பெங்களூரைச் சேர்ந்த 21 வயது பெண்ணான திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இளம்வயது சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை ஃபிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவான அந்த பிரச்சார ஆவணத்தினை பகிர்ந்ததற்காக கிரேட்டா துன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவிக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிட்டு திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
யார் திஷா ரவி?
2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை வைத்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன்பு தனது போராட்டத்தைத் துவங்கினார். Fridays For Future என்று அந்த போராட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பருவநிலை மாற்றத்தினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் பள்ளியை தவிர்த்துவிட்டு போராட்டம் நடத்தும் இயக்கமாக அது உருப்பெற்றது. உலகெங்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கிரேட்டா துன்பர்க்கின் போராட்டம் வரவேற்பினைப் பெற்றது.
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு Fridays For Future India எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.
கடந்த செப்டம்பர் மாதம் ’தி கார்டியன்’ ஊடகமானது இளம் சூழலியல் செயல்பாட்டாளர்களைப் பற்றி எழுதிய போது திஷா ரவி பெங்களூரில் பருவநிலை மாற்றம் குறித்து ஒருங்கிணைத்த போராட்டத்தினைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது. அதில் பேட்டியளித்திருந்த திஷா ரவி, ”நாங்கள் எதிர்காலத்திற்காக மட்டும் போராடவில்லை. நிகழ்காலத்திற்காக போராடுகிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெங்களூர் சந்தித்து வரும் அதீத மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் குறித்தும் அவர் ஊடகங்களில் பேசியிருந்தார்.
EIA 2020 வரைவு எதிர்ப்பு
Fridays For Future India சார்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA2020)-ன் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டது. EIA 2020 வரைவின் சிக்கல்களை கேள்வி எழுப்பி, அதனை திரும்பப் பெருமாறு கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு மின்னஞ்சல் வழியாக கேள்விகளை அனுப்புமாறும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
EIA 2020 குறித்து பிரச்சார ஆவணங்களும் அவர்களது இணையதளத்தில் இணைக்கப்பட்டிருந்தன. ஜூலை மாதத்தின் போது அவர்களது இணையதளம் அரசினால் முடக்கப்பட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கும், அமைதிக்கும் எதிரான விடயங்கள் அந்த இணையதளத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு டெல்லி காவல்துறை, UAPA சட்டத்தினைப் பயன்படுத்தி இணையதளத்தினை முடக்கியது. பின்னர் UAPA சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
தற்போது விவசாயிகள் போராட்டம் குறித்து கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த ஆவணத்தின் உருவாக்கத்தில் திஷா ரவியும் பங்கெடுத்திருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதனை திஷா ரவி மறுத்துள்ளார். அதில் தான் இரண்டே இரண்டு மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான சதி என்று குற்றம் சாட்டும் பாஜக
இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பெரிதாக தெரிந்து கொள்ளாதவர்கள் நிலைமையை புரிந்து கொள்வதற்கும், எப்படி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது என்பதையும் விளக்குவதாக அந்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இணையத்தின் வழியாக எப்படியெல்லாம் ஆதரவளிக்கலாம் என்பதையும் அந்த ஆவணம் தெரிவிக்கிறது.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக சதி நடப்பதற்கான ஆதாரமாக இந்த ஆவணம் அமைந்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும் கூட குற்றம்சாட்டி வருகிறார்கள். ராஜதுரோகம், சமூகத்தில் வெறுப்பினை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்து திஷா ரவியை கைது செய்துள்ளனர். இந்த ஆவணத்தை உருவாக்கியவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பினை பரப்பி வருவதாக பாஜக தரப்பில் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
திஷா ரவி கைதுக்கு குவியும் கண்டனங்கள்
திஷா ரவி கைது செய்யப்பட்டது கருத்துரிமையை நெறிக்கும் செயல் என்றும், சூழலியல் ஆர்வலர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் திஷா ரவிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திஷாவை விடுதலை செய்யக் கோரி ஆன்லைன் பெட்டிஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கவருகிறார்கள்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள்… திஷா ரவியை காப்பாற்ற நாம் மேற்கொள்ளும் முயற்சிதான் இயற்கையை காக்க நாம் மேற்கொள்ளும் ஆகச்சிறந்த முயற்சியாக இருக்கும்.
Madras review