அதிகரிக்கும் வகுப்புவாத வன்முறைகள், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழல், இராணுவமயமாக்கல் போன்றவற்றால் நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக The Institute for Economics and Peace (IEP) கடந்த புதன்கிழமை வெளியிட்ட உலக நாடுகளின் அமைதிக் குறியீட்டிற்காண தரவரிசைப் பட்டியலில் இந்தியா 126வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், வன்முறைக்காகச் செலவழிக்கப்படும் பொருளாதார அளவீட்டில் இந்தியா 86வது இடத்தைப் பெற்றுள்ளது.
IEPஇன் அறிக்கையின்படி, இந்தியா கடந்த ஆண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறாமல் எல்லை வன்முறைகளைக் குறைத்துக் கொண்டதன் விளைவாக அமைதிக் குறியீட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.5% முன்னேறியுள்ளது. எனினும், மேலே சுட்டிக்காட்டிய காரணங்களுக்காக இந்தியா அமைதிக் குறியீட்டில் பின்தங்கிய நாடாகவே கருதப்படுகிறது.
இந்த அமைதிக்குறியீடானது 2023ம் ஆண்டின் உலக மக்கள் தொகையில் 99.7% மக்கள் வாழும், அதாவது 163 நாடுகளை ‘சமூகப் பாதுகாப்பு, உள்நாடு – சர்வதேச மோதல்கள், இராணுவமயமாக்களின் அளவு’ போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து நாடானது இந்தப் பட்டியலில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதலிடத்தைப் பெற்றுவருகிறது. மேற்குறிப்பிட்ட அந்த மூன்று அளக்கும் காரணிகளிலும் குறைந்த மதிப்பீடுகளையே கொண்டிருப்பதால் தன் முதலிடத்தைத் தக்க வைத்து, உலகின் அமைதி நாடாகத் திகழ்கின்றது.
நம் நாடு கடந்த ஆண்டில் பாகிஸ்தான், சீனாவுடனான எல்லை தாண்டிய வன்முறை, போர் நிறுத்த மீறல்களைக் குறைத்துக் கொண்டதன் விளைவாக அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.