அசாருதீன் கேப்டனாக இருந்தபோதுதான் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன். பாகிஸ்தானுடனான ஏதோ ஒரு மேட்ச் அது. எங்கள் பக்கத்து வீட்டில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தினர் வசித்தார்கள். எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள். அவர்கள் வீட்டில் அவர்களோடு சேர்ந்து நான், அப்பா, தம்பி என ஒரு பெரிய கும்பலாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டில் இருந்த வயசான அங்கிள் பழைய கிரிக்கெட் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி பெரிய கும்பலோடு உட்கார்ந்து மேட்ச் பார்ப்பது ஜாலியாக இருந்தது. ஒருகட்டத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் பந்துகளுக்கு இந்திய வீரர்கள் வரிசையாக இரையாகிக் கொண்டிருந்தார்கள். எனக்கு சோகம் தொற்றிக்கொண்டது. ஆனால் அந்த அங்கிள் அதையும் ரசித்துக் கொண்டிருந்தார். வாசிம் அக்ரமின் யார்க்கர்களைச் சிலாகித்துப் பாராட்டினார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். பின் என் அப்பாவிடம் கோபமாக “என்னப்பா தேசப்பற்றே இல்லாம இருக்காரு?” எனக் கேட்டேன். அதிகம் தமிழ் தெரியாத அந்த அங்கிளுக்குப் புரியவில்லை. பின் என் அப்பா அவருக்கு என் கேள்வியை ஆங்கிலத்தில் விளக்கியவுடன், “ஓ… சாரி சாரி… வாட்ச் வாட்ச்.. ,” என சிரித்துக்கொண்டே சொன்னார். இறுதியில் இந்திய அணி போராடித் தோற்றுப் போய்விட்டது. இந்த சம்பவம் நடந்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நிற்க.
அதன் பின் எண்ணற்ற மேட்ச்சுகள், டோர்னமெண்ட்டுகள் என எல்லாவற்றையும் பார்ப்போம். கிரிக்கெட் அணிகள் என்றில்லாமல், கிரிக்கெட் எனும் விளையாட்டின் ரசிகனானேன். காலப்போக்கில் பக்கத்து வீட்டு அங்கிளின் மனநிலை எனக்கும் வந்துவிட்டது. அவர் கிரிக்கெட்டை ரசித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குப் பிடித்த வீரர்களில் வாசிம் அக்ரம், சலீம் மாலிக், சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்கெல்லாம் முக்கிய இடம் உண்டு. (இன்சமாம், இஜாஜ் அஹமத் என பிடிக்காத ஆட்களும் உண்டு) அதேபோல் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சுகளில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என வெறியாகப் பார்ப்போமே தவிர எதிரணியினரின் விளையாட்டையும் ரசிக்கவே செய்வோம். ஷேன் வார்னே, கல்லினன், க்ளூஸ்நர், சிம்காக்ஸ், சந்தர்பால், லாரா, ரணதுங்கா, ஸ்டீஃபன் ஃப்ளெமிங் என இந்தியரல்லாத பிளேயர்கள் பலருக்கு நாங்கள் ரசிகர்களாக இருந்தோம்.
அசாருதீன் தலைமையில் எத்தனையோ மேட்ச்களில் பாகிஸ்தானுடன் இந்தியா தோற்றிருக்கிறது. சொதப்போ சொதப்பு என்று பலமுறை சொதப்பி இருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட, ஒரே ஒரு முறை கூட அசாருதீன் எங்களுக்கு இஸ்லாமியராகத் தெரிந்ததே இல்லை. அவர் இந்திய வீரர். இந்தியாவின் கேப்டன். அவ்வளவுதான். மேட்ச் தோற்றால் அவரை எவ்வளவோ திட்டியிருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அவர் இஸ்லாமியர் என்ற எண்ணம் எங்களுக்கு வந்ததே இல்லை. நான் மட்டும் அல்ல, என் ஏரியா, பள்ளி, ஊர், மாநிலம், நாடு என ஒட்டுமொத்த இந்தியாவே அப்போது அப்படித்தான் இருந்தது. இதுதான் இந்தியாவின் குணமாக இருந்தது.
இப்போதும் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்றிருக்கிறது. விராத் கோலி ஒரு பிளேயராக தன் சக பாகிஸ்தான் பிளேயர்களை ஆரத்தழுவினார். ஆனால் கேப்டனாகக் கூட அல்லாத ஒரு சாதாரண வீரரை அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே “பாகிஸ்தானுக்குப் போ,” எனப் பலர் சொல்கிறார்கள் என்றால் இந்தியா நம் கண் முன்னே தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது, அழுகிக் கொண்டிருக்கிறது!
அரசியல் மட்டுமல்லாமல், சினிமா, விளையாட்டு என எல்லாவற்றிலும் மதத்தைப் பார்க்கும் ஒரு கொடூரமான இந்துத்துவ நாஜி தலைமுறையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் சதாசர்வ காலமும் ஜாம்பிக்கள் போல மதவெறியுடன் அலைந்துகொண்டே இருக்கிறார்கள்.
பாஜக இந்தியாவின் சாபம். ஆங்கிலேயர்களைவிடவும் ஒரு மோசமான இருண்ட பக்கத்தை பாஜக இந்தியாவில் எழுதிக்கொண்டிருக்கிறது. சம கால ஊடக அடிமைகளின் உதவியால் இப்போது இவர்கள் தப்பிப்பிழைக்கலாம். ஆனால் வரலாறு இவர்கள் மேல் வெறுமனே உமிழாது, காறித் துப்பும். அந்த நாளும் நாம் வாழும்போதே வரும்.
-டான் அசோக்