இந்தியாவில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான விஷயம். ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தவர்களின் பயணத்தில் தடைக்கல்லாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் படிக்கல்லாகவும் மாறிய ஒன்று. எப்படியாவது இந்த இடஒதிக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் சில கும்பல்கள் ஓயாது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் இட ஒதிக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்பதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் இட ஒதிக்கீட்டைக் குறித்த தெளிவான புரிதல் இல்லாமலும் அதை பாதுகாக்க வேண்டிய தேவையை உணராமலும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இடஒதுக்கீடு சாதிய, சமூக பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது பொருளாதார மற்றும் கல்வி அடிப்படையில் அல்ல. பல நூற்றாண்டுகளாக சாதிய, சமூக பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தேசிய வளங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தங்களின் சரியான பங்கைப் பெற முடியாத நிலைமைதான் இருந்தது. சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வியில் உரிய உரிமைகள் மறுக்கப்பட்டே வந்தார்கள்.
பண்டைக்கால இந்தியச் சமூகத்தில் ஆரியர்களின் வருகைக்கு பிறகு பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என கூறு போடப்பட்டு ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் தகுதிகளும் வாழ்வியல் சூழல்களும் தீர்மானிக்கப்பட்டன. குலக்கல்வியின் மூலம் அறிவும் அதிகாரமும் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு அதாவது பிராமண சமூகத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தனர்.
சூத்திரர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்களும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களும் அவர்தம் மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவங்களை பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு பேராபத்து என்பதை உணர்ந்து கொண்டதன் காரணத்தால் பல்வேறு தலைவர்களின் போராட்டங்களின் மூலமாகவும் அம்பேத்கரின் சட்ட விழிப்புணர்வின் மூலமாகவும் அவர்களை மற்றவர்களுடன் இணையாகக் கொண்டுவருவதற்காக வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% இட ஒதிக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். இருப்பினும் இன்றும் கூட மத்திய அரசின் நிறுவனங்களில் குறிப்பாக உயர் கல்வி நிலையங்களில் 27% இட ஒதிக்கீடு கூட முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. முழுக்க முழுக்க பிராமண பேராதிக்கம்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் 1980ல் அன்று முதல்வராக இருந்த திரு எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதிக்கீட்டை 50% உயர்த்தினார். அதன்பிறகு முதல்வர்களாக இருந்த திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரால் 69 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
மகாராஷ்டிராவிலும் மண்ணின் மக்களான மராத்தாக்களுக்காக கூடுதல் இட ஒதிக்கீடு அளிக்கப்பட்டது.
19/11/1992ல் உச்சநீதிமன்றம் இட ஒதிக்கீடு 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்ற உத்தரவை இட்டது.
அதற்கு எதிராக 31.12.1993ல் அன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா 69% இட ஒதிக்கீட்டை பாதுகாக்கும் பொருட்டு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றினார். 1994 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் தமிழ்நாட்டின் 69% இட ஒதிக்கீடு இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய இடஒதுக்கீடு அரசு வேலைகளில் மட்டுமே உள்ளது. தனியார் துறையில் இல்லை. தகுதிவாய்ந்த நபர்களுக்கே வேலை என்பதே தனியார் துரையின் தாரக மந்திரம். பெரும்பாலும் அந்த தகுதியை சாதியும் மதமுமே தீர்மானிக்கின்றன…
பாகுபாடு காரணமாக இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் அனைத்து அளவுருக்களிலும் பின்தங்கியிருப்பதாக சச்சார் குழு அறிக்கை கூறுகிறது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு (முஸ்லிம்களுக்கு 10% மற்றும் பிற சிறுபான்மையினருக்கு 5%) பரிந்துரைத்தது. அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மிஸ்ரா கமிஷன் ஒரு மாற்றீட்டை பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மையினருக்கு ஓபிசி பிரிவின் கீழ் 8.26% இட ஒதுக்கீடு (முஸ்லிம்களுக்கு 6% மற்றும் பிற சிறுபான்மையினருக்கு 2.4%) வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்களுக்கான இட ஒதிக்கீடு அளிக்கப்படுகிறது. தலித், ஆதிவாசி சமூகங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட முஸ்லிம் சமூகத்திற்கு கிடைப்பதில்லை. சச்சார் ஆணையத்தின் அறிக்கையின் படி முஸ்லிம் சமூகம் தலித் சமூகத்தை விட பின்தங்கியே உள்ளது.
இடஒதுக்கீட்டின் மூலம் ஏற்பட்டுள்ள நேர்மறையான விளைவுகளுக்கான சமூக அறிவியல் சான்றுகள் வலுவானவையாக உள்ளன. இட ஓதிக்கீட்டின் மூலம் இந்தியாவில் வாழும் தலித், ஆதிவாசி மக்களிடையே கல்வி ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. NSSO 2004 – 2005 அறிக்கையும் 2017 – 2018 தொழிலாளர் நல அறிக்கையும் அதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அம்முன்னேற்றம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பிரதிபலிக்கவில்லை என அறிக்கை கூறுகிறது.
உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு 50% வரம்பை நிர்ணயிப்பது என்பது தன்னிச்சையானது மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. ஓபிசியின் மக்கள் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இட ஓதிக்கீட்டின் வரம்பை தீர்மானிக்கும் உரிமையை மாநிலங்களுக்கு விட வேண்டும். ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர் வரம்பை தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான்.
நூற்றாண்டு கால போராட்டங்களுக்குப் பிறகு இன்னமும் கிராமப்புறங்களில் சாதி பாகுபாடு இன்னும் பொதுவானதாகவே உள்ளது. பெற்றோரின் தொழில் மற்றும் கல்வி சூழல் உயர்ந்தாலும் சமூக புறக்கணிப்புகள் நடைமுறையில்தான் உள்ளன. இட ஒதிக்கீட்டை மெல்ல மெல்ல இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளை சட்டப் பூர்வமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் ஆர்.எஸ்.எஸ் செய்து கொண்டிருக்கிறது.
சமூக நீதியும் சமத்துவமும் நிலை பெற வேண்டுமெனில் இட ஓதிக்கீடும் இருக்க வேண்டும்.
இஸ்லாமும் அதைதான் வலியுறுத்துகிறது. சமூக நீதியை நிலை நாட்டுவது தீனை நிலைநாட்டுவது என்பதாகவும் இறைவனுக்கு சான்று வழங்குவதாகவும் குர்ஆன் கூறுகிறது. உரியவர்களுக்கு உரிய உரிமையை அளிப்பதையே ‘கிஸ்த் – நீதி’ என்ற சொல்லாடல் மூலமாக குர்ஆன் எடுத்தியம்புகிறது. கண்ணியமும் உரிமையும் அந்தஸ்தும் சமமாக்கப்பட வேண்டும். கல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் சமூக அந்தஸ்தும் அரசியல் அதிகாரமும் பிறப்பின் சாதியின் மதத்தின் இனத்தின் பெயரால் மறுக்கப்படக் கூடாது. அது இறை அதிகாரத்திற்கு எதிரானது. உரியவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத்தர வேண்டியது இறைநம்பிக்கையாளர்களின் அடிப்படை கடமையாகும்.