நான் கடந்த 20 ஆண்டுகளாகக் கர்நாடகா மாநில விவசாயிகள் இயக்கத்தில் (Karnataka Rajya Raitha Sangha-KRRS) செயல்பட்டு வருகிறேன். அதில், குறிப்பிட்ட நினைவுகளில் ஒன்றாகப் பார்ப்பனிய சைவ உணவு சுத்தத்தை மறுக்கும் விதமாகக் கர்நாடக சட்டப்பேரவை முன் கேஆர்ஆர்எஸ் நடத்திய மாட்டுக்கறி விருந்து நினைவிருக்கிறது. மேலும், பார்ப்பனியத்திலிருந்து சாதியற்ற சமூகத்தை மீட்டுருவாக்க கிராமங்களில் சாதி மதங்களைக் கடந்து கேஆர்ஆர்எஸ் நடத்திவைத்த சுயமரியாதை திருமணங்கள் முக்கியமானவை.
‘கர்நாடகா பசுவதை தடை மற்றும் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற பெயரில் ஜனநாயகமற்ற பார்ப்பனிய சட்டத்தைச் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி. இச்சட்டம் 2020ல் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்த நிலையில், கவர்னரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டமாக நிறைவேற்றியுள்ளனர். கர்நாடகாவில் இன்று அவசரமாக இந்த சட்டத்தை நிறைவேற்றக் காரணம், ஆளும் பாஜக அரசின் மத்தியத் தலைவர்களின் கவனிப்பைப் பெறுவதாகவே இருக்கும்.
இந்த சட்டம் ஒன்றும் புதிதல்ல. தற்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவால் 2010ம் ஆண்டு பெரும்பான்மை எதிர்க்கட்சியினர்களுக்கு மத்தியிலும் முயற்சி செய்யப்பட்டது. பசுவதை தடை விமர்சகரும், பார்ப்பனரல்லாதவருமான சித்தராமையா ஆட்சிக்கு வந்த பிறகு 2013ம் ஆண்டு இம்முயற்சிகளுக்குத் தடை விதித்தார். சில தடைகளுடன் கால்நடைகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தும் மிதவாத சட்டம் 1964ம் ஆண்டு கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், நாட்டின் கடுமையான சட்டங்களில் ஒன்றாக இந்த புதிய சட்டம் ஒட்டுமொத்த கால்நடை இறைச்சி பயன்பாடுகளையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் 13 வயத்துக்குட்பட்ட எருமைகளும் அடக்கம்.
அரசியலமைப்பு கோரும் பசுவதை தடையை அமல்படுத்தவே அவசரச் சட்டத்தைப் பிறப்பித்ததாகக் கர்நாடகா அரசு கூறுகிறது. ஏனெனில், அரசியலமைப்பின் 48வது சரத்து விலங்குகள் பாதுகாப்பு குறித்து நேரடியாகக் குறிப்பிடுகிறது. அதில்,
‘வேளாண்மை மேம்பாடுகளையும் விலங்குகள் பாதுகாப்பையும் நவீன அறிவியல் வழியில் அரசு முயல வேண்டும். குறிப்பாக, விதைகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையச் செய்யவும், பசு, வீட்டு விலங்குகள், பால் தரும் மற்றும் வேலை செய்யும் விலங்குகளை வதைப்பதைத் தடுப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால், பொதுவான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதே ஒழியக் குறிப்பிட்ட வற்புறுத்தலைச் சட்டம் கோரவில்லை. அதேநேரத்தில், சரத்து 47 இதனோடு முற்றிலுமாக முரண்பட்டு நிற்கிறது. அது, ‘மக்களின் ஊட்டச்சத்து அதிகரிப்பிலும் வாழ்க்கைத்தரம் உயரவும் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறுகிறது. பார்ப்பனரல்லாதவர்கள் மற்றும் சிறுபான்மையினர் எனப் பெரும்பான்மை மக்களின் புரதச்சத்து கால்நடை இறைச்சியாக இருக்கும்போது, மாட்டிறைச்சி தடையை அரசு மேற்கொண்டால் முறையான ஊட்டச்சத்து வழங்குவது கடினமாகும்.
(அரசியலமைப்பை அமல்படுத்த நினைக்கையில்) மற்றொரு நேரடி சட்டமான சரத்து 39d, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கக் கூறுகிறது. இதில் எந்த அரசாவது ஆர்வம் செலுத்தி நாம் பார்த்துள்ளோமா?. ஏனெனில், அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றல்லாது, தமக்கு ஏற்பான பெரும்பான்மைவாத உணர்வுகளையும், அதீத தேசியவாதத்தையும் தூண்டுவதே இந்த அரசு பின்தொடர்வதாக உள்ளது என்பது தெரிகிறது. இச்சட்டம் மாட்டிறைச்சி உண்பவர்கள் மற்றும் அவர்கள் கலாச்சாரம் மீதான நேரடி தாக்குதல். தவிர, கால்நடை வளர்ப்பவர்கள், கிராமப்புற மக்கள், பால்பொருள் விவசாயிகள், இறைச்சி வர்த்தகர்கள் மற்றும் தோல்பொருள் தொழிலாளர்கள் எனப் பலரது வாழ்வாதாரத்தை அழிவுக்குள்ளாகும்.
சமூகத்தில் அச்சத்தை உருவாக்க முனைப்பாகச் செயல்படுகிறது பாஜக. ‘கௌரக்ஷாஸ்’ (பெயரளவிலான பசுக்காவலர்கள்) என்ற பெயரில் எந்த மாடும் கர்நாடகாவை விட்டு வெளியேறக் கூடாது என்று அச்சுறுத்திக்கொண்டுள்ளனர். யாரொருவர் மாட்டிறைச்சியை உண்டாலோ, விற்பனை செய்தாலோ, ஏற்றுமதி செய்தாலோ அவர்களை இவர்கள் தாக்கவும் செய்யலாம். பல ஆண்டுகளாகவே ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் கண்காணிப்பு கும்பல்கள் கர்நாடகாவில் ஈடுபட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன் கூட மாட்டைக் கடத்தினார் என்ற பெயரில் இந்த கும்பல் தாக்கிய நபரை காவல்துறை கைது செய்தது. வன்முறையில் ஈடுபடும் இந்த கும்பலை புதிய சட்டம் தடை செய்யுமா என்று நினைத்தால், ‘நல்லெண்ண நம்பிக்கையில் செயல்படுபவர்கள்’ என்று அவர்களுக்கு பெயரளித்து மாட்டிறைச்சி தொழிலாளர்களுக்கு முற்றிலும் எதிர்வினையாற்றியுள்ளது. தெலுங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இதே நிலை உருவாகும் என்று ஏற்கனவே பாஜக எச்சரித்தது. இதன் மூலம் நாடு முழுவதும் தமது செயல்திட்டத்தை அமல்படுத்தியதாக நினைப்பார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நாட்டு மாடுகளின் தொகை குறைந்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சட்டத்தினால் இந்நிலை அதிகரிக்கவே செய்யும். முதலில், விவசாயிகள் தங்கள் வயதான பசுக்களையும் எருமைகளையும் விற்பதைத் தடுப்பதன் மூலம் அவர்களால் அதனைப் பராமரிக்க முடியாது. கணிசமாக அதன் எண்ணிக்கை குறையும். இதுதான் ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து வருகிறது. பாஜக பசுக்களைக் காக்க விரும்பினால் கண்டிப்பாக விவசாயிகளை அவர்களின் மாடுகளை விற்கவும் மாட்டிறைச்சி பயன்பாட்டை அனுமதிக்கவும் வேண்டும். (வேறு வழியில்லை..!)
நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் முதற்கொண்டு விவசாயத்தில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மாற்று வேளாண் சூழலியலை முன்னெடுக்கிறது கேஆர்ஆர்எஸ். இதில் நாட்டு ரக மாடுகள் பாதுகாக்கப்பட்டு விவசாயத்துடன் ஒன்றிணைக்கப்படுகிறது. புதிய வேளாண் சூழலியலைக் கால்நடைகளைச் செயல்படுத்துவதன் மூலம் உள்ளூர் நாட்டு ரக மாடுகளைக் காக்கலாம். நிச்சயமாக மாட்டிறைச்சி நுகர்வைக் குற்றமாக்குவதால் அல்ல.
சிலர் கூறுவது போல் புதிய பசுப் பாதுகாப்பு சட்டத்திற்குக் கர்நாடக விவசாயிகள் ஒன்றும் அமைதியாக இல்லை. அனைத்து விவசாய இயக்கங்களும் ஒரே மாதிரி இருக்காது. தலித் இயக்கங்களுடன் இணைந்து கேஆர்ஆர்எஸ் தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. மாதக்கணக்கான போராட்டங்களும், மாநிலம் தழுவிய விவாதங்களும், உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. கைவிடப்பட்ட கால்நடைகளை உள்ளூர் அரசு அலுவலகங்கள் முன் நிற்கவைத்து நியாயம் கேட்கப்படுகிறது. அனைத்து இங்கிலீஷ் ஊடகங்களும் அமைதி காத்து வரும் நிலையில், கன்னட மொழி ஊடகங்கள் இதுபற்றி தொடர்ந்து பேசுகின்றன. மற்றொருபுறம், விவசாய நிலங்களைத் தனியாருக்குக் கொடுக்கும் சர்ச்சைமிக்க புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடியரசு தினத்தன்று பெங்களூருவில் 10,000 டிராக்டர் ஊர்வலத்துடன் நடைபெற்ற போராட்டம் மத்திய விவசாய சட்டத்தை மட்டும் எதிர்த்து நடக்கவில்லை, பெயரளவிலான பசுபாதுகாப்பு எதிர்ப்பில் விவசாயிகள், தலித் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்தது.
சுக்கி நஞ்சுண்டசுவாமி,
விவசாயச் சங்கத் தலைவர், கர்நாடக ராஜ்ய ராய்த சபாவின் ஈடுபாட்டாளர்.
தமிழில்; அப்துல்லா.மு
Courtesy; The Wire.