யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலைகள் ஜெர்மனியில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. யூதர்களை விதம் விதமாகக் கொல்வதற்கு ஹிட்லர் பல வதை முகாம்களை அமைத்திருந்தான். போலந்தில் உள்ள ஆஸ்விட்ஜ் நகரில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு மிகப்பெரிய இரண்டு வதைமுகாம்கள் கட்டப்பட்டன. அந்த வதைமுகாம்களுக்கு யூதர்களைக் கொண்டு வருவதற்கென்று தனி ரயில் போக்குவரத்தையே ஏற்படுத்தியிருந்தான் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படை தோல்வியுற்று, ரஷ்யா அந் நகரைக் கைப்பற்றும் வரை உலகிற்கு இப்படி ஒரு வதைமுகாம் இருப்பதே தெரியாது.
அடால்ப் ஐக்மன். யூத இன வெறுப்பில் ஹிட்லருக்கு நிகரானவன் எனப் பெயரெடுத்தவன். ஹிட்லரின் தளபதிகளில் ஒருவன். ஹிட்லரின் நெஞ்சைப் பதைபதைக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்தவன்தான் அடால்ப் ஐக்மன். சுமார் ஐம்பது இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தான் அடால்ப் ஐக்மன்.
இரண்டாம் உலகப் போரின் தோல்வி ஹிட்லரின் தற்கொலையில் முடிந்தது. அவனின் சகாக்கள் பலரும் ஹிட்லரின் வழியில் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர். தங்களின் அங்க அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஜெர்மனியை விட்டே ரொம்ப தூரமாகச் சிலர் போய் விட்டனர். அடால்ப் ஐக்மனும் எங்கு ஓடி ஒளிந்தான் என்று எவருக்குமே தெரியவில்லை.
டூ புதுமடம் ஹலீம் யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தனிநாடு உருவானாலும் அவர்கள் பழசை மறக்கவில்லை. யூதர்களை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த வர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஒரு தீராத ரணமாக எரிந்துகொண்டே இருந்தது.
மொசாத் என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பாக நாக்மென் என்ற பெயரில்தான் இஸ்ரேலிய உளவுப்படை செயல்பட்டுக் கொண்டிருந்தது. இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த சூட்டோடு இஸ்ரேலிய பிரதமர் டேவிட் பென்குரியன் உளவு அமைப்பைத் தொடங்கி வைத்தார். நாக்மென் என்பது யூதர்களைக் கொத்துக் கொத்தாகப் புதைத்த இடம். அந்த இடத்தின் பெயரைத்தான் பென்குரியன் உளவு அமைப்புக்குச் சூட்டினார்.
பின் உலகம் முழுவதும் தங்களின் ஏஜென்டுகள், நெட்வொர்க் என பரந்து விரிந்ததும் மொஸாட் லி அலியா பெட் என பெயர் மாற்றம் அடைந்தது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரிவு இவர்களுக்குப் பயிற்சி அளித்தது. பின்னாளில் சி.ஐ.ஏ.வின் ஏஜென்டுகளையே வேவு பார்க்கும் அளவுக்கு குருவையே மிஞ்சினார்கள் மொஸாட் உளவு ஏஜென்டுகள்.
இந்த மொஸாட்டில்தான் மெட்சா என்ற பிரிவு இயங்குகிறது. இவர்களின் வேலை இஸ்ரேலுக்கு எதிரானவர்களைத் திட்டம் தீட்டி போட்டுத் தள்ளுவது. அரசியல் கொலைகள் முதல் பழிவாங்கும் கொலை வரை அத்தனையும் செய்வது இந்த மெட்சா அமைப்புதான். உலகில் எங்கிருந்தாலும் சரிதான். அந்த நாட்டில் போய் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு அடுத்த பிளைட் பிடித்து வந்துவிடுவார்கள் மெட்சா உளவாளிகள்.
அந்த நாட்டு அரசாங்கத்திற்கே தெரியாமல் ஆளை இஸ்ரேலுக்குக் கடத்திவந்த சம்பவங்களும் உண்டு. ஆனால் ஒரு விசயத்தில் உறுதியாக இருப்பார்கள் இந்த மெட்சா ஏஜென்டுகள். யாருமே இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்க மாட்டார்கள். எல்லா நாடுகளின் குடிமக்களுக்கான அடையாள அட்டையும், பாஸ்போர்ட் அல்லது வெளிநாட்டு பிரஜைகளாகவும் இருப்பதுதான் மெட்சாவின் வேலைமுறை.
மெட்சாவை ஏற்படுத்தியதும் அவர்களுக்குக் கொடுத்த முதல் பணியே யாரைக் கொல்ல வேண்டும் என பட்டியல் தயாரித்தது தான். கடந்த காலங்களில் எவர் எல்லாம் யூதர்களை டார்ச்சர் செய்தார்களோ, அவர்களில் உயிரோடு இருப்பவர்கள் யார், எங்கிருக்கிறார்கள், தேடுவதற்கு என்ன செய்ய வேண்டும் யாருக்கு தகவல் சொல்லப்பட வேண்டும் என அதற்கான துரிதமான நெட் வொர்க்கை ஏற்படுத்தினார்கள் மெட்சா உளவாளிகள்.
மூன்றாயிரத்துச் சொச்சம் பேர் அந்த ஹிட் லிஸ்டில் கொண்டு வரப் பட்டார்கள். தங்களை வதைமுகாமில் கொலை செய்தவர்கள் முதல் போட்டுக் கொடுத்தவர்கள் வரையில் மிகக் கவனமாக ரெடி செய்யப்பட்ட ஹிட் லிஸ்ட். செத்துப் போய்விட்டான் என உறுதியாகத் தெரிந்தால் அந்த ஹிட் லிஸ்டில் மார்க் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என தயாரிக்கப்பட்ட லிஸ்டில் இருந்த முதல் பெயர் அடல்ப் ஐக்மன்அவன் எங்கிருக்கிறான் என்ற தகவல் எவருக்குமே தெரியவில்லை. ஜெர்மனியில் மட்டும் அல்ல ஐரோப்பாவிலும் அவன் இல்லை. உயிரோடு இருக்கிறானா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. உறுதியாகத் தெரியும் வரையில் அந்த ஹிட் லிஸ்டில் அடால்ப் ஐக்மன் பெயர் நீக்கப்-படவே இல்லை.
1960ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகர் பியுனாஸ் அயர்ஸ். அழகான துறைமுக நகரம். தன் காதலைச் சொல்வதற்காக பூக்களுடன் சில்வியாவைத் தேடி அவளின் வீட்டுக்கு வந்தான் கிளாஸ் என்ற இளைஞன். சில்வியாவின் தந்தை லோத்தாவும் அப்போது வீட்டில் தான் இருந்தார். ரஷ்யாவிலிருந்து பியுனாஸுக்கு குடியேறிய யூத குடும்பம். கிளாஸ் ஒரு கிறித்தவன் என்பதால் லோத்தாவிற்குச் சற்று தயக்கமாக இருந்தது. அவரின் குடும்பப் பின்னனியைப் பற்றி விசாரித்தார். தன் பெயர் கிளாஸ் ஐக்மன் என்றும் சிறுவயதில் தன் குடும்பம் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்து குடியேறிவிட்டதாகச் சொன்னான்.
பெயரைச் சொன்னவுடன் லோத்தாவின் முகம் திடுக்கிட்டது. அவனைப் பற்றிய முழு விபரத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். தங்களின் யூத இனத்-தின் எதிரியும், இஸ்ரேலிய அரசால் தேடப்பட்டு வரும் அடால்ப் ஐக்மன் பியுனாஸில் தான் உயிரோடு இருக்கிறான் என்ற தகவலை உடனடியாக இஸ்ரேலிய அரசுக்கும் அனுப்பி வைத்தார் லோத்தா. மகளின் காதலைவிட அடால்ப் ஐக்மன் பற்றிய செய்தி இஸ்ரேலுக்குத் தெரிய வேண்டியது முக்கியம்.
இஸ்ரேலிய அரசு இவர்களைப் போன்ற தேடப்படுபவர்கள் பற்றிய தகவல் கொடுத்தால் பெரும் பரிசு பணம் கொடுப்பதாக ஒரு செய்தி யூதர்களின் மத்தியில் பரவியிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டதும் மொசாத் பரபரப்பானது. நம்பர் ஒன் குற்றவாளி யைத் தூக்க வேண்டும் அல்லது போட்டுத் தள்ள வேண்டும். இஸ்ரேலிய அரசு தீர்மானமாகச் சொன்னது. அடால்ப் ஐக்மன் இங்கு உயிரோடு கொண்டு வரப்பட வேண்டும். இங்கு வைத்துதான் அவனை வச்சு செய்ய வேண்டும்.
மெட்சா உளவாளிகள் அர்ஜென்டினா வந்து முகாமிட்டார்கள். அவன் அடால்ப் ஐக்மன்தான் என்பதையும் இஸ்ரேலிய அரசுக்கு உறுதி செய்தார்கள். ஒரு நல்ல நாளில் அடால்ப் ஐக்மனைத் தனி விமானத்தில் அள்ளிக்கொண்டு இஸ்ரேல் வந்தடைந்தார்கள். ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் வேலை செய்து இந்தக் கடத்தல் நாடகத்தை மொசாட் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. இதில் என்ன வியப்பு என்றால் இந்தக் கடத்தல் நாடகம் அர்ஜென்டினா அரசுக்கு இறுதி வரையில் தெரியவே இல்லை.
1961ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசு இந்தத் தகவலை உலகிற்கு வெளிப்படையாக அறிவித்த பின்புதான் அர்ஜென்டினாவுக்கே தெரிய வந்தது. அர்ஜென்டினா வலுவான கண்டனத்தைப் பதிவு செய்தது. இது கிரிமினல் வேலை என்று சொன்னது. இஸ்ரேல் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அடால்ப் ஐக்மன் ஒரு போர்க் குற்றவாளி. எங்களால் கடந்த இருபது ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளி என சூடாகப் பதில் சொன்னார் இஸ்ரேலிய பிரதமர். அவர் சொல்வது நியாயம்தான் என்றது அமெரிக்க அரசு.
அநியாயமாகக் கடத்தி வந்து விட்டீர்கள், ஆனால் நியாயமான முறையிலாவது நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட வேண்டும் என தங்களின் இறுதி வேண்டுகோளை வைத்தது அர்ஜென்டினா. அதெற்கென்ன பேஷா பண்ணிடலாம். நீதிமன்ற விசாரணை வரலாற்றில் முதன் முறையாக வானொலி யில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப் பட்டது.
விசாரணையில் நான் குற்றவாளி இல்லை என வாதாடினார் அடால்ப் ஐக்மன். நான் ஒரு அரசாங்க அதிகாரி. அரசு இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவது என் கடமை என்று நியாயம் பேசினார். அவரின் வாதத்தை முழுமையாகக் கேட்ட இஸ்ரேலிய உச்சநீதிமன்றம் அடால்ப் ஐக்மனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தூக்கு தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட தேதிக்கு மூன்று நாள்களுக்கு முன்னரே அடால்ப் ஐக்மன் தூக்கிலடப்பட்டான். அவனின் சாம்பல் இஸ்ரேலிய எல்லைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடல் எல்லையில் கரைக்கப்பட்டது.
அடால்ப் ஐக்மன் தூக்கிலிடப்பட்ட நாளை உலகம் முழுவதும் இருந்த யூதர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். மொசாத்தைப் பற்றி கதை கதையாகப் பேசினார்கள். மொசாத்தின் வேட்டை தொடரும் என சொன்னார் அதன் தலைவர்.இன்று வரை அந்த லிஸ்டில் உள்ளவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மொசாத்தின் உளவாளிகள். புதிய பெயர்களும் அந்த ஹிட் லிஸ்டில் சேர்க்கப்படுவதும் அன்றாட வேலையாக நடந்து கொண்டிருக்கிறது.