• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»கொரோனா வைரஸும், மோடி அரசும்!
கட்டுரைகள்

கொரோனா வைரஸும், மோடி அரசும்!

AdminBy AdminMarch 29, 2020Updated:May 30, 2023190 Comments4 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவால் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரிதவித்து நிற்கின்றனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள். வேலையில்லை; வருமானம் இல்லை; ஊருக்கு செல்லலாம் என்றால் ரயில், பஸ்.. எதுவும் இல்லை. வேறு வழியின்றி, பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால், வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே கிளம்பிவிட்டனர். அதுவும் தனியாக அல்ல, குழந்தைகளை தூக்கிக்கொண்டு, பைகளை சுமந்துகொண்டு செல்கின்றனர்.

டெல்லி, நொய்டா, ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகிய இடங்களில் இருந்து இப்படி மக்கள் கூட்டம், கூட்டமாக கிளம்பிச் செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கோ 150 கி.மீ., 200 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஊரை நோக்கி தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கின்றனர். உறக்கமில்லை; உணவில்லை. கை குழந்தையை தூக்கிக்கொண்டு எவ்வளவு நேரம் நடக்க முடியும்? ஆறு, ஏழு வயதான சிறுவர்களை தூக்கவும் முடியாது. அவர்கள் எவ்வளவு தூரம் நடப்பார்கள்?

இவர்களின் துயரம் கேள்விப்பட்டு, சில இடங்களில் சாலையோரங்களில் மக்கள் குடங்களில் தண்ணீரை வைத்து ஊற்றுகின்றனர். சில இடங்களில் வாழைப்பழங்கள் வழங்கப்படும் வீடியோக்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், இந்த அவலம் ஒரு திசையில், ஓர் இடத்தில் நடக்கவில்லை. டெல்லியில் இருந்து உ.பி.க்கு, உ.பி.யின் ஒரு நகரத்தில் இருந்து சிறு நகரங்களுக்கு, ராஜஸ்தான், பிகார், ஒரிஸ்ஸா மாநில நகரங்களை நோக்கி என்று… எல்லா சாலைகளிலும் தொழிலாளர் கூட்டம் சாரை சாரையாக ஓர் இடத்தில் இருந்து கிளம்பி தங்கள் ஊர்களுக்குச் செல்கிறது.

’இவர்கள் ஏன் போக வேண்டும்? வேலை பார்க்கும் இடத்திலேயே இருக்க வேண்டியதானே?’ என்று கேட்பது எளிது. யதார்த்தத்தில் இவர்கள் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள். ஒவ்வொரு நாளும் வேலை பார்த்தால்தான் பிழைப்பு ஓடும். இன்னும் 21 நாட்களுக்கு வேலை இல்லை; அதன்பிறகு எப்போது சரியாகும் என்றும் தெரியாது. இப்படி ஒரு நிச்சயமற்ற தன்மையில் ஒரு பெருநகரத்தில் அவர்களால் எப்படி வாழ முடியும்? வருமானத்துக்கு எங்கே செல்வார்கள்? மேலும், இவர்களுக்கு வேலை வழங்கிய நபர்களே, ‘ஊருக்கு கிளம்பி விடுங்கள். நிலைமை சரியானதும் வந்துகொள்ளலாம்’ என்றுதான் அறிவுறுத்தி உள்ளனர்.

‘’நான் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். பீஸ் ரேட்டுக்கு துணிகள் தைத்து கொடுக்கிறேன். நாள் கூலியோ; வாரக் கூலியோ; மாத சம்பளமோ கிடையாது. ஒரு பீஸ் தைத்தால், இவ்வளவு ரூபாய் என்று கணக்கு. இப்போது நிறுவனத்தை மூடிவிட்டார்கள். வேலை இல்லை. இந்த நகரத்தில் என்னால் வாடகை கொடுக்க முடியாது. நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சொந்த கிராமத்திற்கு கிளம்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.’’ என்கிறார் நீரஜ்குமார். மேற்கு உத்திரபிரதேசத்தில் உள்ள புடான் என்ற ஊருக்கு டெல்லியில் இருந்து நடந்து செல்கிறார் இவர்.

40 தொழிலாளர்களைக் கொண்ட ஒரு குழுவினர், டெல்லியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் துன்கர்பூருக்கு நடைபயணமாக கிளம்பிச் செல்கின்றனர். இது சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் தூரம். ’’வேலை இல்லை. கையில் காசு இல்லை. கடைகள் இல்லை. உணவு இல்லை. இங்கு இருந்து என்ன செய்வது? அதுதான் கிளம்பிவிட்டோம்..’’ என்கிறார்கள்.

உண்மையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லி கல்வி வளாகங்களிலும், பின்னர் வீதிகளிலும்.. பாஜக சார்பு இந்துத்துவ குண்டர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளின்போதே, இவர்களின் வேலைக்கு சிக்கல் வந்துவிட்டது. பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து மாணவர்களை தாக்கியது, துப்பாக்கிகளை வைத்து மிரட்டியது, குண்டு வீசியது, இஸ்லாமியர் குடியிருப்புகளை கொழுத்தியது… என்று நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போதே பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். எனினும் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர். கொரோனா வைரஸ் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

இவை அனைத்தையும் மீறி, இருந்த இடத்திலேயே இருக்கலாம் என்றால், இவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு வீடு என்று கருதத்தக்க இடங்களில் வாழ்பவர்கள் இல்லை. சின்னஞ்சிறிய ஷெட்களில் ஒண்டியிருப்போர். வரப்போகும் ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு, உஷாராக எல்லா பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு விவரமோ, வசதியோ அற்றவர்கள்.

பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பு, இத்தகைய மக்களை கருத்தில்கொண்டு, குறைந்தபட்சம் 24 மணி நேரம் அவகாசம் அளித்திருக்க வேண்டும். இரவு 8 மணிக்கு உரையாற்றி ’இன்று இரவில் இருந்து ஊரடங்கு’ என்றால், இவர்கள் எங்கே போவார்கள்? கொரோனாவால் செத்தால்தான் பிரச்னை, பட்டினியால் செத்தால் பிரச்னையில்லையா?
குறைந்தபட்சம் இவர்களுக்கு உரிய தங்குமிடங்கள், உணவு வசதிக்கான ஏற்பாடுகள் அல்லது போக்குவரத்து வசதிகள் எதையும் கருத்தில் கொள்ளவே இல்லை. இதனால்தான், வட இந்திய நெடுஞ்சாலைகள் எங்கும் மக்கள் இப்போது ஏதோ புலம் பெயர்ந்து அகதிகளாக செல்வது போல, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, கையில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு நடந்துசெல்கின்றனர்.

மோடியின் அறிவிப்பு வந்த உடனேயே, இதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குவிந்ததைக் கண்டோம். ‘இப்படி கூட்டமாக கூடி நின்றால் இவர்களின் வழியே எளிதில் கொரோனா பரவும்’ என்ற அச்சம் எழுந்தது ஒரு பக்கம் என்றாலும், அவர்கள் அனைவரும் சென்னையில் ஆங்காங்கே உள்ள சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அரசால் பாதுகாக்கப்படுகின்றனர்; உணவு வழங்கப்படுகிறது. கேரளாவிலும், இதேபோன்று வெளிமாநில தொழிலாளர்கள் உணவும் தங்குமிடமும் வழங்கி பாதுகாக்கப்படுகின்றனர். மோடிக்கு வாக்களிக்காத தமிழ்நாடும், கேரளாவும் வட இந்திய தொழிலாளர்களை பாதுகாக்கிறது. ஆனால், தனக்கு வாக்களித்த மாநில மக்களை இப்படி அவலத்திலும் அவலமாக சாகடிக்கிறது மோடி அரசு.

நான்கு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் உத்திரப்பிரதேச அரசு இந்தத் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட நகரங்களில் இருந்து மட்டும் செல்லும் இந்த பேருந்துகளிலும் முழுமையான கட்டணம் உண்டு. இதில் ஏறுவதற்கும் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை காத்திருக்கிறது. 50 பேர் செல்லவேண்டிய பேருந்தில் 150 பேர் செல்லும் அளவுக்கு கூட்ட நெரிசல். நாட்டுக்கே சோஷியல் டிஸ்டன்ஸிங் என்று வகுப்பு எடுக்கும் அரசு, இவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கூட முறையாக செய்யவில்லை.

கிராமங்களில் எந்த வேலை வாய்ப்பும் இல்லாமல், சாதி கொடுமைகளுக்கு அஞ்சி, மனதில் எத்தனையோ நம்பிக்கைகளுடன் நகரங்களை நோக்கி வந்தவர்கள் இவர்கள். அந்த நகரம் இதுவரைக்கும் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. நாளொன்றுக்கு 10 மணிநேரம் 12 மணிநேரம் உழைத்தால் 400 ரூபாய், 500 ரூபாய் ஊதியம் தந்தது. மாதம் முழுமைக்கும் பணிபுரிந்தால் அதிகபட்சம் 15 ஆயிரம். அந்த குறைந்த ஊதியமும் இப்போது இல்லாமல், மறுபடியும் வெறுங்கையோடு கலைந்த கனவுகளுடன் உயிர் அச்சத்துடன் கிராமங்களை நோக்கி செல்கின்றனர்.

-பாரதி தம்பி

Loading

144 Corona Migrant people Modi Government
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.