தி.இராசகோபாலன் என்கிற ஓய்வுப் பெற்ற பேராசிரியர் ‘மனமாற்றமே வேண்டும்’ என்கிற தலைப்பில் மத மாற்றத்துக்கு எதிராக கட்டுரை என்கிற பெயரில் சாதிய ஆணவத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
மீனாட்சிபுரத்தில் இஸ்லாமுக்கு மதம் மாறிய தலித்துகள் பல தார மணத்துக்காகவே மதம் மாறினர் என்கிறார் இராசகோபாலன். இந்த சமூக ஆய்வை ஐயா அவர்கள் எந்த புண்ணிய ஷேத்திரத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஞான திருஷ்டி கொண்டு தெரிந்துக் கொண்டாரோ?
ரோஸா பார்க்ஸ் வரலாறு தெரிந்தவர்களுக்குக் கூட தெரியாதது நம்மூர் மீனாட்சிபுரத்தில் 80-கள் வரைக் கூட தலித்துகள் பேருந்துகளில் சீட்டில் அமர்ந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதில் உச்சப் பட்ச கொடுமை என்னவென்றால் ரோஸா பார்க்ஸ் கறுப்பு இனத்தவர், பார்த்தாலே வெள்ளைக்காரர்களுக்கு அவர் நம்மவர் இல்லை என்று தெரியும். ஆனால் மீனாட்சிபுரத்தில் அடக்குபவனுக்கும் அடக்கப்படுகின்றவருக்கும் வித்தியாசத்தை ஸ்தூலமாக எப்படி கண்டு உணர்ந்தார்கள்? இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்கப்பட்டால் நம்மவர்கள் அள்ளி விடுவார்கள். இன்னும் ஒரு 30 வருடம் போனால் மீனாட்சிபுரத்தில் அடக்குமுறையே இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து விடுவார்கள். நம்மவர்கள் வரலாறு எழுத தெரியாததால் வரலாறு எழுதாமல் இல்லை, எழுதி வைத்தால் பிரச்சனை என்பதால் எழுதுவதில்லை.
இராசகோபாலன் அப்புறம் எல்லா இந்துத்துவர்களையும் போல் மெக்காலேவை சாடுகிறார். இந்த மெக்காலேவை திட்டுபவர்கள் எல்லாம் செய்ய வேண்டியது ஒன்று தான், பள்ளிகள், ஐஐடிகள் ஆகியவற்றில் தத்தம் பிள்ளைகளை சேர்க்காமல் வேத பாடசாலைக்கு அனுப்பலாம். மெக்காலே படிப்பெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?
இராசகோபாலனாரின் இன்னொரு மகத்தான கண்டு பிடிப்பு தலித்துகள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியது பாதிரிமார்கள் தலித் குடும்பங்களுக்கு வாராவாரம் மாமிச உணவு அளித்தது தானாம். பேராசிரியர் இந்த ஞானத்தை எப்படி கண்டடைந்தாரோ? சரி அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம் அந்த வேலையை இவர்களும் செய்து தலித்துகள் மதம் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கலாமே? ஒரு தெருவுக்குள் தலித் நுழைந்தாலே கசையடி என்று வைத்த்திருந்தவர்களுக்கு அதை செய்ய எப்படி மனம் வரும்? நீங்கள் மனிதனாகவே மதிக்காதவர்கள் விலகிப் போனார்கள். இப்போ வந்து லபோ திபோ என்று ஏன் அடித்துக் கொள்கிறார்கள்.
(டன்கண் பாரஸ்டர் கிறிஸ்தவமும் சாதியமும் பற்றிய ஆய்வில் இந்த மாமிச உணவு பற்றி ஒரு முக்கியமான தகவலைத் தருகிறார். மதம் மாறிய சைவ உணவு பழக்கமுள்ள உயர் ஜாதியினர் கிறிஸ்தவராக இருப்பதற்கு மாமிச உணவு சாப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை என்று வாதிட்டார்கள். உணவில் விலக்கு வைப்பது கிறிஸ்தவ கொள்கைக்கு மாறானது என்று போதகர்கள் வாதிட்டனர்)
எச்.ஆல்பிரட் கிருஷ்ண பிள்ளை மதம் மாறினாலும் குடுமி வைத்துக் கொண்டார் என்று இராசகோபாலன் புல்லரிக்கிறார். தோளில் துண்டு போட்டாலே வன்முறை ஏவியவர்கள் உங்கள் முன்னோர். மறக்க வேண்டாம். மறக்க விடக் கூடாது.
சென்ற வருடம் இதே மாதம் வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதியதற்காக (வைரமுத்து சொந்தமாக எதையும் சொல்லிவிடவில்லை அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்) தினமணி ஆசிரியரை ஆண்டாள் சந்நிதானத்துக்கு இழுத்து வந்து, மடியாக உடை உடுத்தி (பஞ்சகச்சம், வெற்று மார்பு, அது முக்கியமாச்சே) சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்புக் கேட்க சுற்றி நின்ற ஆசார கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பியது. இதோ இப்படி ஒரு நரகலை வெளியிட்டதற்கு குறைந்தப் பட்சம் எழுத்திலாவது மன்னிப்புக் கோருமா தினமணி?
கறுப்பர் கூட்டம், மதிமாறன் எல்லாம் வெத்து வேட்டு. இராசகோபாலனுக்கு இப்படி இழிவாக பொதுவெளியில் எழுதும் துணிவு எங்கிருந்து வந்தது? அது புரிந்தால் மதிமாறன் ஏன் வெத்து வேட்டு என்பது புரியும். இராசகோபாலனின் எழுத்து தான் உண்மையான நாஜித்தனம்.
உயர் ஜாதி என்றழைக்கப்படுகிற எல்லா ஜாதியனரும் இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பு உள்ளவர்கள் தானே ஏன் ஒரு சாராரை மட்டும் இங்கே தாக்கியிருக்கிறாய் என்றால் அதற்கு ஒரே பதில் இப்படி மற்றவர்கள் எழுதுவது வெகு குறைவு அதுவும் அவர்கள் கூவுவது எல்லாம் இப்படி பத்திரிக்கையில் பிரசுரமாகும் அளவு பலமில்லாதது.
இன்று இந்துத்துவர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை குறி வைப்பது சாதிய காழ்ப்பினால் தான். மதம் மாறியவர்களில் பலர் தலித்துகள் என்பதால் தலித்துகளை கீழ்த்தரமாக பேச அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.
மத மாற்றம் என்பதற்கு தலித் சமூகங்கள் கொடுத்த விலை அதிகம். மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய தலித் ஒருவர் இட ஒதுக்கீடு சலுகையை இழக்க நேரிடலாமே என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு “எங்களுக்கு தன்மானம் கிடைத்திருக்கு. நேற்று வரை ஓர் இந்துவாக பஸ்சில் சீட்டில் உட்கார முடியாத நான் இன்று உட்கார முடிகிறது” என்றார். பெரும் திரளாக தலித்துகள் மதம் மாறிய சம்பவங்களின் பின்னனியில் பெரும் போராட்டங்கள் இருந்திருக்கின்றன.
மத மாற்றத்தின் காரணங்களை காந்தி முதல் ஜெயகாந்தன் வரை அநேகரும் ஏதோ செப்பிடு வித்தைக்கு பலியாகிவிட்டதாகவே புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். மீனாட்சிபுரம் நிகழ்வை வைத்து ஜெயகாந்தன் எழுதிய ‘ஈஸ்வர, அல்லா தேரே நாம்’ நாவல் சொல்லும் அவர் புரிதலின் போதாமையை. (கீழ வெண்மணியை வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனலும் அப்படித்தான்).
ஆமாம் அது என்ன ‘இராசகோபாலன்’? இராஜகோபாலன் என்றே எழுதியிருக்கலாமே?? //