பா.ரஞ்சித்தின் அரசியல் திரைப்பட வரிசையில் இம்முறை முற்போக்குத்தனமான காதலின் அரசியலைப் பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. ரொமான்டிக் மியூசிக்கல் வகையான திரை மொழியில் கலப்பு காதலை நாடகக் காதல் என கொச்சைப்படுத்தி சினிமா வழியாக பிரச்சாரம் செய்ய தொடங்கப்பட்டிருக்கும் இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வாயிலாக.
ஆணவக் கொலை, பீப் (உணவு அரசியல்), கலப்புத் திருமணம், வாசிப்பு எவ்வாறு ஒரு மனிதனை செதுக்குகிறது, தீண்டாமையின் வலி, உயர்ந்த ஜாதியினராக தங்களை கருதுபவர்களின் சாதிய வெறி போன்ற விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பசுமரத்தாணி அடித்தது போல பதிவு செய்துள்ள பா.ரஞ்சித்திற்கு நன்றி!!!
புதுச்சேரியை மையமாகக் கொண்ட முற்போக்கு அரசியலை பேசும் ஒரு நாடக குழுவினர் தங்களின் காதலின் அரசியல் குறித்தான நாடகத்தை அரங்கேற்றினார்களா? இல்லையா?
படத்தின் ஆரம்பத்திலேயே பிரேக்கப் ஆகும் முக்கிய கதாபாத்திரங்களான ரெனே மற்றும் இனியனின் காதல் கடைசியில் என்னவானது இந்தப் படத்தின் ஒரு வரிக்கதை.
தமிழ் (எ) ரேனே மற்றும் இனியன் (காளிதாஸ்)-ன் பிரேக்-அப்பில் தான் இத் திரைப்படமே தொடங்குகிறது. இவர்களின் கதாபாத்திரம் பொது சமூகத்தின் பிற்போக்குத்தனமான அரசியல் பார்வை கொண்டவராகவும் சாதிப் பெருமை கொண்டவராகவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் அர்ஜூன் (கலையரசன்) கதாபாத்திரம், கலப்பு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் நாடகக் குழுவின் இயக்குனரான சபீர் எனும் கதாபாத்திரம், ஓரின செயற்கை ஈர்ப்பாளர்களின் நான்கு கதாபாத்திரங்கள் திருமணம் ஆன ஒரு திருநங்கை மற்றும் அவருடைய கணவரின் கதாபாத்திரங்கள் மற்றும் பல கதாபாத்திரங்களின் கிளை கதைகளின் மூலம் இத்திரைப்படத்தின் மையக்கதை நகர்கிறது.
சளிப்படைய வைக்காத திரைக்கதையோட்டம், வண்ணமயமான ஒளிப்பதிவு, இரைச்சல் இல்லாத பின்னணி இசை, கதாபாத்திரங்களுக்கான பக்காவான நடிகர் தேர்வு, வைபான பாடல்கள், கூர்மையான வசனங்கள், பா.ரஞ்சித்தின் சிக்னேச்சரான அம்பேத்கர் மற்றும் பௌத்த குறியீடுகள் மற்றும் கலையரசனின் அர்ஜுன் கதாபாத்திரம் போன்றவை இத்திரைப்படத்தின் மாபெரும் பாசிட்டிவ்கலாக அமைகின்றன.
இப்படி இவ்வளவு பாசிட்டிவ் களும் தெளிந்த பாலை போல் இருக்கும் இத்திரைப்படத்தில் ஒரு குப்பி ஸ்லோ பாய்சனும் கலந்திருப்பது என்பதானது மறுக்க முடியாததே.
விபச்சாரத்தை நார்மலைஸ் செய்யும் லிவிங்-டு-கெதர் வாழ்வியல் முறையை சரியானதென சித்தரித்துள்ளது (மணிரத்தினம் தமிழ் சினிமாவில் மணியடித்து துவங்கி வைத்த இந்த மாடலை பா ரஞ்சித் தூக்கிப்பிடித்து துவங்கியுள்ளது ஏன் என்று தெரியவில்லை), உலக வரலாற்றில் பெருமளவில் சமூக சீர்கேட்ட ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்துள்ளது மற்றும் நார்மலைஸ் செய்துள்ளது போன்ற விஷயங்களை முற்போக்கு பேசுகின்றேன் எனும் போர்வையில் பா.ரஞ்சித் பேசியுள்ள விஷயங்கள் இவர் இத்திரைப்படத்திலேயே பேசியுள்ள பிற சமூகத்திற்கு தேவையான நற்கருத்துக்களையும் சேர்த்து மழுங்கடித்து விடுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் விபச்சாரம் மற்றும் லிவிங்-டு-கெதர் போன்ற வாழ்வியல் முறைகளின் அழகியலை மட்டும் பேசிவிட்டு அதில் இருக்கும் எதிர்மறை பக்கங்களான மேற்கத்திய சமூகத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றை பெற்றோர் முறை, எண்ணிலடங்கா கருக்கலைப்புகள், இதுபோன்ற பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியிலான நோய்கள் போன்றவற்றை குறித்து ஏதுமே பேசாமல் சென்றிருகிறார் ரஞ்சித். மேலும் இது போன்ற கலாச்சாரம் நல்லது தானே! ஒரு பரிமாணமுடைய பார்வையை வெகுஜன மக்களின் மனதில் பதிய வைக்கும் அபாயமும் இருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படம் பார்வையாளர்களின் பொறுமையை பல இடங்களில் சோதிக்கிறது. பல காட்சிகளில் (அதிலும் குறிப்பாக காதல்னா என்னன்னு தெரியுமா? என்று ஆரம்பிக்கும்) அடுக்கடுக்கான முற்போக்கு முந்திரிக்கொட்டைத்தனமான கருத்துக்களை குறித்த கலந்துரையாடல் காட்சிகள் பார்வையாளர்களாகிய நமக்கு திரைப்படத்திற்கு தான் வந்திருக்கின்றோமா? அல்லது ஏதாவது நூலகத்தின் வாசகர் வட்ட நிகழ்விற்கு வந்திருக்கின்றோமா? எனும் சந்தேகத்தையே ஏற்படுத்திவிடுகிறது. இப்படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் வழங்கப்படாதது படத்தின் மாபெரும் சருக்களாக அமைந்துள்ளது.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இதுபோன்ற சமூகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய கருத்தியலை கட்டமைப்பதற்கு பதிலாக அவரின் வழக்கமான பாணியிலான பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் வலிகளையும் வாழ்வியலையும் இன்னும் கூட இலை மறைவு காய் மறைவில்லாமல் தன்னுடைய திரைப்படங்களின் வாயிலாக தெரிவிக்கலாம் என்பதே பார்வையாளர்களின் வெகுவான கருத்தாக இருக்கின்றது.
ஆக மொத்தத்தில் இந்த நட்சத்திரம் நகர்கின்றது திரைப்படம் தவறான திசையில் நகர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹபிப் – ரஹ்மத்துல்லா (எழுத்தாளர்கள்)
சகோதரன் ஆசிரியர் குழு