தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும் சங்பரிவார் கும்பலை எதிர்கொண்ட மங்களூருவில் தயானந்த பை சதீஷ் பை அரசுக் கல்லூரி இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ஹிபா ஷேக்கிற்கு எதிராக வழக்குகளும் கொலை – பாலியல் பயமுறுத்தல்களும்தான் வந்து கொண்டிருக்கிறது.
ஹிபா வெளிப்படுத்திய தைரியத்தின் காட்சிகளை நாடும் மக்களும் கண்டார்கள். இந்துத்துவ இனவாத அமைப்புகள் அரசின் ஆதரவோடு கர்நாடகாவில் நடத்திவரும் ஹிஜாப் விரோத நடவடிக்கைகளின் பாகமாக சங்பரிவார் மாணவர் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் கல்லூரி வாசலில் நின்று கொண்டு இந்த மாணவியை தடுத்து நிறுத்தினார்கள். ஹிஜாபை கழட்டாமல் கல்லூரிகள் அனுமதிக்க மாட்டோம் என்றும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கொக்கரித்த அவர்களுக்கு முன்னால் கும்பிட்டு பிச்சை கேட்காமல், கதறி அழாமல் அவள் தைரியத்தோடு அவர்களை எதிர்கொண்டாள். “இது என்ன உனது தந்தையின் கல்லூரியா..? நானும் இங்கு கட்டணம் கட்டித்தான் படிக்கிறேன்” என கெத்தாக உரக்கச் சொன்னாள்.
கல்லூரி முதல்வரின் அனுமதியோடு தேர்வு எழுத கல்லூரிக்கு வந்த மாணவியின் விடைத்தாள்களை பறித்து, தேர்வு அறையில் இருந்து வெளியேற சொன்ன ஏபிவிபி தலைவர் சாய் சந்தோஷிற்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்த போதிலும் மிக இலகுவான வகுப்புகளின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆனால், ஹிபாவிற்கெதிராக சாய் சந்தோஷும் ஏபிவிபி தொண்டர் காவன ஷெட்டியும் அளித்த புகார்களின் அடிப்படையில் அச்சுறுத்தல், அமைதியை சீர்குலைத்தல் போன்ற வகுப்புகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து இந்துத்துவ ஐடி செல்களும் ட்ரோல் குழுக்களும் ஹிபாவுக்கு எதிராக வேட்டையாடி வருகின்றனர். உடல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இல்லாமல் செய்து விடுவோம் என்று அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அக்கிரமக்காரர்களை கண்டுபிடிக்கவோ சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கவோ அரசு சற்றும் தயாராக இல்லை. (டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பை தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சங்பரிவாரின் கும்பல் நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு எதிராக அக்கிரமங்களை கட்டவிழ்த்து வருகின்றனர். ஹிஜாபிற்கு எதிராக கர்நாடகாவில் நடந்து வரும் அக்கிரமங்கள் வெறும் ஒரு சாம்பல் டோஸ் என்பதைத்தான் இன்றைக்கு பாஜக ஆளும் பிற மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் இதுகால்தோறும் எவ்வித தடையும் இல்லாமல் தலை முக்காடு அணிந்து கொண்டு கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளை அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளனர். அமைப்புச் சட்ட சிற்பியின் பெயரால் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்திற்கு கீழே செயல்படும் அலிகரில் உள்ள ஸ்ரீவர்ஷினி கல்லூரிதான் உடையின் பெயரால் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது. கர்நாடகாவின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கின்ற பொழுது, சற்றும் தாமதிக்காமல் நாட்டிலுள்ள பிற கல்லூரிகளிலும் வெறுப்பின், பாகுபாட்டின் வைரஸ்கள் கொரோனா வைரசை விட வேகமாக பரவும். யோகியின் இரண்டாம் வரவால் உற்சாக மிகுதியில், ஆனந்தக் கொண்டாட்டத்தில் நிற்கும் இந்துத்துவ ஆயுதக்குழுக்கள், அவர்களின் தினவெடுப்பை காட்டுவதற்கான பொன்னான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள்.
பாஜக அரசுகளின், இந்துத்துவ அமைப்புகளின் அக்கிரமங்களை விட, இவற்றைக் கண்டு கடந்து செல்லும் பொதுச் சமூகத்தின், கலாச்சார செயல்பாட்டாளர்களின் அமைதிதான் பெரும் வருத்தத்தையும் கவலையையும் தருகிறது. முஸ்லிம் மாணவிகளை, களச் செயல்பாட்டாளர்களை, புரொபஷனல்களை சுல்லி டீல்ஸ், புள்ளி பாய் போன்ற ஆப்புகள் ஏலம் விட்ட பொழுது இதே அமைதியைத்தான் இவர்கள் கடைபிடித்தார்கள். சுல்லி டீல்ஸில் ‘விற்பனைக்கு வைக்கப்பட்ட’ முஸ்லிம் மாணவி காவல்துறையில் புகார் அளித்த போது, காவல்துறை அதை எவ்வாறு கையாண்டது என்பதை நாடு பார்த்தது. பெண்களுக்கான நீதியை குறித்தும் அவர்களுடைய கல்விக்கு தடை ஏற்படுவதை குறித்தும் பொதுவாக எழும் கவலைகளும் வருத்தங்களும் இந்தியாவில் முஸ்லீம் பெண்களுடைய விஷயத்தில் உயருவதில்லை. பொதுச் சமூகத்தின் இந்த நிலைப்பாட்டை தங்களுடைய அமைப்புச் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகத்தான் வலதுசாரி இனவாத அமைப்புகள் கருதுகிறார்கள்.
யார் உடன் வந்தாலும் வராவிட்டாலும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினாலும் இல்லாவிட்டாலும் தங்களுடைய அமைப்புச் சட்ட உரிமையை காப்பதற்காக எல்லாவித செயல்பாடுகளையும் முன்னெடுத்துக் கொண்டு சட்ட போராட்டங்களோடு முன்னே செல்லும் ஹிபாவையும் ஜெய் ஸ்ரீராம் என்று கொக்கரித்து வரும் சங்பரிவார் கொலைகார கும்பலுக்கு எதிராக அல்லாஹு அக்பர் என தக்பீர் முழக்கி, கை உயர்த்திச் சென்ற முஸ்கானையும் போன்ற மாணவிகளின் அசைக்க முடியாத உறுதியும் தீரமும்தான் சங்பாரிவார்களை கலவரப்படுத்துகிறது. அச்சமடைய வைக்கிறது.
மீண்டும் சொல்கிறோம்.
நவீன இந்தியா குத்புதீன் அன்சாரிகளின் இந்தியா அல்ல,
ஆயிஷா ரெனாக்களின், லதீதா பர்ஜானாக்களின், முஸ்கான்களின், ஹிபாக்களின், ஷர்ஜீல் இமாம்களின், உமர் காலிகளின், இஷ்ரத் ஜஹான்களின் இந்தியா.