இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நாகை மாவட்டத்தின் சார்பாக பட்டம் விடும் திருவிழா கடந்த 20ஆம் தேதி நாகூர் கடற்கரையில் வைத்து கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. பட்டமிடும் திருவிழாவிற்கு SIO நாகை மாவட்ட தலைவர் சகோதரர்.சாதிக் அலி அவர்கள் சகோதரன் குழுவையும் வருகை தருமாறு அழைத்தார். அகமதாபாத்தில் வருடா வருடம் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவிற்கு அழைப்பது போல் உற்சாகத்தோடு அழைத்தார். அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளவே சகோதரன் குழு நாகூர் கடற்கரையை நோக்கி பயணம் மேற்கொண்டது.
நாகூர் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியதும், நாகூர் தர்காவிற்கு ஒரு விசிட் செய்து விட்டு நாகூர் தெருக்களில் ஒரு உலா வந்தோம். சிறுவர்கள் விதம்விதமான பட்டங்களோடு சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். பறவைப் பட்டம், மீன் பட்டம், பெட்டிப் பட்டம், மீனவப் பட்டம் என பலவிதமான பட்டங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிலும் குறிப்பாக மீனவப் பட்டத்தினை நான்கு சிறார்கள் ஒன்று சேர்ந்து தூக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
பட்டம் பறந்த வரலாறு:
பட்டம் விடுதல் விளையாட்டினை அழிந்து வரும் விளையாட்டாக கணக்கில் கொள்ளலாம். என்னதான் செல்பேசி பப்ஜிக்கள் வந்தாலும் இன்றும் ஆங்காங்கே பட்டங்கள் பறப்பதை நம்மால் பார்க்க முடியும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. பட்டம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சீன விவசாயிகள் தொப்பி போடும் பழக்கம் உடையவர்கள், ஒரு சீன விவசாயி தொப்பி பறக்காமல் இருக்க நூலினை தொப்பியில் கட்டி வைத்து கையில் நூலைப் பிடித்திருந்தார். காற்று அடித்தவுடன் காற்றில் தொப்பி பறக்க, அவர் நூலை இழுத்து தொப்பியை பிடித்துள்ளார். அதுதான் பட்டத்தின் முதல் தொடக்கம் என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன.
வானில் பட்டம் பறக்க வேண்டுமானால் நீண்ட எடை, குறைவான கயிறு தேவை. பட்டம் விட்டு மற்றவர்களின் பட்டங்களை அறுக்க விரும்புவோர் வஜ்ரம், மைதா மாவு, பொடி போல் உடைக்கப்பட்ட கண்ணாடிகள், அலுமினியம் ஆக்சைடு, சிர்கோனியா அலுமினியா, வண்ணப்பொடி ஆகியவை கொண்ட கலவையை நூலில் தடவி காயவைத்து பின்னர் பட்டத்தில் கட்டுவார்கள். இது பட்டம் விடுவோர், வேடிக்கை பார்ப்பவர்கள், வழியில் வண்டியில் செல்வோரின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதால் இதை பயன்படுத்துவதை காவல்துறை தடை செய்துள்ளது.
அந்த வகை நூல்களை தெருக்களில் சுற்றித்திரியும் எந்த சிறார்களிடமும் நாம் பார்க்கவில்லை. விளையாட்டாக ஒரு சிறுவனிடம் வஜ்ரம் நூலைப் பற்றி கேட்ட பொழுது, அந்த வகை நூல்கள் பட்டம் விடும் திருவிழா ஏற்பாட்டாளர்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மழலை மொழியில் கூறிச் சென்றான்.
பட்டம் பறப்பதன் அறிவியல்:
பட்டம் பறப்பதில் ஒரு விஞ்ஞான தத்துவமும் உண்டு . தனக்கு சமமான எடையுடைய காற்றை இடம் பெயரைச் செய்யும் பொருட்கள் காற்றில் பறக்க வல்லவை என்று அறிவியல் கூறுகிறது. மனிதனால் தனக்கு இணையான காற்றை இடம்பெயரச் செய்ய முடியவில்லை . எனவே அவனால் பறக்கமுடியவில்லை. பறவைகள் எடை குறைவான சிறகுகளும், குழல் போன்ற எலும்புகளும் கொண்டுள்ளன. மேலும் அவற்றின் சிறகசைவால் பெருமளவில் காற்று இடம்பெயர்வதால் அவற்றால் பறக்க முடிகிறது. பட்டம் என்பது முற்காலத்தில் இலையாலும் காகிதத்தாலும் செய்யப்பட்டு வந்தது. சதுரமான பட்டத்தின் மீது ஒரு திசையில் இருந்து காற்று மோதும். அப்போது பட்டம் காற்றின் வேகத்தை தடை செய்கிறது. பட்டத்துக்கு வெளியில் காற்று தானாக கடந்து செல்லும். பட்டத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த இடத்தை நிரப்ப பட்டத்தால் தடை செய்யப்பட்ட காற்று விழைவதால் பட்டத்தை தூக்கிக் கொண்டு செல்கிறது.
காற்றாடித் திருவிழா:
பட்டம் விடுதல் உலகளாவிய விளையாட்டாகும். சீனாவில் தோன்றி ஆசியாவில் பரவி, ஐரோப்பாவில் தடம் பதித்து, திரைகடலோடி ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பட்டம் விடுதல் விரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும், மரபையும் வரித்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஜனவரி 14ம் நாள் உலக பட்ட திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. பட்டங்களுக்கான அருங்காட்சியகம் டோக்கியோவிலும், அகமதாபாத்திலும் உள்ளன. ஜப்பானில் சுமார் 2500 கிலோ எடையுள்ள பட்டம் பறக்கவிடப்பட்டு சாதனை நூல்களில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் 5400 மீட்டர் உயரத்துக்கு பட்டம் விடப்பட்டதாக சாதனை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலவானை வண்ணமயமாக்கிய பட்டங்கள்:
மாலை நேரம் நெருங்கியதும் கடற்கரையில் சிறுவர்கள், பெரியவர்கள் என கூட்டம் களைகட்டத் தொடங்கியது. சந்தோஷப் பெருக்கோடு மாணவர்கள் பட்டங்களோடு வருகை தந்தனர். விழாவினை தொடங்கி வைத்து பேசிய இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழக பொதுச்செயலாளர் சகோதரர்.சபீர் அஹமது, வன்முறையைத் தூண்டும் கைப்பேசி விளையாட்டுகளில் இருந்து மாணவர்கள் விடுதலை பெற்று, சகோதரத்துவத்தோடு உடல் நலனைத் தரும் விளையாட்டுகளை விளையாட இத்தகைய திருவிழாக்கள் ஊக்கமாக அமையும் என்று இத்திருவிழாவை நடத்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டமும் நூல்கண்டுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. பட்டம் விடும் திருவிழா ஆரம்பமானது!
விதவிதமான பட்டங்கள் பலவித நிறங்களோடு கடற்கரையின் நீலவானை அலங்கரித்தது. குதூகலத்துடன் பிறரது பட்டங்களை தங்கள் பட்டங்களால் லாவகமாக வீழ்த்தி தங்களது திறமைகளை சிறார்கள் வெளிப்படுத்தினார்கள். நாகூரில் போட்டி நடந்தாலும் சுற்றி அமைந்த கிராமங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் இந்த காற்றாடி திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.
நாகூரில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா ஏற்பாட்டாளர்கள் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO நாகூர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்தி விட்டு பெருமகிழ்ச்சியோடு, சிறார்களின் உற்சாகத்தை மனதில் ஏந்தி நாகூரிலிருந்து விடை பெற்றோம்.
சகோதரன் குழு