/சிஏஏ தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தக் கூடியது. ஆனால் என் ஆர் சி எல்லா நாட்டுக்கும் தேவையானது. நம் நாட்டுக்கும் தேவையானது// என்று கொஞ்சம் பேர் சொக்காட்டானை உருட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.. இவர்கள் எல்லாரும் “என்ஆர்சியில் பேர் இருக்கிறதோ, இல்லையோ அதுகுறித்து எந்த ஒரு இந்துவும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்ற மோகன் பகவத்தின் பேச்சையும், “என்ஆர்சி குறித்து இந்துக்கள், புத்தர்கள், கிருத்துவர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்கிற அமித்ஷாவின் உத்திரவாதத்தையும் ஒரு முறைக்கு பத்து முறை வாசிப்பது நல்லது.
சிஏஏவில் அதிகாரம் பூர்வமான வார்த்தைகளாக இடம் பெறும் மத ரீதியான வெறுப்பு, என்ஆர்சியில் நிர்வாக ரீதியில் உணர்த்தப் படுகிறது. ஒரு சட்டத்தை வெறுமனே அதனுடைய வாசகங்களைக் கொண்டு பார்ப்பதை விட அதன் சாரத்தைக் (spirit) கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதே சிறப்பு. இங்கே வந்து நின்றுகொண்டு “வந்தேறிகளால் எவ்வளவு பிரச்சினை, அதையெல்லாம் களைய வேண்டியது தேசத்தின் கடமையல்லவா.. சீர்செய்ய வேண்டிய எவ்வளவோ பிரச்சினை இருக்கிறதே.. எங்காவது தொடங்க வேண்டாமா” என்றெல்லாம் தலையில் மிளகாய் அரைப்பது அளவுக்கு மீறிய சாமர்த்தியம். வீட்டில் ஈத்தொல்லை இருக்கிறது.. அது உணவுப் பொருளில் உட்கார்ந்து சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது அதற்காக உணவின் மீது பேகான் ஸ்பிரே அடிப்பீர்களோ? அப்படித்தான் இங்கே இரட்டைக் கிளவியான சிஏஏ – என்ஆர்சி யைப் பிரித்து பொருள் சொல்லிக் கொண்டு எழுபதாண்டு ரத்தமும் சதையுமாக நடமாடிக் கொண்டிருந்த மனிதனை கிருமியாக கருதி பூச்சி மருந்து அடிக்கிறார்கள்.
இவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் ‘ஒருநாள் இரவு உன் பாக்கெட்டில் உள்ள பணம் செல்லாது’ என்று நடுத்தெருவில் நிறுத்திய அரக்கத்தனத்தை, தேசத்தை உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் வைக்கும் வீரதீர பராக்கிரம செயலாக வர்ணித்தவர்கள். அதற்கு எதிராக பேசியவர்களை குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பவர்களாக கூசாமல் பேசிய குணவான்கள். அதே போல் தான் இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் என்ஆர்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் பதட்டமாகிறீர்கள்.. நீங்கள் என்ன வந்தேறிகளா” என்று அழகாக முடிச்சவிழ்க்கிறார்கள். பணமதிப்பழிப்பில் செத்துப் போனவர்கள் யார் – கோடிக்கோடியாக கணக்கில் வராத வருமானத்துக்கு சொந்தக்காரர்களா.. அதைவிட ஏழை பாழைகளுக்கு – அன்றாடங் காய்ச்சிகளுக்கு – அளவிட முடியாத துயரங்களைக் கொண்டு வந்து அலைக்கழிக்க விடப் போவதுதான் என்ஆர்சி.
கோளாறான ஒரு விமானத்தில் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு இக்கட்டானதொரு தருணத்தில் வெளியே பிடித்துத் தள்ளுவது என்ஆர்சி என்றால், அப்படியானதொரு இக்கட்டான நேரத்தில் ஆள்பார்த்து வழங்கப்படும் பாராச்சூட் தான் சிஏஏ..
காப்பி நமக்கு தேவைதான்.. ஆனால் விஷம் கலந்த காப்பி நம்முன் நீட்டப்படுகிறது.. அதன் விச(ய)மும் நமக்கு தெரிந்தே இருக்கிறது. அதற்குப் பிறகும் காப்பியைத் தட்டிவிட பார்ப்போமா அல்லது விசத்தை நீக்கிப் பருகுவது குறித்து விசம் வைத்தவனுடன் வாதிட்டுக் கொண்டிருப்போமா..?
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்