பாசிசத்தின் வெளிப்பாடான நீட்டை அழிக்காவிட்டால் மரணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், காரணம் பாசிசத்தின் நோக்கம் மக்களை அளிப்பதே.
மருத்துவப்படிப்பில் சேருவதற்க்கான நீட் தகுதி தேர்வால் தமிழகத்தில் நிலவி வரும் சமூக நீதி பாதிக்கப்படும்,மாணவர்களின் மருத்துவ கனவை தவிடுபொடியாக்கும்,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர போதுமான தகுதியாக உள்ளது, எனவே இத்தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறி வந்தன.2016 ஆம் ஆண்டு ஓர் ஆண்டிற்கு தமிழகத்திற்கு விலக்கு பெற்று தமிழக மாணவர்களின் நலன் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக நீதியை காத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் அவர் மறைவுக்கு பின்பு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அவருடைய அடிவருடிகள் 2017 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஜெயலலிதா போல உறுதியோடு நின்று பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காததால் அந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்திற்க்கும் கட்டாயமாக்கப்பட்டது.மருத்துவ கல்லூரியில் சேருவதற்க்கான அத்தனை தகுதிகள் இருந்தும் நீட் தகுதி தேர்வால் தமிழக மாணவர்களின் குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டது.எந்த அடித்தட்டு மக்களுக்காகவும்,ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்க்காகவும் தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் போராடினார்களோ அந்த ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த தகுதி தேர்வினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.அதில் ஒரு அடி மேலே போய் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார்.பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் பெற்ற மதிப்பெண் 1176.மருத்துவ கல்லூரியில் சேர அவருக்கு அத்தனை தகுதிகள் இருந்தும் மத்திய அரசின் நீட் திணிப்பால் அவர் (தற்)கொலை செய்து கொண்டார்.இந்த தேர்விற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவரால் அந்த கொடிய அரக்கனான நீட்டை தடுக்க முடியவில்லை.உச்சநீதிமன்றமும்,மத்திய அரசும் தமிழக மக்களையும் அனிதாவையும் நம்ப வைத்து ஏமாற்றியது.அதுவே அவரை தற்கொலைக்கு தூண்டியது.
அவருடைய மரணத்திற்கு பின் இனியும் அனிதா போன்ற ஒரு உயிரும் நீட்டின் பெயரால் பறிபோய் தமிழகம் சுடுகாடாய் மாறி விடகூடாது என்பதற்காக அவருடைய மரணத்திற்க்கு நீதி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் போராடியது.ஆனால் இறந்தது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவி என்பதாலோ என்னவோ மத்திய,மாநில அரசுகள் அந்த போராட்டத்தை குறித்தோ,அனிதாவை குறித்தோ,தமிழக மாணவர்களை குறித்தோ கவலைப்படாமல் மக்களுக்கெதிரான அடுத்த திட்டம் குறித்து சிந்திக்க தொடங்கின. போராட்டங்களும்,முழக்கங்களும் அத்தோடு அடங்கியது.
நீட்டை எதிர்த்து போராடாமல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தது.இதன் மூலம் மத்திய அரசிடம் நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்கமாட்டோம் என சொல்லாமல் சொல்லியது தமிழக அரசு.
அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் நீட் தேர்வை மத்திய அரசு நடத்தியது.தமிழக மாணவர்கள் மருத்துவர் ஆகவிட கூடாது என்பதையே நோக்கமாக கொண்டிருந்த மத்திய அரசு இம்முறை நீட் தேர்வில் வேறு சூட்சமம் செய்தது. ஒன்று தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பியது. இதனால் திருவாரூரை சேர்ந்த ஒரு மாணவரின் தந்தை கேரளாவில் மரணமடைந்தார்,அடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கேள்வி தாள்களில் சில குளறுபடிகளை செய்தது. இவை தவறுதலாக நடக்க வாய்ப்பில்லை, திட்டமிட்டே தீட்டப்பட்ட சதி தான் என்பது மத்திய அரசு தமிழகத்தை அணுகும் விதத்தை வைத்து அறியலாம்.இவ்விரு உளவியல் தாக்குதலில் சிக்கி தான் தமிழக மாணவர்கள் இம்முறை நீட்டை எதிர்கொண்டனர். அதன் தேர்வு முடிவுகள் ஜீன் 4 ஆம் தேதி வெளியானது.இதில் தமிழக அளவில் முதலிடத்தை சென்னை சேர்ந்த கீர்த்தனா என்கிற சி.பி.எஸ்.சி பாடதிட்டத்தில் பயின்ற மாணவி பிடித்தார்.அதே நேரத்தில் செஞ்சியை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் விஷமருந்தி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.இவர் கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1125 மதிப்பெண் பெற்று 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 159 மதிப்பெண் பெற்றுள்ளார்.அவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பிருந்தும் அங்கு பல லட்சம் கட்டி படிக்க வசதியில்லாததால் மீண்டும் அவர் இம்முறை நீட் தேர்வை எழுதினார்.ஆனால் தற்போது அவர் 39 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார்.இதனால் அதிர்ச்சியும்,விரக்தியும் அடைந்த பிரதீபா கேள்வி தாளில் ஏற்பட்ட குளறுபடி குறித்தும்,அதற்கான மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த முறையும் நீட் தனக்கான உயிர்பலியை தமிழகத்திலிருந்து வாங்கி விட்டது.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என உரக்க கூறிவந்தாலும் அதை காதில் வாங்காமல் இருந்து வரும் மத்திய அரசும்,அவர்களை எதிர்க்காத மாநில அரசும் தான் இவரின் மரணத்திற்கு காரணம்.
பொது தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் கூட தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என சில அறிவுஜீவிகள் கேட்கலாம்.அவர்களுடைய வாதம் ஏற்புடையது தான்.அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் தன்னம்பிக்கையை விதைக்காத,மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் கல்வி முறை தான்,அது மாற்றப்பட வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கோரிக்கை.ஆனால் அந்த கல்வி முறை எந்த வகையிலும் மாணவர்களின் கனவை சிதைக்கவில்லை,சமூக நீதியை அழிக்கவில்லை இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் மட்டும் தான் சமசீரான கல்வி முறை இருந்து வருகிறது சமத்துவத்தையும்,சமூக நீதியையும் பெரியார்,அண்ணா விடமிருந்து கற்ற கருணாநிதியால்.
ஆனால் நீட் தகுதி தேர்வு என்பது நான் என்னவாக வேண்டும் என்பதை சிறு வயது முதல் கனவு கண்டு அதற்கான தயாரிப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஒரு மாணவனை உன்னுடைய கனவு என்பதை நாங்கள் நினைத்தால் மட்டுமே நிறைவேற்ற விடுவோம் என்கிற பாசிசத்தின் வெளிப்பாடு.
பாசிசம் என்பது ஒரு போதும் மனிதர்களை வாழ விடாது.அதன் நோக்கமே மக்கள் அழிய வேண்டும் என்பது தான்.அத்தகைய பாசிசத்தால் உருவாக்கப்பட்ட நீட்டால் சென்ற ஆண்டு அனிதா,இந்த ஆண்டு பிரதீபா, சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டுள்ளனர்.இனியும் இந்த அரக்கனை தமிழகத்தில் வாழ விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அனிதாக்களையும்,பிரதீபாக்களையும், சுபஸ்ரீக்களையும் இழக்க நேரிடும்.இதை உடனடியாக அழிக்க அரசால் மட்டுமே முடியும் செய்வார்களா அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்…..?????