ஒரு சமுதாயம், மிகச் சிறந்த சமுதாயம், மிக மிகச் சிறந்த வாழ்க்கை முறையை நிரந்தர சொத்தாக வைத்துள்ள சமுதாயம், சத்திய பாதையை லட்சிய நோக்காக கொண்ட சமுதாயம், தற்காலிக ஆசைகளின் மத்தியில் தூய கொள்கையைக் கொண்ட சமுதாயம், எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கப்பட வேண்டும்?
கால ஓட்டத்தின் சுழற்சியில் 1400 வருடங்கள் கடந்துவிட்டன. தூய கொள்கை தூய வடிவில் தான் இருக்கிறது. இறைவனுடைய கட்டளைகளை தான் கட்டுமர கட்டையில் கடத்திவிட்டோம். காவி பயங்கரவாதிகள் கல்வித் துறையில் நுழைந்து விட்டார்கள் காவல்துறை பயங்கரவாதிகள் காவிச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். நீதிமன்ற நீதிமான்கள் பேனா முனையின் வலிமையை குறைத்து கொண்டிருக்கிறார்கள், சட்டத்துறை நிபுணர்கள் சட்டத்தை சட்டைப்பையில் வைத்து, வட்டத்தை வரைவது போல வார்த்தைகளை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிகச் சிறந்த கொள்கை கொண்ட சமுதாயத்தின் செயல்வீரர்கள் தனது சத்திய மார்க்கத்தை நிலைநாட்டவும் இறைவனின் கட்டளைகளின் மூலம் மனித சமுதாயத்தை மீட்டெடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
நிற்க..
ஆரம்ப வரிகளில் கட்டளைகளை கட்டு மரத்தில் ஏற்றி விட்டோம் என்றேன் ஆனால் இப்பொழுது சமுதாயத்தின் செயல்வீரர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறேன்,
நான் ஏதும் பிதற்றுகிறேனா என்ன? இல்லை நிச்சயமாக இல்லை. செயல்வீரர்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் எண்ணிக்கை தான் எண்ணக் கூடிய அளவில் இருக்கிறது. அப்படி என்றால் மிகச்சிறந்த கொள்கை கொண்ட சமுதாயச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
சிலர் போராட்டம் நடத்துகிறார்கள் சிலர் பொழுதுபோக்கி கொண்டிருக்கிறார்கள், சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர் வேதனையுடன் பார்க்கிறார்கள். சிலர் தன் வேலையைப் பார்க்கிறார்கள் சிலர் தனது வேலையை மட்டுமே பார்க்கிறார்கள்.
என்ன நேர்ந்து விட்டது நமது மக்களுக்கு!?
நமது சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயம் எனில் கொண்ட கொள்கையில் சத்தியம் இருக்கக்கூடிய சமுதாயம் எனில் நமது சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும்? இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியும் இந்தியாவில் இருக்கின்றன, ஏழ்மையை நிரந்தரமாக ஒழிக்கக் கூடிய வழிமுறை நம்மிடம் இருக்கிறது, பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வழிமுறை நம்மிடம் இருக்கிறது, குற்றங்கள் ஏற்பட வழியில்லா சட்டங்கள் நம்மிடம் இருக்கிறது.
இருந்தும் என்ன பயன்?
மக்களுக்கு அது தெரிவதில்லையே, உமர் ரலியின் வீரத்தை எண்ணி பெருமை கொள்ளும் நாம் உமர் ரலியின் இறையச்சத்தை உணர்வது இல்லையே, முஸ்லிம்களின் கையில் ஏழ்மையை ஒழிக்க கூடிய சட்டம் உள்ளதென்றால், மிஸ்கின் கள் அதிகம் வாழும் பகுதியாக முஸ்லிம் பகுதிகள் இருந்திருக்கக் கூடாதே! மிஸ்கின் கள் இல்லாத ஒரு முஸ்லிம் பகுதியை நம்மால் காண முடியுமா! இல்லை தனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வேலைசெய்து தந்தை அனுப்பக்கூடிய ஊதியத்தில் உயர்ரக வாகனங்கள் வாங்கிக் கொண்டு வீம்புடன் ஆக்ஸிலேட்டரை திருகும் வீட்டுக்கொரு இளைஞர்கள் இல்லா சூழலை தான் காண முடியுமா?
இலக்கு தெரிகிறது, வரைபடம் இருக்கிறது, வாழ்க்கை நிலையில்லை, வயது போதவில்லை என்ற நிலை மாறி, பாதை தெரிகிறது, வரைபடம் இருக்கிறது, இலக்கு தெரியவில்லை, பயணிக்க நேரமில்லை என்ற நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இருண்டு கிடக்கும் நிலையில் இருட்டை ஒழிக்கவல்ல ஒரு சிறிய ஒளிக்கீற்றை நாம் எப்போது தான் அனுபவிக்க போகிறோம்.
இளைஞர்களே! நமது இளமையை திருடும் மிகப் பெரிய தாக்கூத்களின் புதுவிதமான சூழ்ச்சிக்கு முன்னால் இறைவனிடம் சிரம்பணிந்து அதை எதிர்ப்பதற்கான வலிமையை பெற்றால் தான் இவர்களை வீழ்த்த முடியுமே ஒழிய சிறு அலையில் சரிந்துவிடும் மண் கட்டிடங்கள் போல நமது இலக்குகளை வைத்திருந்தால் சிலமணித்துளிகளில் ஷைத்தானின் சபதம் வெற்றிபெற்றுவிடும் என்பதே யதார்த்தமான உண்மை.
- முஹம்மது சாதிக் – எழுத்தாளர்