போட்டித் தேர்வுகள் என்பது பெரும்பாலான மாணவ, இளைஞர்களின் இலட்சியமாகவும், கனவாகவும் இருக்கிறது. மத்திய அளவில் நடைபெறும் குடியியல் பணிகளுக்கான தேர்வுகள், இரயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வுகள், மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் என்று பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் செலவழித்து இரவு,பகல் பாராமல் தயாராகி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர் பல இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து ஆக்ரமித்துள்ள இலஞ்ச இலாவண்யங்கள் இத்தகைய போட்டித் தேர்வுகளையும் விட்டு வைக்காமல் அந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகளை உடைத்து சுக்குநூறாக்குகின்றன. 2010ஆம் ஆண்டு இரயில்வே பணியிட தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தேர்வாணையத் தலைவரின் மகனே இலஞ்சம் பெற்றுக் கொண்டு வெளியிட்டது அப்போது அதிர்ச்சி அலைகளை பரவவிட்டது. பல்வேறு தரப்பினரும் ஆதாயம் அடைந்த இந்த ஊழலில் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்ச தொகைகள் கைமாறியதாக சிபிஐ அப்போது தெரிவித்தது.
‘வியாபம்’ இந்த பெயர் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. மத்திய பிரதேசத்தின் அரசுப் பணிகளுக்கான தேர்வாணையமான இந்த வியாபம் அமைப்பில் பணிகளை வியாபாரமாக்கி கிட்டத்தட்ட ஒட்டுமொத்த நிர்வாகமுமே சீழ் பிடித்து அந்த நாற்றம் தேசமெங்கும் பரவி மூக்கைப் பொத்த செய்தது. பதவிகளுக்காக பணம் மட்டும்தான் பரிமாறியதா என்று பார்த்தால் இந்த வியாபம் ஊழலில் தோண்டத் தோண்ட பிணங்களாக வெளிவந்து சீழ் நாற்றத்துடன் பிண நாற்றமும் சேர்ந்து பரவியது. 2013ஆம் ஆண்டு வெளி உலகிற்கு தெரிய வந்த இந்த மெகா ஊழலில் அரசியல்வாதிகள், மேல்மட்ட, கீழ்மட்ட அதிகாரிகள், தொழிலதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. ஏன் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் பெயரும் கூட அதில் ஆதாயம் அடைந்தவர்களின் பட்டியலில் இருந்தது.
ஜூலை 2016ல் நடந்த தமிழ்நாடு குரூப் 1 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்தது. ஸ்வப்னா என்ற திருநங்கை மூலம் தொடரப்பட்ட வழக்கில் பணி நியமனம் பெற்ற 74 நபர்களின் ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்றுமொரு தேர்வில் தேர்வு அறைக்கு வெளியே வினாத்தாள்களை விநியோகம் செய்தது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.
கடந்த பிப்ரவரி 17-21 வரை நடந்த மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் வினாத்தாள் வெளியான விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக மத்திய தேர்வாணைய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினலும் தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பல வருடங்கள் பற்பல கனவுகளுடன் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், என்றாவது ஒருநாள் தங்கள் பிள்ளைகள் அரசுப் பணியில் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் பெற்றோர்கள் என்று பலரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தவிடுபொடியாக்குகின்றன இத்தகைய ஊழல்கள்.
ஒரு இடரை சந்திக்கும்போது அதிலிருந்து பாடம் கற்பது தான் சிறந்த பண்பு. எத்தனை ஊழல்களை எதிர்கொண்ட போதிலும் அதில் இருந்தெல்லாம் எவ்வித பாடங்களையும் பயிலாமல், அவற்றை தடுப்பதற்கான எந்த வழிமுறையையும் கையாளாமல், கையும் களவுமாக பிடிபட்டவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து தாமதமான நீதியையும் சில நேரங்களில் அநீதியையும் வழங்கி நம்பி தேர்ந்தெடுத்த மக்கள் முன்பு எவ்வித கூச்சமும் இல்லாமல் திரும்பத் திரும்ப முழிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஆள்பவர்கள். எத்தனை ஆட்சிகள் மாறினாலும் கையாளாகாத இந்ந காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை. ஊனமுற்ற அரசும், முடமான அரசு நிர்வாகமும் சேர்ந்து கனவுகளுடன் வலம் வரும் மாணவ, இளைஞர்களின் கனவுக் கண்களை குத்தி குருடாக்கி வருகின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கையிலே என்ற முண்டாசுக் கவிஞனின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. என்று மாறுமோ இந்த இழிநிலை..?