மீண்டும் ஃபலஸ்தீன் மீது யூத இஸ்ரேலிய அரசு குண்டு மலை பொழிவித்து ஃபலஸ்தீன சகோதர, சகோதரிகளை வஞ்சித்துள்ளது. தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளான ஐநா சபை, சமூக ஆர்வலர்கள், சமூக நீதிக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் எல்லாம் எங்கே என்ற கேள்வி இப்போதும் மறவாமல் எழுகிறது. திட்டமிட்டே ஒரு சமூகத்தின் மீது அரங்கேற்றப்படும் வன்முறைகள், அடக்குமுறைகள் எல்லாவற்றையும்
வேடிக்கைப் பார்த்து கடக்கும் இந்த மனோபாவத்தைப் பார்க்கின்ற வேளையில் நீதிக்கானப் போராட்டத்தில் பாராபட்சம் காட்டுபவர்கள்தான் அடிப்படைவாதிகள், வர்க்கவாதிகள், சாதியவாதிகள் என்ற முடிவிற்கே வர மனம் எத்தனிக்கிறது.
நீங்கள் பேசும் மனித ஜீவ அபிமானங்கள் யாருக்கானது? நீங்கள் பேசும் சமூகநீதி யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரமும், உரிமைகளும் யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரம், உரிமை இவையெல்லாம் நீங்கள் சார்ந்த சமூகத்துக்கானதுதான் என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், நீங்களும் ‘அநீதியாளர்களின் பங்காளிகள்’ என்பதுதான் திட்டவட்டமான உண்மை.
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் குற்றவாளிகள் நிரூபணம் ஆவதற்கு முன்னரே ‘இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இது’ என கண்டனங்களையும், எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்யும் செக்யூலர்களையும் ஃபலஸ்தீன் மக்களின் மீதான தாக்குதலுக்கு எவ்வித கண்டனத்தையும் சிறு பதிவாகக்கூட வெளிப்படுத்தாமல் உறங்கிக் கிடக்கும் பொதுமனமும்தான் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறது. உங்களின் நீதி குறித்த கண்ணோட்டத்தை மீள் பரிசீலனை செய்து தீவிரவாத இஸ்ரேலிய அரசுக்கு எதிராகவும் கண்டனக் குரல்களையும் எழுப்புங்கள்!