவில் சூழலியல் தாக்க மதிப்பீட்டை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று அழைக்கிறார்கள் சூழலியலாளர்கள். ஏனெனில், இச்சட்டம் எந்த திட்டத்தையும் மறுத்ததில்லை. அனைத்து மோசமான நிறுவனங்களையும் ஆதரித்துள்ளது. மேலும், பெரு முதலாளிகளின் நட்பைப் பேண அரசிற்குச் சிறந்த சந்தர்ப்பமாக இச்சட்டமே அமைகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வடகிழக்கில் முறையற்ற நிலக்கரி சுரங்கங்கள் தொடங்கி தமிழகத்தில் ஸ்டெர்லைட் வரை உதாரணம் கூறலாம்.
பாஜக அரசு இச்சட்டத்தில் உள்ள அனைத்து திரைகளையும் விளக்கி வெளிப்படையாக சூழலியல் வேட்டையை அங்கீகரித்துள்ளது. அதைத்தான் 2020ம் ஆண்டின் சில புதிய விதிகள் நமக்கு உணர்த்துகின்றன. முதலாவதாக, விதி மீறலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவது. இவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஒன்று அரசால் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது. மற்றொன்று சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக தமது தவறை ஒப்புக்கொள்வது. இதில் முக்கிய பிரச்சனை என்னவெனில், மக்கள் புகாரிளிக்கவோ அல்லது வழக்காடுதல் மூலம் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ முடியாது என்பதைப் பக்கம் 29 தெளிவுபடுத்துகிறது. அப்படியிருக்கையில், எந்த திருடன் தான் திருடியதை அவனே ஒப்புக்கொள்வான். ஆதலால், இரண்டாம் வாய்ப்பு என்பதே முதல் வாய்ப்பை நீர்த்துப்போக வைக்க உருவானது.
இஐஏ மூலம் அமலாகும் திட்டங்களுக்கு மக்களிடம் கருத்துக் கோரும் கால அளவு 20 நாட்களாகக் குறைக்கப்பட்டது. இஐஏ 2006ம் ஆண்டு சட்டத்தில் 30 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. பெரும் திட்டங்களை 20 நாட்களுக்குள் உணர்ந்து, அதனால் எதிர்காலத்திற்குப் பாதகம் ஏற்படுமா என்று உள்ளூர் மக்கள் சொல்லிவிட முடியுமா. மேலும் சுற்றுச்சூழல் தாக்க முறைமை 20 நாட்களுக்குள் பெருந்திட்டங்களை மதிப்பிட்டு அனுமதி வழங்குவது எவ்விதத்தில் சாத்தியம் என்பத்திலிருந்தே இதன் லட்சணம் விளங்கும்.
இந்த அறிக்கையிலேயே மிக மலினமாக மக்களை ஏமாற்றும் பகுதியாக பின் மதிப்பீடு அமைகிறது. இதன்படி, சுற்றுச்சூழல் அனுமதி பெறாத திட்டங்களின் பணியைத் தாராளமாக மேற்கொள்ளலாம். பின்னர் சுற்றுச்சூழல் துறையினர் அதனை அறியும் பட்சத்தில், சிறு அபராதம் கட்டிவிட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைத் தொடரலாம். இதற்கிடைப்பட்ட காலத்தில் சூழலியல் எந்தளவுக்கு கேடுறும், மக்கள் எந்தளவிற்கு மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த அரசுக்குக் கவலையில்லை.
ஆரம்பம் காலம் முதலே பார்ப்பனிய மேலாண்மை சூழலியல் கேடுகளைப் பற்றி துளியும் கவலைப்பட்டதில்லை. சிந்துவெளி நாகரிக வீழ்ச்சியை தங்கள் இனத்தின் பெருமையாகவே ரிக் வேதம் போதிக்கிறது. புத்தர் காலத்தில் உயிர்களை கட்டுக்கடங்காத நுகர்வுக்குப் பலியாக்குகிறார்கள் பார்ப்பனர்கள். ராமாயணத்தில் ராவணன் அரக்கனாகவும் வில்லனாகவும் சித்தரிக்கப்படுவதற்கு அவன் காடுகளுக்கு நடுவே நடைபெற்ற பார்ப்பனிய யாகங்களைத் தடுத்தது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அரசாட்சி ஆதரவு, பெருமுதலாளிய அடிவருடித்தனம், லஞ்சங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியது வரை பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்றுவரை தம் நலனை மட்டுமே கருத்தில் கொண்டது பார்ப்பனிய மேலாண்மை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என்பது அப்பேர்பட்ட நுகர்வு மரபின் தொடர்ச்சியே.
அப்துல்லா.மு