இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதன் அரசியல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் மக்கள் அனைவருக்கும் பயனளிக்காத திட்டங்களைக் காட்டிலும் சமூகத்தின் ஒருசார் பிரிவினரின் குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. அதனை பொதுமக்கள் அரும்பாடுபட்டு, போராட்டங்கள் நடத்தி, அது தடியடியாக, அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக மாற்றமடைந்து பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு அவை திரும்ப பெறப்படும் இதுவே வழக்கம். ஆனால் சமீபத்தில் வெளியாகி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சில இதற்கு விதிவிலக்காக திகழ்கின்றன.
பொதுமக்களின் போராட்டங்கள் விவாதங்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டி அநீதமாக, அடக்குமுறையின் பெயரில் கடந்த ஆகஸ்ட் 5, 2019இல் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 9 அன்று முஸ்லிம்களின் நிலமாக இருந்த பாபர் மசூதி இருந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற பாஜகவின் நீண்ட கால அநீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் மூன்றாவதாக பாஜக பலகாலமாக முன்வைத்து வரும் அநீதமான வாக்குறுதிதான் இந்த பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது.
கடந்த ஜுன் 27ஆம் தேதி மத்தியப் பிரதேசம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, “பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளைப் பரப்பி, குழப்பத்தை விளைவிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் எனப் பல உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதன் ஓர் உறுப்பினர் ஒரு சட்டத்தையும், மற்றோர் உறுப்பினர் வேறொரு சட்டத்தையும் எப்படி பின்பற்ற முடியும்? இப்படி இருந்தால் அந்தக் குடும்பத்தை எப்படி நடத்த முடியுமா? இக்கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். இரண்டுவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்றே அரசியலமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்பவே பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம்” எனக் கூறியிருந்தார். ஃபாசிஸத்தின் அடிநாதமான நாட்டு மக்களை எந்நேரமும் பதட்டத்திலேயே வைத்திருக்கும் கலையின் வித்தை தெரிந்த பாஜக அரசின் மற்றுமொரு தேவையில்லாத ஆணிதான் இந்தப் பொது சிவில் சட்டம்.
பொது சிவில் சட்டம்
இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் அவர்கள் எந்த இன, மத, கலாச்சாரத்தை பின்பற்றினாலும் திருமணம் – விவாகரத்து, குடும்பவியல் – வாரிசுரிமை சட்டங்கள் போன்ற அவர்களின் வாழ்வியல் முறைக்கு உட்பட்ட சட்டங்கள் ஒழிக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் ஒரே சட்டதை பின்பற்ற வைக்க வேண்டுமென்பதே (UCC) பொது சிவில் சட்டத்தின் அடிப்படை சாராம்சம் ஆகும்.
பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துதலின் பின்விளைவுகளை பார்ப்பதற்கு முன் அதின் வரலாற்றுப் பின்னணியை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த UCC முதல் முதலாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பிரெஞ்சு ஆதிக்கவாதிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இதற்கான ஆதரவு – எதிர்ப்பு கருத்துக்கள் வந்து கொண்டு தான் இருந்துள்ளன.
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படுவதற்கான சட்டரீதியிலான முன்னேற்பாடுகள் 1947 ஆகஸ்ட்டுக்குப் பல மாதங்கள் முன்பே தொடங்கின. அதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு அரசமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
1947 மார்ச் 28 அன்று அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட துணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஆர். மசானி என்பவர் யாரும் எதிர்பாராத வகையில் இந்த UCC பற்றிய முன்மொழிவைக் கொண்டுவந்துள்ளார். அது குழுவின் மற்ற உறுப்பினர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் மசானியின் அக்கோரிக்கை கைவிடப்பட்டது.
1947 மார்ச் 30 அன்று மீண்டும் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது எழுந்த எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு இது பிரிவு 36 முதல் 51 வரையிலான அரசமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக வேண்டுமானால் இதனை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அப்போதே இந்திய அரசியலமைப்புச் சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் நேருவை கடுமையாக எச்சரித்தார். சர்தார் வல்லபாய் படேல், பட்டாபி சித்தராமையா, எம்.ஏ. ஐயங்கார், எம்.எம். மாலவியா மற்றும் கைலாஷ் நாத் கட்ஜூ போன்றோறும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தவர்களுள் முக்கியமானவர்கள்.
இந்துக்களுக்கான பொதுசிவில் சட்டம் குறித்த விவாதம் 1949ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்போது இருந்த 28 உறுப்பினர்களில் 23 பேர் இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்துள்ளனர். செப்டம்பர் 15, 1951ல் ராஜேந்திர பிரசாத் மீண்டும் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி இப்பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தபோது இறுதியாக அம்பேத்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. சில உறுப்பினர்கள் முஸ்லிம் தனிநபர் சட்டத்தை மாநில ஒழுங்குமுறையில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக இருந்த முகமது இஸ்மாயில் என்பவர் மூன்று முறை தனிநபர் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கு முயன்று தோல்வி அடைந்தார். ஒரு மதச்சார்பற்ற அரசானது மக்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்று அவர் வாதிட்டார். ஹூசைன் இமாம் என்ற மற்றுமொறு உறுப்பினர், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது சாத்தியமா என கேள்வி எழுப்பினார். அம்பேத்கரோ எந்த ஒரு அரசாங்கமும் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டங்களை பயன்படுத்திவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
அப்போதிலிருந்து இப்போது வரை இது சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்க்கப்பட்டுவரும் இச்சட்டம் நாட்டின் பலதரப்பட்ட சமூக மக்களின் மத நம்பிக்கைகளை சிதைத்து விடும் என்று கூறி எதிர்க்கப்பட்டதன் விளைவாக இது கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.
தற்போது ஃபாஸிச பாஜக அரசு வருகிற 2024 தேர்தலின் காரணமாக இதனை தூசு தட்டி எடுத்து வந்துள்ளது.
UCCயை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் பாஜக
இந்த UCC என்பது ஆர்எஸ்எஸ்-இன் மிக முக்கிய குறிக்கோள்களுள் ஒன்று. இதனை நடைமுறைபடுத்த பாஜக பல வருடங்களாக முயன்று வருகிறது. 1998 முதல் பாஜகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் UCC நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்தது வந்துள்ளது. ஆனால் 2014ன் ‘மோ(ச)டி அலை’க்கு முன்பு வரை அதற்கான எந்த ஒரு வலுவான நடவடிக்கையையும் பாஜக எடுத்திருக்கவில்லை.
2014ல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு அதனை நோக்கி மெல்ல தனது பார்வையை திருப்பியது. அதன் முதல் நகர்வாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் தலைமையில் 2016ல் 21வது சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்ட அக்குழு 2018 ஆகஸ்டில் ‘21st LAW COMMISSION REPORT ON UCC’ என்கிற தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், “தற்போதைய நிலையில் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் அவசியமற்றது, விரும்பத்தகாதது ” என தெள்ளத்தெளிவாக கூறப்பட்டிருந்தது.
இது மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அப்போது இதனைக் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு, கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையில் 2020 பிப்ரவரி 21ம் தேதி, 22 வது சட்ட கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன் பதவிக்காலமாக 3 ஆண்டுகள் நிரணயிக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த ஜூன் 14ம் தேதி இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களைக் கோரி. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 13க்குள் சமர்ப்பிக்கலாம் என்று கேட்டுக் கொண்டது. இதுவரை சுமார் 46 லட்சம் பேர் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் கருத்து கேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பிரதமர் மோடி, “ஒரே நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது…” என்று தேர்தலை எதிர்நோக்கியுள்ள மத்திய பிரதேசத்தில் கூறியது பொது சிவில் சட்டத்தின் மேல் அவருக்கு இருக்கக்கூடிய அவசரத்தையே வெளிப்படுத்தியது.
பொது சிவில் சட்டம் – யதார்த்தம் என்ன?
நம் இந்திய மக்கள் பல மதங்கள், கோட்பாடுகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்தியா ஒரு பன்மை சமூக நாடு என்பதால் குற்றவியல், தண்டனை சட்டங்கள் மட்டும் நாடு முழுவதற்கும் பொதுவானதாகவும், பிற தனிநபர் குடிமையியல் சட்டங்கள் அவரவர் பின்பற்றும் மதங்கள் மற்றும் வாழ்வியலுக்கு ஏற்பவும் பின்பற்றப்பட்டு வந்தன. தனிநபர் சட்டங்கள் பெரும்பாலும் 1) திருமணம் – விவாகரத்து சட்டம்; 2) சிறுபான்மை – பாதுகாப்பு சட்டம்; 3) தத்தெடுத்தல் – பராமரிப்புச் சட்டம்; 4) வாரிசுரிமை – பரம்பரை வழி சட்டம் ஆகிய நான்கில் தான் அதிக கவனம் செலுத்துகிறது.
நாம் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் ஒவ்வொரு மதமும் தனக்கான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று மற்றொன்றுக்குப் பொருந்தாது. உதாரணமாக, இந்துமதத்தையே எடுத்துக் கொள்வோவமே திருமணச் சட்டம், இந்து வாரிசு சட்டம், இந்து சிறுபான்மை – பாதுகாவலர் சட்டம், இந்து தத்தெடுப்பு – பராமரிப்புச் சட்டம் ஆகிய நான்கும் இந்து தனிநபர் சட்டதின் கீழ் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. (சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்களையும் ‘இந்து’ என்ற சொல்லின் கீழ் உள்ளடக்குவதே இதன் நோக்கம் என்பது வேறு விஷயம்.)
ஆனால் அவற்றிலும் கூட அச்சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கு மத்தியிலும் திருமண, வாரிசு, சொத்துரிமை போன்ற பல்வேறு அம்சங்களில் பெறும் முரண்பாடுகள் உள்ளன. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனிச் சட்டங்கள் உண்டு. அதுபோல மலைவாழ் மக்களுக்கு என 400க்கும் மேற்பட்ட இந்துத் தனியார் சட்டங்கள் உள்ளன. சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களுக்கு தலைகவசம் அணியாமல், தலையில் ‘டர்பன்’ கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டவும் கத்தி வைத்துக்கொள்ளவும் அனுமதி உள்ளது. இப்படி இந்து சமூகத்திற்கு அதன் உட்பிரிவுகளுக்குள்ளேயே இவ்வளவு தனியார் சட்டங்கள் இருக்கின்றன.
முஸ்லிம் தனிநபர் சட்டம்
திருக்குர்ஆன், அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில் பெறப்பட்டதே ‘ஷரிஆ’ சட்டம். இச்சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937ல் இயற்றப்பட்டது.
கிறிஸ்தவ திருமணங்கள், விவாகரத்துகள் இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் – இந்திய விவாகரத்துச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன, ஜோராஸ்ட்ரியர்கள் பார்சி திருமணம் – விவாகரத்துச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.
மேலும், தனித்துவமான பிராந்திய அடையாளங்களைப் பாதுகாக்க, அரசியலமைப்பு அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு குடும்பச் சட்டத்தைப் பொறுத்து சில விதிவிலக்குகளை வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் இவைதான் நம் நாட்டின் பன்மைத்துவ அடையாளத்தையே பாதுகாக்கிறது என்றே கூறலாம்.
இப்படி சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது தங்களது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும், எனவே அவற்றை பொதுவான நெறிமுறைகளைக் கொண்டதாக மாற்றி பொது சிவில் சட்டம் நடைமுறை படுத்தப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறப்படுகிறது.
இதற்கு நகைமுரணாக, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் வசிக்கும் 200 பிரிவுகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்கள் தங்களின் சொந்த பழக்க வழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர். மேகலாயா, மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் தனிநபர் உரிமைகள், பழக்க வழக்கங்கள் இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது ஒரே மாதிரியான சிவில் சட்டம் உள்ள ஒரே மாநிலம் கோவா மட்டும்தான். 1867 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் சட்டம், 1961 ஆம் ஆண்டில் அது இந்தியாவில் பிராந்தியத்தை இணைத்த பிறகும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும், போர்த்துகீசிய சிவில் சட்டம் முற்றிலும் முழுமையான சிவில் சட்டம் அல்ல. இது மத அடிப்படையிலான சில சட்டங்களையும் உள்ளடக்கித்தான் இருக்கிறது. 25 வயதிற்குள் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கத் தவறினால் அல்லது 30 வயதிற்குள் ஒரு ஆண் குழந்தையைப் பெற தவறினால், இந்து மத ஆண்கள் இருதார மணம் செய்ய அனுமதிக்கப்படுவது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.
இச்சட்டம் சொல்வது தான் என்ன?
இந்திய அரசியல் சாசனத்தின் 44வது பிரிவானது அரசு நெறிமுறை கொள்கைகளில் ஒன்றாகும். பிரிவு 37-ல் குறிப்பிட்டுள்ளபடி இந்த பிரிவை எந்த நீதிமன்றத்தாலும் அமல்படுத்த முடியாது. ஆனால் இதில் கூறப்பட்ட கொள்கைகள் அனைத்தும் நிர்வாகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மக்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதிமன்றங்களால் அமல்படுத்த முடியும். அரசியல் சாசனம் 44 “அரசு முயற்சி செய்யும்(state shall endeavour)” என்றுதான் சொல்கிறது. அரசியல் சாசன பிரிவு 43ல் இடம் பெற்றிருக்கும் ”சரியான சட்டத்தின் மூலம் அரசு நடைமுறைப்படுத்தும்” என்ற வாக்கியம் கூட சாசன பிரிவு 44ல் இடம் பெறவில்லை.
அரசியல் சாசன பிரிவு 26(b) இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதோடு, மதம் சார்ந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் அங்கிகாரம் அளிக்கிறது. அரசியல் சாசன பிரிவு 29, தனிப்பட்ட கலாச்சாரத்தை கொண்டுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. பிரிவு 25 பொதுக்கட்டளை (public order) ஆரோக்கியம், தார்மீகத்தையும் உறுதி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட குழுவின் சுதந்திரம் பிரிவு 26ல் இடம் பெற்றுள்ளது. பொது சிவில் சட்டத்தினை அடிப்படை உரிமைகள் என்ற வகையில் வைப்பதில் சிக்கல் எழுந்த நிலையில் வாக்குகள் மூலம் அவை இவ்வாறு செருக்கப்பட்டது.
அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் ஒரே சீரான சிவில் சட்டங்கள் வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் யூனியன் பட்டியலில் இந்த விஷயத்தை சேர்த்து, தனிப்பட்ட சட்டங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பிரத்தியேக அதிகார வரம்பை வழங்கியிருப்பார்கள். ஆனால் ‘தனிப்பட்ட சட்டங்கள்’ எனும் ‘கான்கரண்ட்’ பட்டியலில் தான் இதனை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு, சட்ட ஆணையம் ஒரு சீரான சிவில் சட்டம் சாத்தியமும் இல்லை அது விரும்பதக்கதும் இல்லை என்று அறிவித்தது அல்லவா? அதனை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பொது சிவில் சட்டம் – அறியாமையின் விளைவு:
இன்று வட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க கூடிய பலவித மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பொது சிவில் சட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களின் பதில் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கிறது. முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கொள்கிறார்கள், மூன்று தலாக் விடுத்து தங்களது மனைவிகளை உடனடியாக விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதாக அவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இதனை குறித்தும் விரிவாக நாம் பார்த்துவிடுவோம்.
பலதார மணம்
பாஜக ஆதரவாளர்கள், நவீனத்துவவாதிகளால் முன்வைக்கப்படும் விமர்சனம் தான் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிக பெண்களை திருமணம் செய்யும் போக்கு இருக்கிறது. எனவே இதற்கு கடிவாளம் போடுவதற்கு பொது சிவில் சட்டம் உதவும் என்கிறார்கள். பலதார மணத்தை விமர்சனம் செய்யும் இவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளும் கலாச்சாரத்தை எதிர்ப்பதில்லை. ஒரு சட்டம் என்பது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன் வந்த இஸ்லாமிய சட்டங்கள் இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ‘இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது அவை பழங்காலத்தவை’ என்று கூறக்கூடியவர்களால் தகாத உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியாது. மனைவியின் உடல்நிலையில் குறைபாடு இருந்தாலோ அல்லது ஆண், பெண் பிறப்பு விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் பெண்களின் திருமண வாழ்க்கையை உறுதி செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் புரிய ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏன், பெண்கள் பல ஆண்களை மணமுடிக்க கூடாதா? பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் – ஒரே கால கட்டத்தில் – பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என்ற குழப்பம் வர வாய்ப்புண்டு. இஸ்லாத்தில் பலதார மணம் கட்டாயக் கடமை அல்ல; சில வரையறைகளுடன் செய்து கொள்ளலாம் என்ற அனுமதி மட்டுமே. இது இஸ்லாத்தில் மட்டுமல்ல பல மதங்களிலும் காணப்படுகிறது. யூத, கிறிஸ்தவ மதங்களில் நேரடியாகவே அவற்றின் வேதங்களிலேயே பலதார மணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலதார மணம் பற்றி இந்து வேதங்கள் : இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்றே கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். ‘ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)’ கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார். முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர். என்றேல்லாம் கூறப்பட்டுள்ளது.
பலதார மணம் முஸ்லிம்கள் தான் அதிகளவில் செய்துகொள்கிறார்கள் என்பதும் ஒரு பொய்யான கூற்றே. பலதார மணம் என்பது இந்தியாவில் பழங்குடியினர் மக்களிடம் தான் அதிகபட்சமாக இருக்கிறது. 21 வது சட்ட கமிஷன் இதை தெளிவுபடுத்தி பழங்குடியின மக்களிடம் 15.25% என்ற அளவிலும் பவுத்தர்களிடம் 9.7%, சமணர்களிடம் 6.72%, இந்துக்களிடம் 5.8% எனவும், முஸ்லிம்களிடம் வெறும் 5.7% மட்டுமே உள்ளது எனக் கூறியுள்ளது.
முத்தலாக்
கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், அந்தச் சமயத்தில் பெண் சார்பாக ஒருவரும் ஆண் சார்பாக ஒருவரும் சாட்சிக்கு இருக்க, தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வது ‘தலாக்’ (மணமுறிவு). இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. ஜமாத்தார்கள் முன்னிலையில் இருதரப்பும் பேசி சமரசத்தில் ஈடுபடுவர். பிரிப்பதைவிட சமரசம் செய்து சேர்த்துவைப்பதில்தான் ஜமாத்தார் முனைப்புக் காட்டுவர். முடியாதபட்சத்தில், உரிய கால இடைவெளியில் மூன்று தவணையாக, ‘தலாக்’ சொல்லப்படும். இந்த மூன்று தவணைகளுக்கும் கணவன் – மனைவி இடையே சுமூகமான சூழல் உருவாகி, இருவரும் திரும்பச் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் உரிய கால அவகாசம் அளித்து, காத்திருந்து, அதன்பிறகும் பிடிக்கவில்லை என்றால், அதை முறையாகச் சொல்லிப் பிரியலாம் எனப் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான் ‘குலா’. முத்தலாக்கின் சட்டங்கள் இஸ்லாமிய சட்ட விழுமியங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. முத்தலாக்கை பொறுத்தவரை ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு தான் அதிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது. இவ்வாறு இந்துத்துவவாதிகள் பொது சிவில் சட்டத்தின் தேவைகளாக கூறும் அனைத்து காரணங்களும் உடைபடுகின்றன.
சில புரிதல்கள்
இந்த UCCயை ஆதரிப்பவர்களில் பெரும்பாலோர் இந்துவாதிகள் தான். 1998 ஆம் ஆண்டு, முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டம் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என்ற பொய்க் கூற்றை முன்வைத்து, அப்போதைய பாஜக தாம் பதவிக்கு வந்தால் UCCயை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்களித்திருந்தது. அது பாஜக கட்சிக்குள்ளேயே ஜாதிப் பிரிவினைகள், பாகுபாடுகள் இருந்துவந்த நிலையில் அவற்றில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு குர்ஆனின் சில வசனங்களை நீக்க வேண்டும், பள்ளிகளில் ஹிஜாப் அணியக் கூடாது, மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை வைத்து பாங்கு சொல்லக் கூடாது என்று முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்பை விதைக்க ஆரம்பித்தனர். இதிலிருந்து அவர்கள் UCC கொண்டுவருவதன் மூலம் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களை நீர்த்துப் போக செய்து, இஸ்லாமிய கலாச்சாரத்தை முற்றாக அழித்து விடலாம் என்பது தான் அவர்களின் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல பிற மதங்கள், இனக் குழுவை சேர்ந்தவர்கள்தான் தங்களது வாழ்வியல் நடைமுறைகளில் பல மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த UCC வரைவு இந்து குடும்ப முறையை களைப்பதையும், மற்ற சமூகங்களின் பல்வேறு தனிப்பட்ட சட்டங்களை ரத்து செய்யவும் முன்மொழிகிறது. இந்து திருமணச் சட்டம் 1955, முஸ்லிம் தனிநபர் விண்ணப்பச் சட்டம் (ஷரிஆ) 1937, இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872, பார்சி திருமணம், விவாகரத்துச் சட்டம் 1936, இந்து வாரிசுரிமை சட்டம் 1956 ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.
பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் எதை பின்பற்றுகிறார்களோ அதை தான் பொதுவான குடிமையியல் சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவருவார்கள் இந்துத்துவவாதிகள். பொது சிவில் சட்டம் கொண்டுவர சாதகமாக இருப்பதே பெரும்பான்மை என்ற பதம் தான். (இங்கு பெரும்பான்மை என்றால் எதை குறிக்கின்றது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.) இவர்களுடன் நவீனத்துவவாதிகள் என தங்களை குறிப்பிட்டுக் கொள்பவர்களும் இணைந்து பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பது அறியாமையின் உச்சம். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உத்திரவாதமாக அளிக்கப்பட்ட ஒரே உரிமை என்னவெனில் தங்களது மத விவகாரங்களில் அரசின் எந்த தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக செயல்படலாம் என்பது தான். இந்த உரிமையும் பிடுங்க நினைப்பது இஸ்லாமியர்கள் மீது அரசிற்கு இருக்கும் வெறுப்பையே காட்டுகிறது.
Sources from:
https://tamil.oneindia.com/amphtml/news/chennai/why-uniform-civil-code-related-only-with-the-muslims-in-india-what-are-the-marriage-laws-other-reli-520850.html
https://www.hindutamil.in/news/opinion/columns/907332-general-civil-law.html
https://www.google.com/amp/s/www.puthiyathalaimurai.com/amp/story/india/what-is-uniform-civil-code-and-why-the-opposition-came
https://www.google.com/amp/s/www.thequint.com/amp/story/explainers/uniform-civil-code-explained-what-it-is-and-why-it-matters
https://www.google.com/amp/s/www.thequint.com/amp/story/news/politics/uniform-civil-code-what-is-it-what-are-arguments-against-it-explained
https://www.google.com/amp/s/www.outlookindia.com/national/can-there-be-a-progressive-uniform-civil-code-magazine-290740/amp
https://theprint.in/opinion/sharp-edge/ucc-is-modis-nuclear-button-split-indian-politics-between-hindu-lovers-muslim-appeasers/1646918/?amp
http://www.islamkalvi.com/religions/polygamy.htm