இந்திய ஒன்றியத்தை வடக்கு தெற்கு என்று பிரித்து ஒப்பிடுவது அடையாள அரசியலோடு சுருங்கிவிடுவதல்ல. இந்த எதிரெதிர் முரணுக்கு இடையில் நீண்டகால வரலாற்றுப் போக்குகள் உள்ளது. அவை, பல்வேறு மாறுபட்ட தன்மைகளை தம்முள் கொண்டுள்ளன. இரண்டு எதிர் துருவங்களுக்குப் பின்னணியில் அடிப்படையில் பன்முக கூறுகள் உள்ளன. இந்தியாவில் இந்து-முஸ்லீம் என்ற முரணையும் அவ்வாறுதான் பார்க்க வேண்டும். பொதுவான வரலாறு இஸ்லாமியர்கள் பக்கம் இஸ்லாமிய ஆட்சியாளர்களையும், இந்துக்களின் பக்கம் உயர்சாதி பார்ப்பனர்களையும் ஒப்பிட்டே எழுதப்பட்டுள்ளது. மாறாக, பார்ப்பனர்களால் தீட்டு கடைப்பிடிக்கப்பட்ட மாப்பிளா முஸ்லீம்கள் போன்ற அடித்தள மக்களின் வாழ்வியல் பெரிதும் பேசப்படவில்லை.
இஸ்லாமிய ஆட்சியாளர்களை இந்துக்களோடு ஒப்பிட்டு இந்து-முஸ்லீம் முரணை விளக்குவது ஒருவித அரசியல் செயல்பாடு. இதன்மூலம், இஸ்லாமியர்கள் இந்துக்களை அடக்கி ஆண்டார்கள், அதிகாரம் செலுத்தினார்கள், கொடுமைப்படுத்தினார்கள், அவர்கள் உரிமையை தட்டிப்பறித்தார்கள் என்ற பொது உளவியல் இயல்பாகவே இந்துக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகிறது. இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கூட அது ஏற்புடையதுதான், அதற்கு நமக்கு வரலாற்று நீதியிலான நியாயம் உள்ளது என்றளவிற்கு இந்த பிரச்சாரங்கள் வந்து நிற்கிறது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ‘ராமர் கோவில்’ என்ற கற்பனையான வரலாற்றுக் காரணம் இருந்ததுபோல், கும்பல் படுகொலை செய்யப்படும், பல்லாண்டுகளாக விசாரணையின்றி சிறை வைக்கப்படும், வன்புணரப்படும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்குப் பின்னும் ஓர் வரலாற்றுக் காரணம் உள்ளது.
இத்தகைய கற்பனையான வரலாற்றை உருவாக்கியதுதான் இந்துத்துவ இயக்கங்களின் முக்கிய அரசியல் வெற்றி. இந்துத்துவ அரசியலை அடியாட்களின் ரவுடித்தனங்கள், முட்டாள்களின் செயல்பாடு என்று குறைத்து மதிப்பிடுவது அறியாமை. பாப்புலிச அரசியலில் மூழ்கிய சமூக வலைத்தள மனோபாவங்களுக்கும், ஜிப்ஸி போன்ற அடையாள சினிமாக்களுக்கோ மட்டும் இது போதுமானதாக இருக்கலாம். ஆனால், எதார்த்தம் வேறு. சாதி என்ற கற்பனையான புனைவு பல ஆண்டுக்காலம் இந்திய நிலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது அதன் இருப்பை சுலபமாகக் கடந்துவிட முடியுமா அல்லது இல்லாத ஒன்றை எதிர்த்து பயன் என்ன என்று இருந்துவிட முடியுமா. ஒரு புனைவு (Myth) அதிகாரமாகும்போது அதை வலிமையாக எதிர்க்க வேண்டும். அத்தகைய புனைவுதான் இந்திய இஸ்லாமியர்களின் இருத்தலுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு வீழ்ந்தது என்பதற்குக் குறிப்பிடத்தக்கக் காரணம் கூற முடியாது என்கிறார்கள் ரொமிலா தாப்பர் உட்பட்ட வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், அது வீழ்ந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் ஆரியர்கள் வடமேற்கு இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுவிருனர். ஆனால், ஆரியர்களின் மூத்த வேதமான ரிக் வேதம், ஆரிய படையெடுப்பைச் சிந்து நாகரிக வெற்றியாகப் பறைசாற்றி எழுதப்பட்டது. முதல் திட்டமிட்ட புனைவு இங்கிருந்து தொடங்குகிறது. இதில் தொடங்கி அடுத்தடுத்து தம் நலன் சார்ந்த, தமக்கு வேண்டியதை ஏற்றுக்கொண்டு, வேண்டாததை எதிர்த்து என தமக்கான கதைகளை எழுதினார்கள் ஆரியர்கள். இவை, இன்று இந்திய வரலாறு எனப் போதிக்கப்படுகின்றன.
இந்திய வரலாறு என்பதுதான் இன்றைய இந்தியத் தேசத்தின் இறையாண்மை. அதை மறுப்பது, இந்தியத் தேசத்திற்கு எதிரான நிலைப்பாடாகும். ராமர் கோவிலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரலாற்று ரீதியில் விளக்கம் கொடுப்பதும் இதன் பொருட்டே அமையும். இதன் போக்கைக் கட்டுடைத்து கலகம் செய்தார் சர்ஜில் இமாம். கணிப்பொறியியில் மற்றும் நவீன வரலாற்றை கற்ற இமாம் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அடையாளமாக உருவாகியவர். இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று கூறிவரும் இந்தியத் தேசியத்தின் மீது கடுமையான விமர்சனம் செய்தவருமான இமாம் கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்தியாவை வட கிழக்கிலிருந்து உடைத்தால் என்னாகும் என்று பேசிய இமாம், பிரிவினைவாதி என்று கூறி கைது செய்யப்பட்டார். அலிகர் பல்கலைக்கழகத்தில் பேசிய இமாமின் குறிப்பிடத்தக்கப் பேச்சில் ஓர் உதாரணத்திற்காகவே இந்தியாவை வடகிழக்கிலிருந்து முற்றுகையிட்டால் என்னாகும் என்று பேசியிருப்பார். இந்தியத் தேசியத்தின் மீது சிறு விமர்சனம் வைத்தாலும் அவர்களைக் கைது செய்யும் முரட்டுத்தனத்தை அடிப்படையிலேயே கொண்டுள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டம். அது ஒருவித புனிதப்படுத்தல்களையும், பாசிச கூறுகளையும் தன்னுளேயே கொண்டுள்ளது. அதனால், இந்திய வரலாற்றில் ஒரு அங்கமாகவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார் சர்ஜில் இமாம். இரண்டும் குறிப்பிட்ட சாராரின் நலனை மட்டுமே தாங்கி நிற்பது.
அரசியலமைப்பில் ‘பாரத்’ என்ற பெயரை இந்தியத்தின் அடையாளமாகத் தாங்கி நிற்கும் இந்துத்துவ சொல், பெயரளவில் மட்டுமல்ல அதிகார பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளிலும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் போன்றவர்களை வெளியே நிறுத்தியது என்கிறார் இமாம். சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியல் சூழல் அனைத்து விதங்களிலும் இஸ்லாமியர்களை ஒடுக்கியது என்பதை பெர்ரி ஆண்டர்சன், கிறிஸ்தோப் ஜாஃரிலாட் போன்ற இந்தியாவைக் குறித்து ஆய்வு செய்யும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இங்குதான் இந்திய ஆய்வாளர்கள் பக்கம் நம் கவனத்தைக் குவிக்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் மாற்றுப் பார்வையை மார்க்சிய அறிஞர்களான தேவிபிரசாத் சட்டோபாத்யா, ராகுல் சங்கிருதியாயன் போன்றவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவை பெரும்பாலும் மரபான முற்கால வரலாறுகள். முற்கால இந்தியாவின் நிலையை அறிய அவை பெரிதும் நமக்கு உதவும். ஆனால், பிற்கால விவகாரங்களைப் பற்றிய அறிதல் நமக்குப் போதாமையாக உள்ளது. குறிப்பாக, காலனித்துவ ஆட்சி நிலவரம், தேசியவாத விடுதலை அரசியல் மற்றும் இந்தியப் பிரிவினை.
சர்ஜில் இமாமின் முனைவர் பட்ட ஆய்வுகள் இதனை மையப்படுத்தி இருப்பதால், இதில் அதிகம் கவனம் குவித்துள்ளார். வட இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்ட அரசியல் காங்கிரசை மையப்படுத்தியது. காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடு தேசவிரோத செயல்பாடாக முத்திரை குத்தப்பட்டு வந்தது. காங்கிரசிலிருந்து அதிருப்தியற்று வெளியேறிய இஸ்லாமியர்கள் மதவாதிகள், பெரியார் போன்ற பிராந்திய அரசியல்வாதிகள் பிரிவினைவாதிகள், ஆங்கிலேய ஆதரவாளர்கள் என்று குறுக்கப்பட்டனர். வட இந்தியாவில் காங்கிரசிற்கு எதிரான அரசியலைத் தலித் மக்களின் கோணத்தில் பேசியவர் டாக்டர் அம்பேத்கர். காந்தியையும் காங்கிரசையும் விமர்சித்த அவர் காங்கிரஸால் பல இடங்களில் பழிவாங்கப்பட்டார். அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கம் எவ்வாறு இருந்தது என்றால் அது இந்துத்துவ அரசியலின் முழு வடிவமாக இருந்தது. ஆதலால், இமாமின் முதன்மை இலக்காக என்றும் காங்கிரஸ் இருக்கிறது.
குடியுரிமை போராட்ட மேடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸை விடக் காங்கிரசையே முதன்மையாகக் கண்டித்தார் இமாம். குறிப்பாக, காந்தியை இந்துத்துவ எழுச்சியின் ஊற்றுக்கண்ணாகப் பார்த்தார். இது ஒருவிதத்தில் உண்மையும் கூட. இதே கருத்தை ஒற்றி காந்தியைக் கடுமையாக விமர்சித்தவர் பெரியார். ஆனால், காந்தியை முழு எதிரியாக வெறுதொத்துக்கும் அளவிற்கு நிறுத்திவிடலாமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், அதே காந்திதான் மதவாத அரசியலின் பலியானார். அதேநேரத்தில், இஸ்லாமியர்களும் தலித்துகளும் காந்தி மீது கொண்ட தார்மீக கோபத்தைத் தேசியவாதிகள் ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டும்.
பாஜக, ஆர்எஸ்எஸின் அரசியல் காங்கிரஸிற்கு அடுத்துத்தான் என்று இமாம் சொல்லும் வரலாற்றில் கவனத்தைக் குவிப்பது அவசியம். காங்கிரஸ் கட்சி உயர்சாதி எலைட்களின் கூடாரம். அது பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் அப்பட்டமாகத் தாங்கி நின்றது. அவர்களின் நலனே அதன் இறையாண்மையையும் கூட. அப்படியிருக்கையில், மற்றவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். காங்கிரசின் தேசியவாத அரசியல் பார்ப்பனிய வரலாற்றின் தொடர்ச்சி. இந்துத்துவ அடையாளங்களின் மீட்டுருவாக்கமாகவே அதன் அரசியல் எழுச்சிப் பெற்றது. திலகரின் பிள்ளையாரும், காந்தியின் ராமரும் அங்குக் காட்சியளித்தனர். இந்திய வரலாறே பண்டிட்களின் வரலாறுதான் என்று கூறும் இமாம், அதன் தொடராகக் காங்கிரஸ் அரசியலைப் பார்த்தார்.
விடுதலைக்குப் பின்பு இதன் நிலை மோசமானது. உதிரி இந்துத்துவ இயக்கங்களின் வளர்ச்சியும் சேர்ந்துகொண்டன. இந்துத்துவ அரசியல் இந்திய இறையாண்மையாகவும், செக்குலர் விளம்பரமாகவும் உருவெடுத்தன. நவீன சிந்தனையாளரும் செக்குலர்களின் புகழ்பெற்ற தலைவரான நேரு, இந்திய வரலாற்றைப் பார்ப்பனிய வழியில்தான் கண்டடைந்தார். தற்போது வாழும் செக்குலர் அகிம்சைவாதியும் காந்தியும் பேரனுமான ராஜ்மோகன் காந்தி தனது ‘முஸ்லிம்களின் மனதைப் புரிந்துகொள்ளுதல்’ (Understanding the Muslim mind) நூலை முகமது காசிமின் படையெடுப்பிலிருந்துதான் தொடங்குகிறார். இருவருக்கும் ஒரே விதமான வரலாறுதான் போதிக்கப்பட்டுள்ளது. அதை நியாயப்படுத்த இருவரும் பற்றிப்பிடிக்கும் விஷயம் இந்தியத் தேசியமும் அதன் இறையாண்மையும்.
சர்ஜில் இமாமின் இந்தியத் தேசியத்திற்கு எதிரான கண்ணோட்டம் தனித்துவமான அம்சம். வட கிழக்கு பின்புலத்தைக் கொண்டவர் என்றாலும், வட இந்திய இஸ்லாமிய அரசியல் சூழலில் அது அரிதானது. ஒவ்வொரு நாளும் இந்திய முஸ்லிம்களின் மனநிலையில் பாகிஸ்தான் என்ற அரசியல் திணிக்கப்படுவதன் மூலம் அவர்களை அச்ச நிலையிலேயே வைத்திருக்கும் செயலை தேசியவாதிகள் செய்கிறார்கள். இதில், செக்குலர் அறிவுஜீவிகளும் விதிவிலக்கல்ல. ‘இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும்போது இயல்பாகவே தம்முடைய உள்ளுணர்வை இந்திய முஸ்லீம்கள் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்’ என்று எழுதினார் ராஜ்மோகன் காந்தி. அப்படியிருக்கையில், இந்தியத் தேசியத்திடம் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் முஸ்லீம்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பிறகு அது இறுக்கமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியத் தேசியத்தின் மீது கேள்வியெழுப்பினார் இமாம்.
பாகிஸ்தான்-இஸ்லாமிய எதிர்நிலை அரசியல் தென்னக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அர்த்தமற்ற ஒன்று. தமிழ்நில முஸ்லீம்கள் திராவிட அரசியலோடு தொடர்புபட்டவர்கள். அதன் பொருட்டு இந்தியத் தேசியத்தை அணுகும் அரசியல் அவர்களுடையது. மொத்ததுவ இந்தியத் தேசியத்திற்கு எதிரான திராவிட அரசியல் இனக்குழு சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டது. இந்தியம் உள்வாங்கிக்கொண்ட தேசியம், காலனியம் போன்ற அடக்குமுறைகளை எதிர்ப்பது. இந்தியத் தேசியத்தின் தன்மைகளைக் கட்டுடைத்தவர் என்ற சிந்தனையின் அடிப்படையில் பிராந்திய அரசியலின் முக்கியத் தலைவராகிறார் பெரியார். ஆனால், இன்றும் வட இந்தியச் சூழல் அதனை உணரவில்லை. குறிப்பாக, வட இந்திய அறிவுஜீவிகள் யாரும் இந்தியத் தேசியவாதத்தை அறிந்ததில்லை அல்லது விட்டுக்கொடுத்ததில்லை. அதன் சூழலில் தேசியவாதம் எனும் நவீன காலனியத்தை எதிர்க்கிறார் இமாம்.
இமாம் இந்தியத் தேசியத்தை அணுகும் பின்னணியில் இந்திய முஸ்லீம்களின் வாழ்வியல் உள்ளது. வரலாற்று அறிஞரான இமாம், ஒரு இஸ்லாமியனின் கோணத்தில் வரலாற்றை விளக்குகிறார். இந்திய ஒன்றியத்தில் அது அவசியமானதும் கூட. பார்ப்பனிய வரலாற்றின் தொடர்ச்சி நிகழ்காலத்தில் இஸ்லாமியர்களை எதிர் நிலைப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிரான கடந்தகால புனைவை உருவாக்கிக்கொண்டுள்ளது. அப்படியிருக்கையில், அதனை எதிர்கொள்ளும் வேலையை இமாம் செய்தார். குடியுரிமை போராட்டம் என்பது நமது தேசியவாதத்தை உறுதிப்படுத்துவது அல்லாது, வரலாற்று ரீதியில் நமது உரிமைகளும் எதார்த்தமும் என்னவென்பதை அறிவூட்டுவது என்று நினைத்தார் இமாம். குறிப்பாக, அவை விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட, இந்திய இறையாண்மையால் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் இருப்பை கொண்டது. அதனால்தான், இஸ்லாமிய மன்னர்களின் பெருமைப் போற்றப்படுவதையும் புறம் தள்ளினார். இந்திய வரலாற்றையும் அரசியலையும் இந்து-முஸ்லீம் முரணாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. அவை நீண்டகால ஆதிக்கத்தின் விளைவு. அதில், ஓர் கோணத்தை ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களின் வழி நின்று ஆராய்கிறார் இமாம். நிகழ்காலத்தில் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்வி உள்ளது. ஆனால், முதலில் போராடும் மக்களுக்கு உண்மை குறித்த கூட்டுணுணர்வை ஏற்படுத்த முயல்கிறது அவரது செயல்பாடு. அதுவே ஆண்டாண்டு கால இந்தியப் புனைவின் மீது கலகம் செய்கிறது.
அ ப் து ல் லா. மு