2002 பிப்ரவரி 27 அன்று காலை கோத்ரா ரயில் நிலையத்திலிருந்து சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் கரசேவகர்கள். அந்த தீ விபத்திற்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்றும், ரயில் கொளுத்தப்படுவதற்கு முன்பு முஸ்லிம் வன்முறையாளர்களால் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்றும் சங் பரிவார்கள் குஜராத் முழுவதும் புரளியைப் பரப்பினர்.
இதன் மூலம் கொம்பு சீவப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்த வன்முறை வெறியாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அநேக முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்கானார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் அழித்தொழிக்கப்பட்டன. சற்றேறக்குறைய 1,50,000 முஸ்லிம்கள் தம் வசிப்பிடத்திலிருந்து சிதறடிக்கப்பட்டனர்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கோரக் கதைகள் ஏராளம். இந்துத்துவ பயங்கரவாதிகளால் தன் குடும்பத்தினரை இழந்து, பாலியல் வன்முறைக்கு ஆளானார் பில்கிஸ் பானு. வயிற்றைக் கிழித்து கருவை வெளியே எடுத்து சிசு, தாய் என எரித்துக் கொல்லப்பட்டார் ஒன்பது மாத கர்ப்பிணி கவுசர் பானு. காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்த நிலையிலும் அதிகார மட்டத்திலிருந்து எந்த உதவிகளும் கிடைக்காமல், இரும்புச் சங்கிலியைக் கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு துண்டுதுண்டாக வெட்டி நெருப்பில் போடப்பட்டார் இஹ்ஸான் ஜாஃப்ரி.
இந்த இனப்படுகொலை முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதற்கு ஒரு சான்று, வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளின் கைகளிலும் முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட விவரங்கள், அவர்களுடைய சொத்துமதிப்பு ஆகியவை அடங்கிய ஆவணங்கள் இருந்தன என்பது.
பாதிப்புக்கு உள்ளானோருக்கு நீதி கிடைத்ததா?
2011ல் இந்த இனப்படுகொலை வழக்கில் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு எதிரான நேரடி ஆதாரங்களைச் சமர்ப்பித்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணிநீக்கம் செய்தார். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்; குஜராத் இனப்படுகொலைக்கு நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று தன் கணவரைப் பறிகொடுத்த 69 வயதான ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கில் மோடிக்கு உச்ச நீதிமன்றம் க்ளீன் சிட் வழங்கியது; இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணைநின்ற டீஸ்டா, ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டது. என இப்படியாக மேன்மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டன.
சமீபத்தில் இந்த குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது. இந்த சங் பரிவார சக்திகள் தாங்கள் கடந்த காலத்தில் செய்த இனப்படுகொலை குறித்த உண்மைகளை வெளியே வரவிடாமல் தடை செய்தாலும், ஆறாத வடுவாகப் பதிந்த எங்களின் நினைவுகளுக்கு உங்களால் தடை போட முடியாது.