கோட்டை கலீம் – எழுத்தாளர்
உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான்
மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.
– அபுல் கலாம் ஆசாத்
ஹிஜாப் விவகாரம் எதிர்பார்ப்பின் படியே முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய நியாயத்தராசின் முள் முஸ்லிம்களின் விலாவின் பக்கம் சரிந்துவிட்டது. விலாநோக சிரிக்க வைப்பதாகத்தான் கேள்விபட்டிருப்போம். இந்திய நீதி அமைப்புகள் தமது நாட்டின் முஸ்லிம் குடிகளை விலாநோக அழவைப்பதற்கு சளைக்காமல் உழைக்கின்றன. ஏகபோக உரிமையை நிலைநாட்ட ஒன்றிய அரசு ஒற்றை வரிகளை விதித்து தன் கோரமுகத்தைக் காட்டுகிறது என்றால், ஒற்றை கலாச்சாரத்தில் தோய்த்தெடுத்த வரிகளை அவ்வப்போது அள்ளிவீசி அழகாக முடிச்சவிழ்க்கும் தன் கரிமுகத்தைக் காட்ட நீதிமன்றங்கள் தவறுவதில்லை. அரசு அமைவனங்களுக்கு உண்மையில் முஸ்லிம் பெண்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுடைய கல்வி, கேள்வி, பொருளாதார சுதந்திரம் ஆகியவை குறித்து இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளை – அவற்றிற்கு எதிராக இருக்கும் சமுதாய சூழலை விவாதப் பொருள் ஆக்கலாம். சமுதாயத்தின் உள்ளும் புறமுமாக தம்மீது தொடுக்கப்படும் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து ஐஐடியை எட்டிப் பிடிக்கும் ஒரு பெண், மர்மமான முறையில் சாகிறாள். அது குறித்த விசாரணை அறிக்கை ஏன் வெளிவரவில்லை என்று இந்த நீதிமன்றங்கள் கேட்டிருக்கலாம். எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் சில பெண்கள் உட்பட நிறைய முஸ்லிம்கள் ஐஏஎஸ் தேர்வாகிறார்கள். அவர்கள் ‘ஐஏஎஸ் ஜிஹாதிகள்‘ என்று முத்திரைக் குத்தப்பட்டு நேர்முகத் தேர்வில் ஓரங்கட்டப்படும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஒலிக்கின்றன. ஒடுக்கப்படும் சமூகம் ஒன்றின் உரிமைபறிப்புகள் குறித்தெல்லாம் தானே முன்வந்து விசாரிப்பது தானே சனநாயக அமைப்பில் குடிமை நீதியாக இருக்க முடியும்? ஒரு சட்டப் பிரஜையின் உடை, உணவு என வாழ்வியல் நடவடிக்கைகளை குற்றச் செயல்களாக்கி குளிர்காய்வதும், நீண்ட நெடிய வரலாற்று பின்னணி கொண்ட ஒரு பழக்கத்தை முன்வைத்து அவனது இருப்பையே சங்கடத்திற்கு உள்ளாக்க கும்பல் சேர்ந்து வம்பிழுப்பதற்கும் ஏன் நீதி அமைப்புகள் தமது பொன்னான நேரத்தை வீணடிக்கினறன? மரத்தடி பஞ்சாயத்துகள் இதைவிட உருப்படியான விவகாரங்களைப் பேசித் தீா்க்கின்றனவே! இப்படி ஒரு எண்ணத்துடன் இத்தேசத்தின் ரத, கஜ, துரக பதாதிகள் தங்கள் ஆயுதங்களைக் கூர்தீட்டி சொந்த மக்களுக்கு முன் நீட்டிக் கொண்டிருந்தால் எந்த சமூகமும் இந்த அரச வல்லாதிக்கத்தை விட்டுத் தப்பிக்க முடியாது. இன்று இவர்.. நாளை நீ என்ற இடுகாட்டு வாசகத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வீட்டுச் சுவற்றிலும் பொறித்து வைத்துவிடலாம்.
ராணுவ ரகசிய நடவடிக்கை என்ற போர்வையில் துல்லிய தாக்குதல் நடத்தி விட்டதாக சாகசக் கதையாடுவதைப்போல் மக்களின் பண்பாட்டை, கலாச்சார மதிப்பீடுகளை, வாழ்வியல் முறைகளை அவ்வளவு எளிதில் நசுக்கி நம் விருப்பம்போல் மாற்றிவிட்டதாக அரசு மார்தட்ட முடியாது. இருந்தாலும் “எங்கள் விருப்பத்துக்கு உண்ண, உடுக்க, உறைய கூட விட மாட்டீர்களோ” என்கிற கூக்குரலோடு தான் முஸ்லிம்களின் அன்றாட பொழுது விடிகிறது. எப்போதும் நைந்து இற்றுப்போன கொக்கிகளில் (Tenterhooks) அவர்களைத் தொங்க விடுவதில் தான் இன்பம் காண்கிறார்கள். முஸ்லிம்களை முன்னேற விடாமல் கொதிப்பிலேயே வைத்துக் கொள்வதுதான் உங்களின் பொதுவான குடிமை திட்டம், நீதி, நியாயமாக இருக்கினறன. இவை எதேச்சையானதா? நிச்சயமாக இல்லை. இந்திய சிறுபான்மையினரின் இருத்தலியல் பிரச்சினையை கருத்துருவாக்க அடியாட்களின் கருவியாக அரசே கைமாற்றி விடுகிறது. இதன் மூலம் முஸ்லிம் சமூக கொதிநிலையை துருவ அரசியல் திரட்சிக்கான ஆயுதமாக தொடர்ந்து பயன்படுத்தி தனது பேரிச்சைகளைத் தணித்துக் கொள்கிறது. இந்திய இஸ்லாமியன் என்பவன் அதிகார பீடங்களுக்கு ஒரு தேவதாரு (கடவுளின் மரம்). பணம் காய்ச்சி மரம் மாதிரி ஓட்டுக் காய்ச்சி மரம். ஒரு காலத்தில் முஸ்லிம் செல்லங் கொஞ்சுதலை (Appeasement) வாக்குவங்கி அரசியலென போலியாகக் கட்டமைத்துக் காலட்சேபம் நடத்திக்கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு முஸ்லிம் வெறுப்பு என்பதை தங்களின் ரிசர்வ் வங்கியாகவே மாற்றிக் கொண்டனர். இன்றைக்கு ஒரு இந்திய இஸ்லாமியன் என்னதான் உலக தத்துவங்கள் பேசினாலும் அவனால் வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதே நிதர்சனம்!
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் எனறால்
வேறு யாராகவும் இருக்க
நான் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறேன்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீங்கள் அதை ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்
என்று எழுதிய கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வரிகளுக்கு இடையில் தான் இந்திய முஸ்லிம் இருத்தப்பட்டுள்ளான். இஸ்லாமிய வட்டத்தை விட்டு ஒருவன் வெளியேற முற்பட்டாலும் அவனை பலவந்தமாக பிடித்து வந்து, கலாச்சார வரையறைகளுக்குள் நிறுத்துகிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப்போன பேதங்களைக் கேள்வி கேட்ட கவிஞர் இன்குலாப் ஆகட்டும், நாசர், குஷ்பு, நக்மா உள்ளிட்ட கலைத்துறை பிரபலங்கள் ஆகட்டும் அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியாக இந்த வட்டத்திற்குள் தான் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்வதற்கான முதலும் கடைசியுமான புகலிடம் இதுவாகவே எப்போதும் இருந்திருக்கிறது. இதற்கு மத்தியில் தாய் மதம் திரும்புதல் (கர்வாப்ஸி) என்று கூத்துக் கட்டுவதையும் அவர்கள் நிறுத்துவதில்லை. ஷியா வக்ப் வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி, ஜிதேந்திர தியாகி என்ற பெயரில் சாமியாராகி ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சாதில் கலந்து கொண்டாலும் அங்கே ஓங்கி ஒலித்த முஸ்லிம் இன அழித்தொழிப்பு அறைகூலல்களுக்கு அவர்தான் முதல் களப்பலி ஆக்கப்படுகிறார். ஏனெனில் இங்கு முஸ்லிம் என்பது பிறவித் தழும்பு, மச்சம். போன்ற அங்க அடையாளமாக எப்போதும் குறிக்கப்படுகிறது.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இங்கே யாரையும் வெறுப்பேற்ற அல்ல. அது அவர்களின் கலாச்சாரம். இஸ்லாமிய கலாச்சாரக் கட்டுமானங்களை விட்டு வெளியேறுபவர்களை பலவந்தமாக பிடித்திழுத்து அந்த வரையறைகளுக்குள் தள்ளி முஸ்லிம் தானே நீ என்று அழிச்சாட்டியமாக நிறுவும் நீங்கள்தான் எங்கள் கலாச்சார அடையாளங்களையும் பறிக்கிறீர்கள் என்பதில் தான் எவ்வளவு முரண்? இத்தனை காலமாக ஹிஜாபை முஸ்லிம் பெண்கள் யாருக்கு எதிராகவும் அணியவில்லை. நிறுவனமயமான இந்த வன்முறை குறித்து பேசும் ஒரு இந்து பெண்மணி இப்படி கூறுகிறார். “இந்தியாவில் ஹிஜாப் உடைகளை நாம் நூற்றாண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் பல முஸ்லிம் பெண்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்கள் புர்காவுடன் அன்னியோன்னியமாக இருக்கிறார்கள். புர்கா இல்லாமல் சிலரால் வெளியில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது. இதிலிருந்து அவர்கள் விரும்பினால் மெல்ல வெளிவர முடியும். வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு பரிணாம வளர்ச்சி, யாரும் பலவந்தமாக திணிக்க முடியாது. இது இஸ்லாம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த பெண்கள், அவர்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினை ஆகும்”.
இந்த கருத்தின் ஊடாக உடை என்பது தனிநபர் சௌகரியத்தைப் பொறுத்தது என்பது புலனாகிறது. எந்த உடையையும் யாரும் யார் மீதும் நீண்ட காலத்திற்கு திணிக்க முடியாது. ஆணோ, பெண்ணோ உடை விசயத்தில் அதீத உள்ளுணர்வால் உந்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தாங்கள் அணியும் உடை தங்களின் மதிப்பையும் மரியாதையையும் கூட்டுவதாய் இருப்பதை எல்லோரும் உறுதி செய்கிறார்கள். பெண்கள் இந்த விசயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்களை விலக்கிவிட்டு பார்த்தாலும் பொதுவாக பெண்கள் ஆடை விசயத்தில் அலட்சியமாக இருப்பதை நீங்கள் பார்க்க முடியாது. எந்த உடை அவர்களுக்கும் சக மனிதர்களுக்கும் எவ்விதத்திலும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதோ அதையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படிபட்ட பெண்கள் தான், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில் வெட்டவெளியில் ஆண்கள் சூழ்ந்துநிற்க ஹிஜாப்பையும் புர்காவையும் களைய நிர்பந்திக்கப்படுகிறார்கள். எரிச்சலுடனும் இயலாமையுடனும் – குழந்தைகள் படிக்கவேண்டும், ஆசிரியைகள் வேலை செய்தால்தான் வாழ்வு நடத்தமுடியும் என்ற கையறுநிலையில் இந்த அடக்குமுறைக்கு உடன்படுகிறார்கள். ஹிஜாபை அனுமதிக்கமாட்டோம் என்று சொல்வதற்கு உள்ள மில்லி மீட்டர் நியாயத்தின் அளவிற்குக் கூட உங்களிடம் நாகரீகப் பண்பு இல்லை என்பதை இந்த அடாவடித்தனம் சொல்லவில்லையா? அப்படிபட்ட அராஜக பேர்வழிகள் கல்விச் சாலைகள் நடத்தும் அக்கிரமரத்தை யாரிடம் சொல்லி அழுவது? ஹிஜாப் ஆணாதிக்க அடிமைச் சின்னம் என்று கூச்சலிடும் பெண்ணியவாதிகள், ஆணாதிக்க கொடூரன்கள் கர்நாடகா நடுவீதிகளில் அரங்கேற்றிய ஆடை களைதல்களை கண்டவுடன் அதே வீதிகளில் திரண்டிருக்க வேண்டாமா? பெண்மை வெல்கவென்று கூத்திட வேண்டாம். குறைந்த பட்ச கண்ணியத்திற்காவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா? ஆதிக்க நிலைய அழுக்குகள் பொதுக் குழாயடியில் கசக்கிப் பிழியப்படும் போதும் எந்த கவலையும் இன்றி முஸ்லிம்களை வெளுத்து வெள்ளையாக்குகிற வேலையில் மட்டும் எல்லா நவீன சிந்தனையாளர்களும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள்.
முஸ்லிம் பெண்களைப் பொருத்தவரை அவர்களின் பொதுவெளி நடமாட்டத்தில் புர்கா, ஹிஜாப் ஆகியவற்றின் சமூக பாத்திரத்தை யாரும் சாமானியமாக நிராகரித்து விட முடியாது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் தாங்கள் கால்பதிக்க முடியாமல் செய்த தடைகளைத் தகர்த்தெறிய இஸ்லாமிய ஆடை வடிவமைப்பில் வந்துற்ற நவீன மாற்றங்கள் கவசமாய் அமைந்தன என்று எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள், புர்காவால் முஸ்லிம் பெண்கல்வி உயர்ந்திருக்கிறது என்று சொல்வதற்கு முஸ்லிம் ஆண்கள் அசிங்கப்பட வேண்டும் என்கிறார்கள். கல்வி வெவ்வேறு சமூகங்களுக்குள் எப்படி கொண்டு செலுத்தப்பட்டது என்ற வரலாற்றை அறியாதவர்கள் இவர்கள். சோற்றுக்கு உத்திரவாதம் இல்லாதவனுக்கு சோறு போட்டு படிப்பு சொல்லிக் கொடுத்தார்கள். கீழ்சாதியோடு ஒன்றாக படிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தபோது வகுப்பறைக்கு வெளியில் அவர்களை அமர வைத்து கல்வி கொடுத்தார்கள். 2012ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி தலித் மாணவர்களில் 20% கூட முதல் வரிசை பெஞ்சுகளில் அமர வைக்கப்படவில்லை. இன்றளவும் தலித் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க தனி சமையலறை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது. இதையெல்லாம் சொல்லி பெருமை பட முடியாது என்றாலும் இந்த யதார்த்த நிலையை சாக்காக வைத்து தப்பிக்காமல் கல்வியை ஏதோ ஒரு வகையில் முன்னெடுத்ததற்கு நிச்சயம் அசிங்கப்பட முடியாது. அப்படி அசிங்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் நகத்தில் அழுக்குப் படாமல் சமுதாயப் புரட்சி செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த பார்வையில் தான் முஸ்லிம் பெண்களின் ஆடை கலாச்சாரத்தை அணுக வேண்டும்.
இங்கே எது கண்களை உறுத்துமளவு கடத்தப்படுகிறது? எது கண்டும் காணாமல் கடந்து போகிறது? கடந்த எட்டு வருடங்களில் நீதிமன்றமோ, அரசோ முஸ்லிம்கள் தவிர வேறு எந்த பிரிவினரின் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிட்டு ‘அது கூடாது.. இது கூடாது‘ என்று சொன்ன நிகழ்வுகளில் சிலவற்றையாவது சுட்டிக்காட்ட முடியுமா? அப்படியென்றால் மற்றவர்கள் பகுத்தறிவோடும் அறிவியல் காத்திரப் பார்வையோடும் மதங்களைக் கடைபிடித்து ஒழுகுகிறார்கள் என்று அர்த்தமாகிவிடுமா? இந்துத்துவ அரசைக் கூட விட்டுவிடுவோம். இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தவாதிகள் கூட முஸ்லிம்களை வைத்துத் தான் வண்டியை சமீபமாக ரிவர்ஸில் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம் சொல்லாடல்கள், உடை, பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு கலாச்சார சுத்திகரிப்புக்கு உள்ளாகின்றன. நாடாளுமன்ற உறுப்பினராக அசாதுத்தீன் உவைஸி பதவி பிரமாணம் ஏற்க மைய மண்டபத்திற்கு வருகிறார். ஹிந்து ராஷ்டிரத்தின் முஷ்டி உயர்த்தும் கோஷமாக ‘ஜெய் ஸ்ரீராம்‘ விண்ணைப் பிளக்கிறது. அடடா! மதச்சார்பற்ற தேசத்தின் மாண்பைக் குலைத்துப் போடும் – இந்த சனநாயக குடியரசின் அலங்காரங்களைக் கலைத்துப் போடும் – இந்த கூக்குரலை தேசத்தின் உச்ச பட்ச அதிகார பீடத்திலேயே ஒலிக்க செய்து விட்டார்களே என்று சகியாமல் இந்த பூமிப் பந்தை தலைகீழாக யாரும் புரட்டி விடவில்லையே.. ஆனால் அதுவே ஒரு சின்ன பெண் தனது உரிமை பறிக்கப்பட்டு கும்பல் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது எழுப்பும் அல்லாஹ் அக்பர் எனும் தற்காப்பு முழக்கத்தில் வானமே கீழே இறங்கி விட்டதைப் போல் குதிக்கிறார்கள்.. சன்னமான குரலில் ஒலித்தாலும் நியாயங்கள் அச்சுறுத்தவே செய்யும். அதுவும் பாரோக்(பிரௌன்)களின் குலைகளை நடுநடுங்கச் செய்யும். அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விசயத்தில் கூட சிறுபான்மையினர் பக்கம் நிற்காமல் சாக்குப் போக்குகளைத் தேடுபவரே இங்கு அதிகம். முஸ்லிம்களை வேற ஆளாக மெனக்கெட்டு சித்தரிக்கும் சிந்தனாவாதிகளில் பலரும், நாளை ஹிஜாப் உரிமை மறுக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள், மற்றவர்களைப் போல் வழக்கமான உடைகளில் வருவதைப் பார்த்து, “ஏன் இவங்க பொட்டு, திருநீறு வச்சுக்க மாட்டாங்களா” என்று பாசிசம் தன் கோரப் பற்களைக் காட்டினால், ‘ஆமா.. ஏன் இவர்கள் மட்டும் தனியாக தங்களை அடையாளப்படுத்திக்கணும்‘ என்றுதான் கேட்பார்களே ஒழிய, பொட்டோ, பூவோ வைத்துக் கொள்வது அவர்களின் தனியுரிமை, சுதந்திரம் என்ற காத்திர சிந்தனைக்கு யாரும் வர மாட்டார்கள். அந்த அளவுக்கு இங்கே மண்டை கழுவப் படுகிறது. இப்படி நாம் நினைப்பதில் எந்த தப்பும் இல்லை என்பதை சமீபத்திய உபி தேர்தல் பரப்புரைகளிலேயே யோகி தெளிவாக அறிவித்துவிட்டார். “நான் மீண்டும் வென்றால் முஸ்லிம்கள் அனைவரும் நெற்றியில் பொட்டுவைத்துக் கொள்வார்கள்” என்றே அவர் பேசினார். இந்த கலாச்சார சுத்திகரிப்பை நோக்கித்தான் அனைவரையும் நகர்த்துகிறது இந்துத்துவ கலாச்சார தேசிய அரசு.
ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை.. ஏனெனில் ஹிஜாப் அணியாமல் போனால் என்ன தண்டனை என்று குர்ஆன் குறிப்பிடவில்லை. என்று நீதிபதிகள் தமது தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள். புர்கா, நிகாபுக்கு இஸ்லாமிய புனிதப் பிரதிகளில் இருந்து ஆதாரம் கொண்டுவா என்றால் முஸ்லிம்களே கொஞ்சம் தடுமாறுவார்கள். ஆனால் ஹிஜாப் (திரை), கிமர் (தலைத்துணி) என்பதெல்லாம் குர்ஆனில் வலியுறுத்தப்பட்டவை. அதற்கே அப்படியெல்லாம் ஒன்றுமில்லையென்று நீதிபதிகள் விரட்டி விட்டிருக்கிறார்கள். சினிமா வசனங்களை மேற்கோள் காட்டித் தீர்ப்பு எழுதும் காலகட்டத்தில் இதிலெல்லாம் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் தண்டனையென்று ஒன்று குறிப்பிடப்படவில்லை.. அதனால் இந்த பண்பாட்டு அடையாளத்தை அனுமதிக்க முடியாது என்று கூறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தையாவது இதுவரை ஒழுங்காக நடைமுறைபடுத்தி இருக்கிறார்களா? இந்திய குற்றவியல் சட்டம் 294 பிரிவின்படி பொது வெளிகளில் ஆபாசமாக பேசுவதோ செயல்படுவதோ நடப்பதோ குற்றமாக வரையறுக்கப்பட்டு அதற்கான தண்டனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் 2020 நவம்பரில் நடிகர் மிலிந்த் சோமன் கடற்கரையில் நிர்வாணமாக ஓடியதற்காக கோவா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.. அதேபோல் நடிகை பூனம் பாண்டேவும் அவரது கணவரும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் பொதுவெளியில் படப்பிடிப்பு நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டதற்காக வழக்கை எதிர் கொண்டனர். ஆனால் பொதுவெளியில் நிர்வாணமாக திரியும் அகோரி சாமியார்கள், நாகா சாதுக்கள் மீது இந்த நாட்டின் சட்டம் பிரிவு 294ம் – அது குறிப்பிடும் தண்டனையும் இதே போன்று பாயாமல் ஏன் கேட்பாரற்று கிடக்கிறது? இதைவிட 2016 ஆம் ஆண்டு ஹரியானா சட்டசபையிலேயே ஒரு நிர்வாண திகம்பர் சாமியார் உரையாற்றினார். அப்போது நீதி அமைப்புகள் தமது கருப்புத் துணியை வாயிலும் வைத்து மேலும் இறுகக் கட்டிக் கொண்டன. சமய சட்டங்களை விட்டுவிட்டு முதலில் இந்திய குடிமை மற்றும் குற்றவியல் சட்டத்தை பாரபட்சமின்றி பிரயோகிப்பதை எப்போதாவது நமது நீதிமன்றங்கள் உறுதி செய்திருக்கின்றனவா என்பதே கேள்வி. அதற்கே வக்கற்றவர்கள் தாம் முஸ்லிம்களை நீங்க நல்லவரா.. கெட்டவரா என்று ஆய்ந்து பார்த்து ஓய்ந்து போகிறார்கள்.
அப்படி ஆய்ந்து பார்க்கும் கருதுகோள்களை எந்த தர்க்க நியாயமும் இல்லாமல் தத்தம் வசதிக்கு வளைத்துக் கொள்ளவும் இங்கே யாரும் தயங்குவதில்லை. இந்த ஹிஜாப் விவகாரத்தையே முஸ்லிம் சமய அடையாளத்தை கல்விகூடங்களில் அனுமதிக்க முடியாது என்று காரணங்காட்டி நிர்வாகங்கள் கிளப்பிவிட்டன. அதனை இந்துத்துவ அமைப்புகளும் கர்நாடக ஆளும் வர்க்கமும் வழிமொழிந்தன. ஆனால் நீதிமன்றம் இது சமய கடமையல்ல என்று முடிவு செய்து அனுமதி மறுத்தது நியாயமே என்று தீர்ப்பளிக்கிறது. ஒரே விசயம் நினைத்தால் மத அனுட்டானமாகவும் அப்படி வரையறுக்க முடியாத ஒன்றாகவும் கணப் பொழுதில் மாறிவிடுகிறது. நாளைக்கு ஒரு முஸ்லிம் பையன் பள்ளிக் கூடத்திற்கு குல்லாய் அணிந்து வந்தால் அப்படி அணிந்து வருவதற்கு இஸ்லாமிய சட்டத்தில் ஆதாரமில்லை என்று தடை விதித்துவிட்டால், பிற மாணவர்கள் தொப்பி, தலைப்பாகை என எது வேண்டுமானாலும் அணிந்து வரும் உரிமை மட்டும் காப்பாற்றப் பட்டுவிடும். முஸ்லிம்கள் அம்போவென விடப்படுவார்கள். பன்மை சமூகத்தில் கலாச்சார பரிவர்த்தனைகள் தாம் இணக்க, சமரச வாழ்வில் அழகியல் சங்கதிகளாக பரிணமிக்கின்றன. சமீபத்தில் நடந்த அப்படிபட்ட ஒரு விசயத்தை இங்கே குறிப்பிடுகிறேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு முஸ்லிம் பெண்.. வெள்ளை கோட்டோடு தலையில் அழகாக ஸ்கார்ஃப் அணிந்திருக்கிறாள்.. உடன் பயிலும் தோழிகள், “இது எப்படி இவ்ளோ அழகா போடுறீங்க.. எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்கிறார்கள். உணவு இடைவேளையில் ஒரு scarf tutorial நடக்கிறது. ஸ்கார்ப் முக்காடிட்ட பெண்கள் தங்கள் நெற்றிப் பொட்டை எடுத்துவிட்டு கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நெற்றிப் பொட்டை முஸ்லிம் பெண் எடுத்து நெற்றியில் வைத்து அழகு பார்த்துக் கொள்கிறாள். இவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்? இங்கே சமய நல்லிணக்கம் இந்த மாதிரி அழகியல் சந்தர்ப்பங்களில் தான் உயிர்ப்போடு கிளர்ந்து எழுகிறது என்பதை யாராவது மரை கழண்ட இந்த மானுடப்பதர்களுக்கு சொல்லித் தொலையுங்கள். அதுவரை வெகு நேர்த்தியாக நிறுவனப் படுத்தப்படும் கலாச்சார சுத்திகரிப்பை அலட்சியமாக கடந்துபோகும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.