1200களில்தான் முகமது கோரியின் படையெடுப்பு நிகழ்கிறது.அவர் டெல்லியை வென்று குத்புதீன் ஐபெக் தலைமையில் அடிமைகள் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார்.பின் துக்ளக்,லோடிக்கள்,முகலாயர்கள் என நீளும் இஸ்லாமியர்களின் சாம்ராஜ்யம் 1857ல் இரண்டாம் பகதூர் ஷாவில் முடிகிறது.கிட்டத்தட்ட 800 ஆண்டுகள்.ஆனால்,இவர்களின் ஆட்சி வட இந்தியாவை மையமாகக் கொண்டு அதிகபட்சம் தெற்கில் தக்காணம் (Deccan) வரையே இருந்தது.இவர்கள் ஆண்ட இதே காலம் தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 900 முதல் 1300 கள் வரை பிற்கால சோழர்களின் ஆட்சியும்,பின் பாண்டியர்கள்,1400 முதல் பிரிட்டிஷ் ஆதிக்கம் வரை நாயக்க மன்னர்களின் ஆட்சியும் இருந்தது.ஆதலால்,இஸ்லாமிய அரசர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு கிடையாது.
ஆனால்,நாம் தமிழரின் வரைவு கோட்பாடு இதற்க்கு நேர்மாறாக உள்ளது.அதாவது,’இஸ்லாமும் கிறிஸ்த்துவமும் தம்மை (தமிழர்களை) ஒவ்வொரு காலத்திலும் ஆளுமை செலுத்தியது என கூறுகிறது.இஸ்லாம் முகமது நபி (ஸல்) அவர்களால் பரவுவதற்கு முன்பாகவே தமிழர்களுக்கும் அரேபியர்களுக்கும் சுமூகமான வணிக உறவிருந்தது.அந்த உறவே பின் தென்னகத்தில் இஸ்லாம் வளருவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.இங்குள்ள அடித்தட்டு மக்களுடன் நெருக்கமான பிணைப்புள்ள ஓர் கீழ்நிலை சமூகமாகவே இஸ்லாமும் அறியப்பட்டது.ஆனால்,இஸ்லாம் ஆளுமை செலுத்தியது என்பதன் மூலம் இங்கிருந்த/இருக்கும் சூழலுக்கு அறவே ஒட்டாத பொய்யை இந்த வரி வெளிப்படுத்துகிறது.
அடுத்து சட்ட பாதுகாப்பு,சொத்துடமை வலு,பன்னாட்டு பின்புலம் கொண்டு இஸ்லாமும் கிறிஸ்துவமும் தனி இனவாதம் செய்கின்றனர் என்கிறார்கள்.இங்குள்ள இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களுக்கு உலக அளவில் தொடர்புள்ளது.அவர்கள் கட்டளைப்படியே இவர்கள் நடக்கிறார்கள்.மதமாற்றத்திற்காக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு இங்குள்ள தமிழர்களை(அதாவது இந்துக்கள்)பணத்தாசை காட்டி ஏமாற்றி மதமாற்றம் போன்றவற்றை செய்கிறார்கள் என்ற இந்துத்துவ பிரச்சாரகர்கள் வைக்க கூடிய அவதூறை இவர்கள் நியாயப்படுத்துவதுப்போல் உள்ளது.வெளிநாட்டுப் பின்புலம் என்பது எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்,இந்திய அளவில் எந்தவித விசாரணையுமின்றி ஒடுக்கப்படும் சிறுபான்மையினரை வலுவான சட்ட பாதுகாப்பு உள்ளவர்கள் என்று எதனடிப்படையில் சொல்கிறார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
இறுதியாக ரொம்ப பாதித்த விஷயம் இவர்களோடு (இஸ்லாமியர்,கிறிஸ்துவர்) நாம் மிகவும் விழிப்புணர்வோடும்,எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.உலகளவிலும் இந்திய அளவிலும் வலுவாக கட்டமைக்கப்பட்ட இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள்,தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை அடியொற்றியே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.இதுவரைக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களால் நிகழ்ந்த கொடுமை என்னவென்று நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை? மேலும் இந்த அறிக்கை முழுவதும் இவர்கள்,நாம் என்று தனியாக பிரித்து தமிழர்களும்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்களும் சம்மந்தமே இல்லாதது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கிருந்து மதமாறிய சிறுபான்மையினரை தமிழர் இல்லையென்றும்,இல்லை நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தால்தான் தமிழர் என்றும்,இந்துக்களே தமிழர் என்பதுபோல் நிறுவ பார்க்கிறது இந்த அறிக்கை.
வரலாறு முழுவதும் தமிழினம் போராடியது பார்ப்பனியத்திடமே. ஆரிய திராவிடப் பகைதான் இந்த மண்ணின் போராட்டமாக இருந்துள்ளது.அவனிற்கு எதிராக இருந்தான் என்பதற்காக நம் அரக்கர்களுக்கு எதிராக பார்ப்பனியம் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் இன்றும் தொடரக்கூடியவை. களப்பிரர்களை ஒடுக்கிய பிறகு பிற்கால பல்லவ,சோழர்களினால் இங்குத் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பனியம் இன்றுவரை தமிழர்களுக்கு எதிராக அனைத்து ஒடுக்குமுறைகளையும் கையாள்கிறது.ஆனால்,அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் முழுக்க முழுக்க இங்கு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களிடம் எச்சரிக்கையாய் இருப்போம் என்பதன் மூலம் யாரின் குரலாக,செயலாக செயல்படுகிறார்கள் சீமானும், அவரது நாம் தமிழர் கட்சியும்? சிறுபான்மையினரை புறம்தள்ளும் நீங்கள் பார்ப்பனர்களை தமிழர் என்கிறீர்கள்.(நம்மளவில்,இது செயலை பொருத்து விவாதத்திற்குரியது).உங்கள் அறிக்கையில் ஏன் ஒரு வார்த்தைக்கூட பார்ப்பனியம் பற்றி மூச்சுவிடவில்லை.திராவிடத்தை வேரறுப்போம் என்னும் நீங்கள் ஆரியம் என்ற ஒன்றை பற்றி மறந்து ஏனோ..சிறுபான்மையிடத்தில் தங்களுக்கு இருப்பது ‘பகை முரண்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி யாருடன் நீங்கள் நட்புமுரண் பாராட்டுகிறீர்கள் சீமான் அவர்களே?
எழுதியவர் : அஜ்மீ