சமீப காலமாக அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல்கள் அதிகமாகிவருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் தளவாரம்பூண்டி அரசுப் பள்ளியில் நுழைந்த தவெக நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தைக் காண்பித்து “இவர் யார்? விஜய் அண்ணா என்று சொல்லுங்கள் ” என மாணவர்களை கூறவைத்துள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி அதை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதேபோல் திருவாரூர் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தவெக நிர்வாகிகள் அனுமதியில்லாமல் கட்சி துண்டு அணிந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பள்ளி மாணவர்களை உட்படுத்தி நடத்தப்பட்டிருப்பதும், இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்களும் கலந்துக்கொண்டது கண்டனத்திற்குரியது.
மேலும் பள்ளி மாணவர்களை முதலமைச்சர் விஜய் நடித்த சினிமா பாடல்களை பாடவைத்து அதை ரீல்ஸ்ஆக எடுத்தும் தவெக-வினர் வெளியிடுகின்றனர். பள்ளி வளாகங்களில் தவெக கொடி கட்டுவது, முதலமைச்சர் விஜய் நடித்த ஆபாச சினிமா பாடல்களை ஒளிக்கச் செய்வது, முதலமைச்சரின் பெயரை தொடர்ந்து உச்சரிக்க வைத்து அதை ரீல்ஸ் ஆக வெளியிடுவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
ஒழுக்கத்தையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் போதிக்கும் பள்ளி வளாகங்களில் சினிமா கவர்ச்சியையும், ஆபாசத்தையும் நினைவூட்டும் விதமாக நடந்துக்கொள்ளும் தவெக கட்சியினரின் அத்துமீறல்களை SIO வன்மையாக கண்டிக்கின்றது.
அரசியல் ஆதாயத்திற்காக பள்ளி மாணவர்களைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. கட்சி வேறு ஆட்சி வேறு என்பதை புரிந்துக் கொண்டு, பொது இடங்களில் ஆளும் கட்சியினருக்கான அதிகாரவரம்பை தவெக அறிந்துகொள்ள வேண்டும்.
பள்ளிகளில் அரங்கேரிய தவெக- வினரின் அத்துமீறல்களை SIO வன்மையாக கண்டிக்கின்றது. இது போன்ற நிகழ்வுகள் வரக்கூடிய காலங்களில் நடைபெறாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என SIO கோரிக்கை வைக்கின்றது.

