கொரானாவிற்கு பிந்தைய பேரிடர் மேலாண்மை குறித்த முதல் கட்டுரையில், “கிராமத்தை தத்தெடுத்தல்” என்னும் யோசனை தீர்வுகளில் ஒன்றாக விவாதித்திக்கப்பட்டது. இது வெறும் சமூக சேவை என்னும் அளவில் சொல்லபடவில்லை; மாறாக கிராமத்தில் வாழ்வோரின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், சிறிய அளவிலான தொழிற்சாலைகளை நிறுவுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பெருக்கத்திற்கு பங்களிப்பு செய்தல் என்னும் விரிவான பொருளில் சொல்லப்பட்டது.
Economic and Political Weekly (EPW) இதழில் பேரா.அருண்குமார் எழுதிய கட்டுரை ஒன்றில் முக்கியமான பிரச்சனை ஒன்றை அடையாளப்படுத்தி இருந்தார்.
“பெரிய அல்லது சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் தான் உலகம் முழுவதும் உற்பத்தி செயற்பாடுகள் நடைப்பெறுகின்றன.
ஆனால் இந்தியாவிலோ நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளிலும் குடிசை தொழில்களும்/முறைசாரா துறைகளிலும் உற்பத்தி நடைப்பெறுகின்றது. இவற்றில் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளில் மூலதனமும், உற்பத்தி இயந்திரங்களும்(machines) அதிகம் இருக்கும். மற்ற தொழிற்சாலைகளுக்கு இத்தகைய அனுகூலங்கள் இருப்பதில்லை. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் நடப்பு மூலதனம்(Working Capital) அவசியம். தொழில் துவங்கும் முன்பு தொழிற்சாலை கட்டுதல், எந்திரங்கள் வாங்குவதல் போன்ற ஏனைய தேவைகளுக்காக வங்கிகளில் கடன் பெறப்படுகின்றன. சிறு குறு தொழிற்சாலைகள் வங்கிகளில் கடன் கிடைக்காத சூழலில் தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றன அல்லது தங்களது சேமிப்பை முடக்குகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தொழில்கள் கடன் சுமையுடன் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. கடனுக்கான வட்டியை விற்பனை மூலமாக ஈட்டப்படும் வருவாயிலிருந்து கட்ட வேண்டும். ஒரு வேளை விற்பனை நின்றுபோனால் வட்டியையோ அசல் தொகையையோ கட்டுவது சிரமமாகி விடும், தொடர்ச்சியாக தொழிலே அழிவை சந்திக்கும். இப்படிப்பட்ட கடன்கள் வங்கிகளில் வாராக்கடன்களாக மாறுகின்றன. உற்பத்தி தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்து விற்பனை மட்டும் நின்றால், விற்பனை இன்றி உற்பத்தி செய்யப்பட்ட பொருள் குவிந்துக்கொண்டே இருக்கும். உற்பத்தி செயல்பாடுகளுக்கான நடப்பு மூலதனம் அதிகம் தேவைப்படும். அதற்கு அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இறுதியில் இழப்பு அதிகமாகும் போது தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தும். இதைத்தான் நாம் பொதுமுடக்கத்தின் போது பார்த்தோம்.
இன்று நாம் பல தொழில்கள் மூடப்பட்டு வருவதை காண்கிறோம், தொழிற்சாலைகள் வங்கிகளிடம் பெற்ற கடனுக்கான வட்டியை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லை; மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய GST பங்கீட்டை தரும் நிலையில் இல்லை. எதிர்ப்பு சக்தியின்றி ஒட்டுமொத்த நிதி அமைப்பும் கொரோனா காலத்தில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் தேதி ரிசர்வ் வங்கி தனது தொழில் அவசர திட்டத்தின்(Business Contingency Plan -BCP) ஒரு பகுதியாக போர் அறையை(War room) ஏற்படுத்தியது. இந்த BCP திட்டம், இதற்கு முன்னர் எந்த நாட்டு மத்திய வங்கியும் செயல்படுத்தாததும், நமது வரலாற்றில் முதலாவதும் ஆகும். சேதங்கள் அதிகம் கண்ட இரண்டாம் உலகப்போரில் கூட இப்படி ஒரு திட்டம் துவங்கப்படவில்லை என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறீயீடு GDP 23.9% சதவீதம் சரிந்திருக்கிறது. நிலைமை இன்னும் மோசமாகும் என பல வல்லுனர்களும் கருத்துரைத்து இருக்கின்றனர். இத்தைகைய நெருக்கடிச்சூழலில் போர் அறை வல்லுனர்களும், RBI அதிகாரிகளும் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜம் பரிந்துரைத்த வட்டியில்லா வங்கி குறித்து ஏன் யோசிக்கக்கூடாது?
கடந்த 2017-ம் ஆண்டு P.கோஷ் அவர்கள் “DailyO” தளத்தில் எழுதிய விருவிருப்பான கட்டுரையிலிருந்து கீழே உள்ளவை எடுக்கப்பட்டது.
ரகுராம் ராஜன் பரிந்துரைத்த வட்டியில்லா வங்கி முறை ஆர்.பி.ஐ-யினால் கைவிடப்பட்டுவிட்டது. இம்முறை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பயனளிக்கக் கூடியதல்ல. மாறாக அனைத்து தனி நபர்கள், பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசுக்கும் பயனளிக்க கூடியது. இஸ்லாமிய வங்கி முறை பொருளாதாரத்தில் எப்படி நல்ல பலன்களை அளிக்கிறது என்பதை வளர்ந்த நாடுகள் மற்றும் இஸ்லாமல்லாத நாடுகளின் உதாரணங்களின் மூலம் விளக்குகிறார் கோஷ். ” அனைத்து வகையான வங்கி செயல்பாடுகளையும் இஸ்லாமிய சட்டம் அங்கீகரிப்பதில்லை. இஸ்லாமிற்கு முரணான வட்டியின் அடிப்படையில் செயல்படும் வங்கியில் இணைந்து செயல்பட இஸ்லாமிய சட்டத்தில்(ஷரிஆ) முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. எனவே, ஷரிஆவிற்கு இணக்கமான வங்கிகள் ஷரிஆ அங்கீகரித்தவற்றில் மட்டுமே முதலீடு செய்யும். மேலும் எவ்வித வட்டியும் வசூலிக்காமல் தொழிலில் வரும் இலாப-நஷ்டத்தை தம்மிடம் கணக்கு வைத்து இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளும். வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையின் படி, இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்கத்தில் உயர்ந்துள்ளது, அதாவது 2003-ம் ஆண்டு 200 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பு 2013ம் ஆண்டில் 1.8 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வளர்ச்சி என்பது வெறும் முஸ்லிம் நாடுகளில் மட்டும் ஏற்பட்டது அல்ல மாறாக சீனா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளில் இயங்கும் இஸ்லாமிய வங்கிகளிலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு, நாம் நமது வங்கி முறையை மீளாய்வு செய்ய வேண்டும். நம்மிடம் இருக்கும் அதிகமான மனித வளத்தையும், சிறந்த நிர்வாக திறனையும் கொண்டு உலகத்திற்கு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான மாற்று வழிகளை காண்பிக்க வேண்டும். இந்தியாவில் வட்டியில்லா வங்கி முறை குறித்து அறிமுகம் செய்தவரும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த களத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய நிதியத்திற்கான இந்திய மையத்தின் பொது செயலாளர் திரு. அப்துல் ரகீப், திட்டக்குழு துணைத்தலைவர், ஆர்.பி.ஐ கவர்னர் மற்றும் துனை கவர்னர் ஆகியோரிடமும் வட்டியில்லா வங்கி முறையை அறிமுகம் செய்தார். வங்கி ஒழுங்குமுறை திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமாக கொண்டு வருவதற்கும், தற்போது இயங்கும் வங்கிகளில் வட்டியில்லா சேவைக்கான வசதி ஏற்படுத்தவும் பரிந்துரைத்தார். இருப்பினும் 2014-ம் ஆண்டிற்கு பின் வட்டியில்லா வங்கி குறித்த நடவடிக்கைகளை அனைத்தையும் ஆர்.பி.ஐ கைவிட்டுவிட்டது.
எவ்வித விளக்கமும், பொருளாதாரம் சார்ந்த எந்தவித வலுவான ஆதாரமும் அளிக்காமல்,தனது நிலைப்பாட்டை ஆர்.பி.ஐ மாற்றியிருப்பது வெறும் அரசியல் நடவடிக்கை மட்டுமே. சிரமத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் பில்லியன் டாலர்கள் மதிப்புடைய முதலீடும், வெளிநாடுகளில் ஈட்டப்பட்ட பணமும் வந்திருக்கக்கூடும். ஆனால் அவற்றை நாம் இழந்துள்ளோம். தேசம் முழுவதும் இஸ்லாமிய வங்கியை அனுமதித்தல், தற்போது இயங்கும் முதன்மை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வட்டியில்லா சேவையை துவக்குதல் போன்ற நடவடிக்கைகள் மோடி அரசின் சிறுபன்மையினர் எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக நிராசையாகியுள்ளது என்று முடிக்கிறார் P.கோஷ்.
தற்போதைய நெருக்கடி சூழலில் வெறுப்பு அரசியல் செய்வதை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை காட்டுவதே அவசியம். நாம் கூட்டாச்சி தத்துவத்தை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும், தொழிலதிபர்களின் முதலாளித்துவ ஆதிக்கம் இங்கு ஏழைகளை மேலும் ஏழைகளாகவே மாற்றுகிறது. பெரும்பாலான உற்பத்தி பொருட்கள் ஒரே நிறுவனத்தின் பொருட்களாகவே இருக்கின்றன, அவையே நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. சரக்கை எடுத்து செல்லுதல், விளம்பரப்படுத்துதல், கூடுதலாக தற்போது GST ஆகியவை சேர்ந்து பொருட்களின் விலையை அதிகரித்து நுகர்வோருக்கு சுமையாக மாற்றிவிடுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு நாம் உள்ளூர் தொழில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும், பிரதமரும் கூட இந்த யோசனைக்கு வலுச்சேர்ப்பது போல “உள்ளூர் தொழில்களை பிரபலப்படுத்துவோம்” (Vocal for Local) என்று கூறியுள்ளார்.
“கிராமத்தை தத்தெடுத்தல்” என்ற யோசனையை இப்படி கற்பனை செய்து பாருங்கள். 500 குடும்பங்கள் வாழக்கூடிய கிராமத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அருகிலேயே உற்பத்தி செய்கிறோம். இந்த குடும்பங்கள் அவற்றுக்கான வாடிக்கையாளர்களாக மாறுகின்றனர். வாடிக்கையாளர்கள் இருப்பதால் தொடர்ச்சியாக விற்பனை இருக்கக்கூடும். மேலும் இந்த யோசனை புதிய தொழில் துவங்குவதற்கும், சுய உதவிக்குழுக்கள் உருவாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகை செய்யும். சோப்பு, பிஸ்கட், ஆட்டா மாவு, மிளகாய் தூள் போன்ற எதையும் குறைந்த முதலீட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உற்பத்தி செய்ய முடியும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களுடைய பகுதிகளில் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும். இன்று வேண்டுமானால் அவர்கள் சிறிய தொழில்முனைவோர்களாக இருக்கலாம், ஆனால் வருங்காலத்தில் அவர்கள் தான் தொழிலதிபர்கள். இந்த திட்டத்தின் மூலம் முகவர்கள், இடைத்தரகர்கள், போக்குவரத்து மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்கான செலவீனங்கள் பெருமளவில் குறைக்கப்படும். அரசின் மீது நம்பிக்கை இழந்திருக்கும் இன்றைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதாரத்தில் பங்காற்றுவதற்கும் முன்வரவேண்டும்.
-சையது அஸாருத்தீன்-அகில இந்திய பொது செயலாளர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு
தமிழில்- முஹம்மது அஸ்லம்