இலண்டனை விட அளவில் பெரியது, இலண்டனில் வசிப்பவர்களை விட பணக்காரர்கள் வசிக்கும் நகரம் என்று ஆங்கிலேய அதிகாரி க்ளைவ்வால் சான்றளிக்கப்பட்டதும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் (வங்கதேசம், பிகார், ஒடிசா) தலைநகராகவும் விளங்கியது முர்சிதாபாத் நகரம். மிகச் சிறந்த சான்றோர்கள் உருவாகிய நகரம். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதை.
முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வரும் தற்போதைய முர்சிதாபாத்தின் நிலை மிகவும் மோசம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியதாக இப்போது முர்சிதாபாத் உள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் ஒரு பல்கலைக் கழகம் கூட இந்த நகரத்தில் அமைக்கப்படவில்லை. முர்சிதாபாத் மாவட்ட தலைமையகம் கூட மாவட்டத்திற்கு வெளியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. கல்யாணி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரே ஒரு கல்லூரியும் மாவட்டத்தை விட்டு 200 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி என்பது முர்சிதாபாத் மாவட்ட மாணவர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வந்துள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு பல அரசியல் மாற்றங்களை வங்காளமும், முர்சிதாபாத்தும் பெற்ற பிறகும் எந்த ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் முர்சிதபாத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
முர்சிதாபாத்தில் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களையும், பிரச்சார இயக்கங்களையும் முன்னெடுத்துள்ளனர் அந்த மாவட்ட மக்களும், மாணவ அமைப்பினரும். வாகனப் பேரணிகள், கல்லூரி போராட்டங்கள், கல்வி வளாக பரப்புரைகள், மனித சங்கிலி போராட்டங்கள் என்று ஊடகங்கள், சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பல நிகழ்வுகள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க சட்டசபை நோக்கி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தினர். இந்த போராட்டம் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. பேரணியின் முடிவில் துணை முதல்வரை சந்தித்து முர்சிதாபாத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்த போராட்டங்களின் பலனாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் அவர்கள் முர்சிதாபாத் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஆனாலும் இந்த உத்தரவு எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே மக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது.