கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் என்னுமிடத்தில் செயல்படும் ஹிரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் பீகார் மாவட்டத்தை சேர்ந்த 37 மாணவ–மாணவிகள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக வேண்டி கடந்த சனியன்று தொடர்வண்டியில் பயணம் புறப்பட்டு இருக்கிறார்கள். சென்னையிலிருந்து அவர்கள் வேறு தொடர் வண்டி மூலமாக பீகார் செல்லவேண்டும்.
ஆனால் அரசு திடீர் என அறிவித்த ஒருநாள் மக்கள் ஊரடங்கு மூலமாகவும் அதைத்தொடர்ந்து ரயில்வே அறிவித்த பணி முடக்கம் காரணமாகவும் அந்த பிள்ளைகள் சென்னையில் சிக்கிக்கொண்டார்கள். ஒரு வேளை உணவை மட்டும் அங்கே இருந்த ரயில் நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அந்தச் சிறு பிள்ளைகள் உடனடியாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினுடைய மத்திய தலைமைக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
அங்கே இருந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழக தலைமைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து SIO தமிழக பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்கள் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள்.
ஒருநாள் அங்கு தங்கியிருந்த பிறகு மீண்டும் அம்மாணாக்கர்களை படித்த பள்ளிக்கு செல்வதற்காக வேண்டி அவர்களை வாகனத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால் கேரளாவிற்கு செல்ல இயலாத சூழலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடுப்புனி என்ற பகுதியில் உள்ள
பீஸ் வில்லேஜ் டிரஸ்ட் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்
அங்கு மறுநாள் காலை திடீரென்று சிலரால் கிளப்பி விடப்பட்ட கொரோனோ பீதியால் அச்சமுற்ற கிராமத்து மக்கள் திரண்டு வந்து இந்த பிள்ளைகள் உடனடியாக அங்கே இருந்து செல்ல வேண்டும் என்று முற்றுகையிட ஆரம்பித்தார்கள். அதற்குள்ளே புகுந்து கொண்ட சில இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த சிலரும் பிரச்சனையை பெரிதாக்கினார்கள்.
பிறகு அரசு நிர்வாகம் தலையிட்டு மறுநாள் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தப் பிள்ளைகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தார்கள். அதில் எந்த பிள்ளைக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர்களும் சொன்னார்கள். ஆனாலும் கொரோனோ பீதியோடு முஸ்லீம் வெறுப்பும் உள்ள சிலரும் அக்கூட்டத்தில் கலந்து இருந்ததன் விளைவு அங்கே இருந்து அம்மாணாக்கர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அதன் காரணத்தினால் அக்குழந்தைகளை இடம் மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
உடனடியாக வெல்ஃபேர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ் அப்துல் ரஹ்மான், ஜமாஅத்தே இஸ்லாமி கோவை மாவட்ட செயலாளர் சபீர் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் துணைச்செயலாளர் பீர் முஹம்மது, மத்திய மண்டலச் செயலாளர் அப்துல் அக்கீம் சிஏ ஆகியோர் அந்தப் பகுதிக்கு இரவு 8 மணிக்கு விரைந்து சென்றோம்.
அங்க இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் இடத்தில் கலந்துரையாடினோம். அதன் முடிவாக அங்கே அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணத்தினால் உடனடியாக அவர்களை கோவைக்கு இடம் மாற்றுவது என்று முடிவு செய்தோம்.
அதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு செந்தில் அவர்கள் உடனடியாக வாகனத்தை ஏற்பாடு செய்து தந்தார். அந்த வாகனத்தில் அந்த பிள்ளைகளை ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தோம் . அங்கே நடந்த சிறு சலசலப்பின் காரணமாக அந்த பிள்ளைகள் எல்லாம் அச்சத்தில் இருந்தார்கள். கவலையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை கோவைக்கு 2 வாகனத்தில் அனுப்பி வைத்தோம்.
பிறகு அங்கிருந்து காரிலே நாங்கள் அனைவரும் புறப்பட்டோம். அப்பொழுது அந்தப் பகுதியில் அந்த ட்ரஸ்டில் இணைந்து பணியாற்றி வரும் ஜாபர் சாதிக் என்ற நண்பர் அந்தப் பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக வேண்டி வைத்திருந்த தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழத்தாரை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் காரை நாங்கள் நிறுத்தினோம். நிறுத்திய சற்றுநேரத்தில் அங்கு இருந்த சில மது குடிகாரர்களும் மத வெறியர்களும் காரை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகள் எல்லாம் கூறி கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள். உள்ளே இருந்த எங்களை வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்காக வேண்டி கடுமையாக தாக்கினார்கள். கார் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது.
அப்பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்த சில நல்லவர்கள் வந்து அவர்களை தடுத்து நிறுத்தி விலக்கி வைத்தார்கள். பிறகு அங்கே இருந்து இறை கிருபையால் தப்பித்து காவல் நிலையம் வந்து புகார் அளித்தோம். பிறகு அங்கே வந்த அந்த ஊரைச் சார்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். கிராமத்துக்குப் நாட்டாமை வந்து ஆறுதல் படுத்தினார்கள். கார் சேதத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். ஆனாலும் அவருடைய பேச்சில் நம்பிக்கையோ ஆறுதலோ தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒரு செயல். தங்களது பகுதியைச் சார்ந்த சிலர் செய்த தவறுக்கு அவரது அந்த பகுதி பஞ்சாயத்து பொறுப்பாளர் வருந்தியதாக தெரியவில்லை.
பிறகு இரவு அங்கிருந்து நாங்கள் கோவைக்கு புறப்பட்டு வந்தோம். கோவைக்கு வந்த பிள்ளைகளை கரும்புகடையில் தங்க வைப்பதற்காக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரவு 12 மணிக்கு கோவைக்கு வந்தடைந்த அந்தப் பிள்ளைகள் ஆத்துப்பாலம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
அன்று இரவுதான் எட்டு மணி செய்தியாளராக இருக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி இரவு 12 மணி முதல் ஊரடங்கை அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பின் காரணமாக எல்லைகள் மூடப்பட்டது. கொரோனோ பீதியில் காரணத்தினால் காவல்துறையும் உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். நீண்ட நெடு நேரம் காவல்துறை உயரதிகாரிகளிடமும் வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜமாத்தே இஸ்லாமி கோவை மாவட்ட தலைவர் உமர் பாரூக், அப்துல் ஹக்கீம், சபீர் அலி மற்றும் பல ஊழியர்களும் ஆத்துப்பாலம் பகுதியில் வந்தார்கள். நீண்ட முயற்சிக்குப் பிறகும் அந்த பாவப்பட்ட பிள்ளைகளை உள்ளே விட காவல்துறை தயாராக இல்லை.
பிறகு மீண்டும் இரவு 3 மணிக்கு அவர்களை பொள்ளாச்சி பகுதிக்கே திரும்ப அழைத்துச் சென்று அந்தப் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சகோ அப்துல் மாலிக் தங்க வைக்கப்பட்டார். திடீரென்று எடுக்கப்பட்ட முடிவை எவ்வித சலனமும் இன்றி ஏற்றுக் கொண்ட மாலிக் அப்பணியை மிகச் சிறப்பாக செய்தார். அரசு அதிகாரிகளின் ஏச்சுப் பேச்சுக்களை மிக அழகிய முறையில் கையாண்டார்.
அம்மாணாக்கர்கள் உடனடியாக கேரளா திரும்புவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து ஜமாஅத்தே இஸ்லாமி மலப்புரம் மாவட்ட பொறுப்பாளர்களிடமும் வெல்ஃபேர் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினர் சுலைமானிடமும் அந்த பள்ளியின் பொறுப்பாளர்களிடமும் பேசினோம்.
உடனடியாக அவர்கள் கேரளா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரு நெருக்கடியான சூழலை அவர்களோடு எடுத்துரைத்தோம்.
அதற்குப் பிறகு ஜமாஅத்தினுடைய பொறுப்பாளர்களும் சுலைமானும் விரைவாக செயல்பட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ET முஹம்மது பஷீர் (முஸ்லிம் லீக்) அவர்களிடம் பேசப்பட்டது. அவர் மலப்புரம் மாவட்ட ஆட்சியாளரை தொடர்புகொண்டு பிரச்சினையை எடுத்துரைத்தார்கள்.
அதேநேரத்தில் கோவையிலே பத்திரிக்கையாளர் சுதாகர் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு சூழ்நிலையை எடுத்துரைத்தார்கள்.
மிக விரைந்து செயல்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் திரு இராஜாமணி, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்களை தொடர்புகொண்டு சூழலை எடுத்துரைத்தார்கள். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு மலப்புரம் மாவட்ட ஆட்சியாளர் சூழலைப் புரிந்துகொண்டு அந்த பிள்ளைகளை உடனடியாக தங்கள் பகுதிக்கு வருவதற்கு அனுமதித்தார்கள்.
இறுதியாக நேற்று (மார்ச் 25) மாலை ஆறு மணி அளவில் கேரள மாநில மலப்புறம் மாவட்ட அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் அங்கே இருந்து அந்த பிள்ளைகள் புறப்பட்டார்கள். பொள்ளாச்சி காவல்துறை அதிகாரிகள் அவர்களை கேரள மாநில எல்லை கடந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு பொள்ளாச்சி அரசு நிர்வாகத்தின் சார்பாக ஆடைகள் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சினையின் போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் இந்த பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள். ஆகவே நாங்கள் இந்த பிள்ளைகளை பத்திரமாக அனுப்பி வைப்பது எங்களுடைய தார்மீக பொறுப்பு என்று சொன்னார். அதே நேரத்திலேயே மலப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்த பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள் இவர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டியது எங்கள் பொறுப்பு என்று சொன்னார் .அரசு நிர்வாக அதிகாரிகள் உடைய இந்த வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்த வார்த்தைகள். பொறுப்புணர்ந்து பல அதிகாரிகளும் செயல்பட்டார்கள். குறிப்பாக உயர் அதிகாரிகளின் வசவுகளை தாங்கிக் கொண்டு இறுதி வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைப்பு நல்கிய வடக்கிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில், மைக்கேல் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறைவனுடைய மிகப்பெரிய அத்தாட்சியை இந்தப் பணியின் போது நாங்கள் நேரடியாக அனுபவித்தோம். இறைவனுடைய சோதனையும் இறைவனுடைய ஆதரவும் ஒருசேர இந்த நிகழ்வில் அனுபவிப்பதற்கான வாய்ப்பு எங்களில் சிலருக்கு கிடைத்தது. சோதனையான காலகட்டத்தில் தளர்ந்து விடாமல் ஓய்ந்து விடாமல் இறுதிவரை முயற்சியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அழகிய பாடம் எங்களுக்கு இந்த வேலையின் போது பயிற்சி அளிக்கப்பட்டது என்றே நான் கருதுகிறேன்.எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது.
எவ்வாறாயினும் ஒரு சிரமமான நேரத்தில் ஒரு பணியை எடுத்து செய்து அதை வெற்றிகரமாக முடித்து வைப்பதற்காக வேண்டி பாடுபட்ட எல்லா சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
-கே.எஸ்.அப்துல் ரஹ்மான்,மாநில பொது செயலாளர்-வெல்ஃபர் கட்சி