பர்தா தொடர்பாக முகநூலில் யாரோ ஒருவர் பர்தா பற்றி போட்ட சின்னப் பதிவு தற்போது பெரும் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட தலைப்புக்கு வந்தாலே கற்பு, ஒழுக்கம், உடை என பெண்ணுடலை மையப்படுத்தியே விவாதங்கள் எழுகின்றன. அதிலும் முஸ்லிம் பெண் என்றவுடன் இந்த புர்கா தான் பேசுபொருள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பெண் கல்வி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம், அரசியல் அங்கத்துவம் எனப் பேசத் தொடங்கினால் எல்லாச் சமூகத்து பெண்களின் நிலைமையும் கவலைக்கிடமாகவே இருக்கும். இப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிவரும் சமூகத்து ஆண்கள்கூட முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு எதிராகப் பேசுவது நகைப்புக்குரியது.
பொதுவாக, நாம் ஆடை அணிவதற்கு பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளோம். நம்மை அழகுபடுத்திக் கொள்ள, ஆளுமையைக் கண்ணியமாக வெளிப்படுத்த, உடலை மறைக்க உள்ளிட்ட குறிக்கோள்களை மனதில் கொண்டே அணிகிறோம்.
ஒவ்வொரு பண்பாட்டு மதிப்பீட்டுக்குத் தகுந்தாற்போல் ஆடை ஒழுங்கின் வரையறை மாறுகின்றது. ஒவ்வொரு சமூகமும் தனக்கான ஒரு வரையறையைக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்துக்கு பண்பார்ந்ததாகத் தெரியும் ஒரு நடைமுறை இன்னொரு சமூகத்துக்கு பண்பாடற்றதாய் தெரிவதற்கு இதுவே காரணம். பர்தாகூட அப்படித்தான். இது முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்று. இது மற்றவர்களுக்கு நெருடலாக இருந்தால், அது அவர்களின் கண்ணோட்டத்தில் உள்ள குறைபாடுதான். அதேபோல, முஸ்லிம்கள் தரப்பிலும் இதர சமூக பெண்களின் உடை ஒழுங்கு பண்பாடற்றதென கருதும் மனோநிலை இருக்கிறது. இதுவும் பிரச்னைக்குரியது.
ஆடை ஒழுங்கு குறித்து மேற்சொன்ன விஷயங்கள் சிந்திக்கத்தக்கவை. தற்காலத்தில் பர்தா பெண் ஒடுக்குமுறையின் குறியீடாகப் பார்க்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முஸ்லிம் பெண் ஒருவர் தனது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். அதை இங்கே சுட்டிக்காட்டல் தகும். அவர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு தன்னந்தனியாகப் விமானத்தில் போயிருக்கிறார். டெல்லி JNUவில் படித்துக் கொண்டிருக்கும் பெண் அவர். விமானத்தில் அவருக்கு அருகில் அமர்ந்துவந்த நபர், அந்தப் பெண்ணின் தலையிலிருந்த முக்காடை சுட்டிக்காட்டி, இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது தானே என்கிற ரீதியில் கேட்டாராம்.
இந்த நிகழ்வைப் பகிர்ந்துகொண்ட முஸ்லிம் பெண், அப்படிக் கூறுபவரின் புரிதலில் உள்ள சிக்கலை விளக்கிப் பேசினார். அந்தப் பெண் தன்னந்தனியாக விமானத்தில் பயணம் செய்வதோ, மத்தியப் பல்கலையில் படிப்பதோ அவருக்கு பெண் விடுதலையாகத் தெரியவில்லை. அவரின் கண்களுக்கு அந்தப் பெண் தலையிலிருந்த முக்காடு மட்டும்தான் உறுத்தலாக இருக்கிறது. இந்தக் கண்ணோட்டம்தான் சிக்கலுக்குரியது.
வழக்கம்போல இஸ்லாத்தின் ஒளியில் பர்தா எனும் உரையாடலுக்கு வருவோம். இஸ்லாம் உடை அணிவதற்கான வரையறையை மட்டும் வகுத்துத் தருகிறது. அது ஓர் ஆடை மேல் இன்னொரு ஆடை அணியச் சொல்லவில்லை. என்றாலும் இங்கே நடைமுறை அப்படித்தான் இருக்கிறது. அதிலும் கருப்பு நிற புர்கா மட்டுமே அணியவேண்டும் என்கிற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள் சீர்திருத்தவேண்டிய அம்சங்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
எதற்கெடுத்தாலும் குர்ஆனிலிருந்தும் நபிகளின் போதனைகளில் இருந்தும் ஆதாரம் கேட்கும் வழக்கமுடையவர்கள்கூட இஸ்லாமிய நூல்கள் வலியுறுத்தாத கருப்பு நிற புர்காவுக்கு அழுத்தம் கொடுப்பதில் முன்னிலையில் இருக்கின்றனர் என்பது முரண்நகை.
இறுதியாக ஒன்று. யாரோ ஒருவர் முகநூலில் பதிவு போட்டதற்கு எதிர்வினையாற்றுவதில் முஸ்லிம்கள் கொள்ளும் அக்கறையை, தங்களுக்குள் இது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதில் கொள்ளலாமே?