மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மரவப்பட்டி காலனி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சரவணகுமார். இவர் கடந்த 11.10.19 வெள்ளியன்று பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் சகமாணவனால் வகுப்பறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
சரவணகுமார் 11.10.2019 அன்று தனது சக பள்ளி தோழன் மோகன் ராஜின் புத்தகப்பையை அதே வகுப்பறையில் பயிலும் மகா ஈஸ்வரன் என்ற மாணவன் ஒளித்துவைத்து அவர்களை தேடவைக்க, அது குறித்து மகா ஈஸ்வரனிடம், மாணவன் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் விசாரித்திருக்கின்றனர். அப்பொழுது மகா ஈஸ்வரன் மாணவன் சரவணகுமாரை நோக்கி தகாத வார்த்தைகளில் பேசி நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுவாயா என்று கூறி தன்னிடமிருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார். அதில் படுகாயமடைந்த மாணவன் சரவணகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என பாடம் படிக்கும் பள்ளியில் இம்மாதிரியான சாதிய ரீதியிலான தாக்குதல் சக மாணவர்கள் மீது நடைபெறுவதை காணும்பொழுது கல்விக்கூடம் சாதிவெறியர்களை வளர்த்தெடுக்கும் கூடாரமாக மாறுகிறதா என்ற அச்சம் மேலிடுகிறது. அத்துடன் குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்றி இருக்கும் சாதிய மனநிலை, பள்ளி கல்வி முறையால் மாற்றப்பட வில்லையெனில், இந்த கல்வி முறையின் நோக்கத்தையும், செயல்திறனையும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என Sio கருதுகிறது.
இந்த குற்றச்செயலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாக கண்டிப்பதுடன், இனியும் இதுபோன்று சாதிய ரீதியான தாக்குதல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் கல்விக்கூடங்களில் நடைபெறுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு,
முஹம்மது ஆஷிக்
கல்வி வளாக செயலாளர்
SIO தமிழ்நாடு