இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 ன் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டு விட்டது என இந்திய மக்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.இந்திய விண்வெளி துறை வரலாற்றில் நிகழ்ந்திருக்க கூடிய சாதனை நிகழாமல் போனது வருத்தமான ஒரு விடயமாகவே இருக்கிறது.அதே நேரத்தில் இன்று ஒரு பிரேதசத்தின் தகவல் தொடர்பு கடந்த இரண்டு மாதமாக துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து பெரிதாக யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.அங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் உண்மையில் கடந்த காலங்களில் அந்த பிரேதசத்தை ஆட்சி செய்தவர்கள் நிலைமையே என்னவென்று தெரியாமல் தான் உள்ளது.இந்திய வரைப்படத்தில் தலைப்பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் காலம் காலமாக சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். காயம்பட்டு காயம்பட்டு வடுவாகிய அவர்களுடைய நெஞ்சில் கூறிய வாள் கொண்டு மேலும் குத்தியது மத்திய அரசு 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம்,இதனால் பலனையும் மகிழ்சியையும் அடைந்தது பா.ஜ.க வும் அவர்களுடைய சங்பரிவார கூட்டங்களும் தானே தவிர காஷ்மீர் மக்கள் அல்ல.
370 சட்ட பிரிவை நீக்கியது மூலம் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாகவும்,நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என பிரதமர் மோடியும் அவருடைய அமைச்சர்களும் தெரிவிக்கிறார்கள் ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு செய்தியை கூட காணமுடியவில்லை காரணம் அங்கு தகவல் தொடர்பு என்பது முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நம்மால் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியவில்லை.அங்கு இயல்பு நிலை இல்லை மக்கள் வழக்கத்திற்கு மாறாக கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என காஷ்மீர் சென்று வந்த பிரபல பத்திரிக்கையாளர் ரானா அய்யூப் தெரிவித்துள்ளார். அவர்,
இப்பொழுதுதான் காஷ்மீரில் இருந்து திரும்பினேன். நள்ளிரவு சோதனைகளில் பன்னிரண்டு வயது சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்களுக்கு மின்அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்கள் குடும்பத்திற்கு தெரியவில்லை. இதுதான் நீங்கள் சொல்லும் ‘இயல்புநிலை’. அந்தப் பள்ளதாக்கில் இதுவரை நான் கண்டிராத மோசமான நிலை இதுதான். கொடுங்கோன்மை மிக்க இந்திய அரசு, இந்திய ஜனநாயகத்தை அவமானப்படுத்தியுள்ளது.என தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சமூக வலைதளத்தில் ரானா அய்யூப் பகிர்ந்த பகிர்வு இது.
இது தான் காஷ்மீரின் உண்மை நிலையாக இருந்து வருகிறது.
நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதன் முன் முயற்சியாக சந்தரயான்-2 அனுப்பப்பட்டது ஆனால் காஷ்மீருக்குள் மற்ற மாநில மனிதர்களை அனுப்ப மத்திய அரசு மறுக்கிறது.அங்கு செல்ல முயற்சி செய்யும் மக்கள் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.விக்ரம் லேண்டரின் தகவல் நிலவை நெருங்கும் கடைசி நேரத்தில் தான் துண்டிக்கப்பட்டது.ஆனால் காஷ்மீர் மக்களின் தொடர்பு 370 வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுவதற்கு முன்பே துண்டிக்கப்பட்டுவிட்டது.
லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டவுடன் கவலைப்பட வேண்டாம் நான் உங்களோடு இருக்கிறேன் என இஸ்ரோ விஞ்ஞானிகளிடமும் அதன் தலைவர் சிவனிடமும் கட்டி தழுவி ஆறுதல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, காஷ்மீர் மக்களிடம் பேசவும் தயாரில்லை அவர்கள் கோரிக்கையை கேட்கவும் தயாரில்லை.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து விட்டோம் என கூறும் மத்திய அரசு மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.ஜம்மு-காஷ்மீர் என்கிற பகுதிகளை மட்டும் இணைத்து விட்டு விட்டு அங்கு வாழும் மக்களை மறந்து விட்டது அரசு.
தகவல் துண்டிக்கப்பட்ட லேண்டரின் புகைப்படத்தை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுக்கிறது.ஆனால் காஷ்மீரில் நிலவும் சூழலை பதிவு செய்ய எந்த கருவியும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை,பத்திரிக்கைகளில் செய்தி வர தடை விதிக்கப்படுகிறது.
தகவல் துண்டிக்கப்பட்ட லேண்டரிடமிருந்து தகவல் பெற முயற்சித்து வருகிறோம்,இன்னும் 14 நாட்களில் அதன் நிலை தெரியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆனால் காஷ்மீரின் நிலையை அறிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என தெரியவில்லை காரணம் லேண்டரில் ஏற்பட்டது தொழில்நுட்ப கோளாறு,காஷ்மீர் விவகாரத்தில் ஏற்பட்டிருப்பது ஆட்சியாளர்களின் கோளாறு……
-முஜாஹித்