கர்நாடக கல்வித்துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முன் பல்கலைக்கழகப் பொதுத்தேர்வில் (12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இணையானது) மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் தபசும் ஷேக்.
தபசும் இந்த ஆண்டு கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, இந்தி, உளவியல், சமூகவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைக்குள்ளானது ஹிஜாப் தடை என்பதை நாம் அறிவோம். முஸ்லிம் பெண்கள் மீதான இப்படிப்பட்ட உளவியல் ரீதியான நெருக்கடியையும் எதிர்கொண்டு மாநிலத்தின் முதல் மாணவியாக தபசும் ஷேக் வந்திருக்கிறார். இது சங் பரிவாரத்தினருக்கு ஒரு சம்மட்டி அடி என்றால் அது மிகையல்ல.
ஹிஜாப் எதிர்ப்பு: இந்துத்துவர்களும் லிபரல்களும்
ஹிஜாபுக்கு எதிரான மனநிலை பொதுப்புத்தியில் இருந்து வருவது ஒரு புதிய போக்கு அல்ல. அது மேற்கத்திய காலனிய மனநிலை நீட்சி. மேற்கத்திய நாடுகளில் என்னதான் ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தபோதிலும் இந்தியாவில் அது கடந்த ஆண்டுவரை மிகப்பெரிய பேசுபொருளாக இருந்திருக்கவில்லை. ஏனென்றால் இந்நாட்டிலும் ஹிஜாப்பை போன்றே கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக்கூடிய பல்வேறு வகையான வாழ்வியல் நியதிகள் பல்வேறு வகை மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
உதாரணமாக சீக்கிய மக்களை எடுத்துக்கொள்ளலாம். சீக்கியர்களுக்குத் தலைப்பாகை (டர்பன்) என்பது மிகவும் முக்கியமானது. சிறுவயதிலிருந்தே அவர்கள் தலைப்பாகை அணிவதற்குப் பழக்கப்பட்டிருப்பதாலும், சீக்கிய மத நம்பிக்கைகளின் ஒரு அடையாளமாக அது இருப்பதாலும் அவர்களது கலாச்சாரத்தில் தலைப்பாகை பின்னிப்பிணைந்த ஒன்றாயிருக்கிறது. இம்மாதிரியான வழமைகள் சீக்கியத்தில் மட்டுமல்ல, பல்வேறு வகையான கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஹிஜாப் என்பது முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் மட்டுமின்றி சமயக் கடமையும் ஆகும்.
ஒரு சமூகம் தம் அடையாளம், கலாச்சாரத்தை பள்ளிக்கூடத்திற்கு வெளியில் வைத்துவிட்டு வந்தால்தான் கல்வி கிடைக்கும் என்று சொல்வது சரியா?
பள்ளிக்கூடம் என்பதே அனைவரும் கல்வி கற்று பயனடைய வேண்டும் என்பதுதான். பள்ளிக்கூடங்களில் ஒரே வகையான சீருடை இருப்பதற்கான காரணம் – அனைத்து மாணவர்களும் சமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான், பள்ளிக்கூடம் அனைவருக்குமானது. இதில் ஹிஜாப் அணிந்து வருவது மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என ஹிஜாப் தடையை ஆதரிப்போர் கூறுகிறார்கள்.
கல்வி எல்லோருக்குமானது என்றால் உரிமைகளும் அனைவருக்குமானதுதானே? பள்ளிகளில் ஒரே சீருடை அணிவதற்கான காரணம் அனைத்து மாணவர்களும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதற்க்குத்தான். ஆனால் கலாச்சாரத்தில் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிப்பது மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடியது, மக்களின் ஒற்றுமையை பறைசாற்றக்கூடியது, மக்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவது.
ஹிஜாப் விவகாரத்தைப் பொருத்தவரை, இந்துத்துவவாதிகளுக்கும் லிபரல்களுக்கும் ஒப்புமைகள் இருக்கின்றன. இருதரப்பினருமே ஹிஜாப் எதிர்ப்பாளர்கள்.
பெண்ணியம் பேசும் லிபரல்களெல்லாம் பெண்கள் ஆடைகளைக் குறைவாக அணிவது அவர்களது உரிமை என்பார்கள். பெண்களுக்கு சுய தெரிவு உண்டு என்பார்கள். ஆனால் ஹிஜாபை பெண்கள் தேர்வு செய்தால் ஏற்பார்களா? அநேகர் ஏற்பதில்லையே ஏன்?
ஹிஜாப் மூலமாகப் பெண்கள் அடிமையாக்கப்படுகின்றனர் எனும் கருத்தை அவர்கள் வலுவாக நம்புகின்றனர். இதன் காரணமாகவே ஹிஜாப் தடை என்ற தீர்ப்பை பல லிபரல்கள் ஆதரித்தனர். ஹிஜாப் எங்கள் உரிமை என முஸ்லிம் பெண்கள் போராடிய உறுதிமிக்க செயலை அவர்களால் ஏற்க முடியவில்லை. இந்துத்துவவாதிகள், லிபரல்களின் நோக்கம் வேறுவேறாக இருந்தாலும் ஹிஜாப் தடை போன்றவை வரும்போது இருவரும் ஒரே அணியாகச் சேர்ந்துவிடுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
தபசும் ஷேக்கின் சாதனை
ஹிஜாப் தடை தீர்ப்பு வந்தவுடன் முஸ்லிம் பெண்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளை விடுத்து பிற பள்ளிகளில் இணைந்தனர். சிலருக்கு கல்வி தடைப்பட்டது. வேறு சிலர் ஹிஜாபை தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படி பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுள் தபசும் ஷேக்கும் ஒருவர்.
ஹிஜாப் மற்றும் கல்வி ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஒருவரை ஆளாக்குவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று கேட்கத் தோன்றுகிறது.
தபசும் ஷேக்கை போலவே, இதற்கு முந்தைய ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் இல்ஹாம் என்ற முஸ்லிம் பெண் மாநில அளவில் 600 க்கு 597 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பெற்றிருந்தார்.
இப்போது ‘ஹிஜாபை விடுத்து கல்வியைத் தேர்ந்தெடுத்து வெற்றியடைந்த தபசும் ஷேக் போன்ற பெண்களைப் போலவே மற்ற பெண்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாமே’ எனும் லிபரல்களின் கூச்சல் சன்னமாகக் கேட்கிறது.
முஸ்லிம் பெண்களின் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை!
தபசும் ஷேக் ஹிஜாப் தடை தீர்ப்பு வந்தபோது ஹிஜாபையே தேர்வு செய்துள்ளார். முதல் இரண்டு வாரங்கள் அவர் பள்ளிக்கே செல்லவில்லை. தன் உரிமையை விடுத்தால்தான் கல்வி கிடைக்கும் என்பது அநீதி என்றே நினைத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அவரது தந்தை வழங்கிய அறிவுரை குறித்து அவர் சொல்வதைப் பாருங்கள்: “ஹிஜாப் அணிவது எனது அடையாளம் மற்றும் மார்க்கத்தின் ஒருபகுதி என இருக்கும்போது இவற்றிலொன்றைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது, அதுவும் மதச்சார்பற்ற நாட்டில் நியாயமற்றதாக எனக்குத் தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். இரண்டு வாரங்களாகக் கல்லூரிக்குச் செல்லவில்லை. பி.யு. கல்லூரியில் படித்த பல மாணவிகள் ஹிஜாப் விவகாரத்தால், கல்லூரியை விட்டு வெளியேறி, திறந்தநிலை கல்லூரிகளில் சேர ஆரம்பித்தனர்.
ஆனால், நான் ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் செல்ல முடியாது என தந்தையிடம் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை என்னை அருகில் அழைத்து, ‘கல்விதான் சரியான பாதை. நீ சமூகத்தில் ஒரு நிலையை அடையவும், உன்னைப் போல மற்றவர்களை உயர்த்தவும் கல்வி ஓர் ஆயுதம். இதுபோன்ற அநீதிகள் மீண்டும் சமூகத்தில் நிகழாமல் தடுக்க நீ கண்டிப்பாகப் படிக்க வேண்டும். உன் வார்த்தையைப் பிறர் கேட்க, நீ அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்றார்”.
தபசும் மேலும் கூறுகிறார்: “தந்தை அறிவுரை வழங்கிய அடுத்த நாளே முதன்முறையாக ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் சென்றேன். நான் மனவேதனையுடன் இருப்பதை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். முதல் ஆண்டு சீராகவே சென்றது. ஆனால், ஆண்டின் இறுதியில் நிறைய சிரமங்களும், நிச்சயமற்ற தன்மைகளும் வந்துபோயின. இருப்பினும் பெற்றோர் ஆதரவுடன் படிப்பில் கவனம் செலுத்தினேன்”.
ஹிஜாப் அணியாமல் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை மனதால் வெறுத்தே அவர் கல்வி கற்றிருக்கிறார். இப்போது தனது உரிமையைப் பறித்தவர்களுக்கு தன்னுடைய சாதனையின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.