காணாமல் போகும் கருத்து சுதந்திரத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை
இந்தியாவில் கருத்து சுதந்திரம் மிக அபாயகரமான நிலையில் உள்ளது. இது கருணாநிதியை அவரது பிறந்த நாளான ஜீன் 3 ஆம் தேதி அன்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தபின் மூத்த பத்திரிக்கையாளர் ‘இந்து’ ராம் செய்தியாளர்களுக்கு கூறிய வார்த்தைகள். 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களும், அவரது ஆதரவாளர்களும் தங்களது கருத்தை சுதந்திரமாக பேச தொடங்கினர். அந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரான விஷம கருத்துக்களாகவே இருந்தன. உதாரணமாக ராமனை வணங்காதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள், பா.ஜ.க வை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை அவர்கள் பேசுவதற்கு முழு கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது இன்றும் அளிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க வை விமர்சிப்பவர்களும் அவர்களுடைய ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருபவர்களுக்கான பேச்சு சுதந்திரம் என்பதும், கருத்து சொல்லும் சுதந்திரம் என்பதும் தடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு பேசுபவர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற ரீதியிலான செயல்களை ஆர்.எஸ்.எஸ் வழி வந்த இந்துத்துவவாதிகள் இந்தியா முழுவதும் அரங்கேற்றி வருகின்றன. அது பெரியாரின் பூமியான தமிழகத்திலும் நடத்தப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வந்த பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்திற்க்கு விதிக்கப்பட்ட தடை தான். அவர்கள் செய்த தவறு மத்திய அரசிற்கு எதிராக கருத்து கூறியது, நிகழ்ச்சிகள் நடத்தியது அவ்வளவே. இந்த தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு அந்த தடை திருப்பி பெற வைக்கப்பட்டது என்பது வேறு கதை. ஆனால் சென்னை ஐ.ஐ.டியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட வரலாறு மோடி அரசு பதவியேற்ற ஓர் ஆண்டில் நடந்தேறியது.
சென்னை ஐ.ஐ.டியைத் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீதான கைது நடவடிக்கை தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலக படுகொலைகள் அரங்கேறின. அதே ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் நஜீப் காணாமல் போய் நஜீப் எங்கே என்கிற கேள்வி இன்று வரை நீண்டு கொண்டே தான் இருக்கிறது.
மாணவர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இருக்கக் கூடிய சூழலில்தான் கெளரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட எழுத்தாளர்களும் அவ்வபோது கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருந்தார்கள், தங்களுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்த காரணத்தால்.
இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கருத்துரிமையை பறிக்கும் செயலில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு கொண்டே தான் இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டிலும் முழு வீரியத்துடன் அந்த பணி நடந்து கொண்டு இருக்கிறது கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக. ஆம் மத்திய அரசின் ஆதரவோடு செயல்படும் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு.
தற்போது உள்ள அ.தி.மு.க அரசு தங்களை விமர்சிப்பவர்களையும், தங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கூட பொறுத்துக் கொள்வார்கள் போல, ஆனால் தங்களின் எஜமானர்களான மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து போராடினால் அவர்களை குண்டர் உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்து அவர்களோடு சேர்த்து கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் சிறையில் அடைத்த நிகழ்வுகளும் நடந்தன, மத்திய அரசின் உத்தரவின் பேரில். இவ்வாறு தனி மனிதர்கள் மீதும், சில அமைப்புகளின் மீதும் நிகழ்த்தப்படும் இத்தகைய கொடுமை ஊடகங்களின் மீதும் நடந்து வருவது தான் வேதனையின் உச்சம்.
கருத்தை மக்களிடம் சேர்ப்பதற்க்குதான் ஊடகங்கள், ஆனால் அதை மறந்து அவர்களுக்கான பத்திரிகை சுதந்திரம் இன்றைய ஆட்சியாளர்களால் பறித்து வரப்படுகிறது. உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. பத்திரிகை சுதந்திரம் பல நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் வெளிப்படையாகவும் பறிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் கோவையில் நடத்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத்திய அரசை விமர்சித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்த இயக்குனர் அமீர் அங்கு கூடியிருந்த பா.ஜ.கவினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரை தாக்குதல் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன் மற்றும் தனியரசால் அமீர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நிலையில் கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமீரை மிரட்டியவர்கள் மீது அல்ல தனது கருத்தை விவாத நிகழ்ச்சியில் பதிவு செய்த அமீர் மீதும் அந்த நிகழ்ச்சியை நடத்திய தனியார் தொலைக்காட்சி மீதும்.
மக்களுக்கு கருத்தை எடுத்து சொல்ல ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். விவாதத்தில் பா.ஜ.க வின் தலைவரும் கலந்து கொண்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் அவரும் அவரை சார்ந்த பார்வையாளர்களும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தொலைக்காட்சி மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர். சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகத்தை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
எமெர்ஜென்சி கால கட்டத்தில்தான் இவ்வாறு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டள்ளது. மற்ற மாநிலங்கள் அது குறித்து எதுவும் பேசாமல் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த சில பத்திரிக்கைகள் மறைமுகமாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். முரசொலி நாளிதழில் கலைஞர் கருணாநிதி எமர்ஜென்சியையும், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதையும் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.
இன்றும் கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வார்த்தை என்பதை தங்களை விமர்சிப்பவர்களுக்கு பயன்படுத்தவே அனுமதிக்க கூடாது என இன்றைய மத்திய அரசு செய்து வருகிறது. 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அறிவிக்கப்படவில்லை. இது மட்டுமே வேறுபாடு, மற்றபடி எமர்ஜென்சியின் போது நடந்த நிகழ்வுகள், இல்லை அதை விட அதிகமான கொடுமைகள் தற்போது நடந்து வருகிறது என்பது தான் அரசியல் நோக்கர்கள் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வழங்கிய உரிமைகளில் மிக சிறந்த உரிமை. ஆனால் அதை அழிக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை உடனடியாக தடுக்கவில்லையென்றால் இன்று அபாயகரமான சூழலில் உள்ள கருத்து சுதந்திரம் அதள பாதாளத்தில் போடப்பட்டு புதைக்கப்பட்டு விடும். அதைத் தடுக்க பத்திரிக்கைகள், ஊடகங்கள் என அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராட வேண்டும், அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருக்க வேண்டும்.
– முஜாஹித்
ஊடகவியலாளர்