மனிதக் குல இயக்கத்தில் மாபெரும் பின்னடைவாக மனிதன் தனக்குள்ளாக வகுத்துக்கொண்ட படிநிலைகள் அமைகிறது. இதில் பெரும் அவமானகரமான அதே நேரத்தில் மனிதத்திற்கான அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியது அடிமை அமைப்புமுறை. நாகரிக சிந்தனை தோன்றிய நாள்முதலே உருப்பெற்ற அடிமை முறையும், நாகரிகங்கள் பல கடந்தும் ஒழியாது மாறா சிந்தனையாகப் பரிணமித்தது. உலகின் முடிவு என்று ஒன்று இருந்து, அதிலிருந்து இவ்வமைப்புமுறையைத் திரும்பிப் பார்த்து இச்சமூகம் உணருமானால், உயிரிகளில் தாங்கள் மேலானவர்களாக இருந்துள்ளோமா என்ற கேள்விக்கு முன் வெட்கி தலைகுனிந்து நிற்கும். அப்படிப்பட்ட நிலையின் போராட்டங்களை உணர நினைவுக்கூறும் தினங்களில் ஒன்றாக அடிமை ஒழிப்பு தினம் உள்ளது.
நாகரிக நிலையினால் உருவான தனிச்சொத்துகளை பெருக்கவும், உற்பத்தி முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மனிதன் அடிமையை உருவாக்கினான். கிரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோன் போன்ற தொன்மையான நாகரிங்ககளின் வளர்ச்சிக்கு அடிமைகளின் உழைப்பே மூலாதாரமாக இருந்தது. இங்கு உழைப்பு என்பது எந்த வரையறைக்கும் உட்படாதது. அதனாலேயே அடிமைகளை ‘பேசும் கருவிகள்’ என்று அரிஸ்டாட்டில் குறிப்பிட்டார். பிரமிடு, சீனப் பெருஞ்சுவர் என்ற ஒவ்வொரு வரலாற்றுச் சின்னங்களின் பின்பும் அடிமைகளின் ரத்தம் தோய்ந்துள்ளது. உழைப்பு என்றில்லாது ஆதிக்க மனிதர்களின் கௌரவ வடிவமாகவும் அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளின் கொடூரமான வரலாறாகக் கருதப்படும் ரோமில் மன்னர்கள் தங்களின் பொழுதுபோக்கு பொருளாக அவர்களை நடத்தினார்கள். ‘கிளாடியேட்டர்’ எனப்படும் அடிமைகளை மற்றொரு அடிமையுடன் அல்லது சிங்கம், புலி என விலங்குகளுடன் மோதவிட்டு ரசிக்கும் வழக்கம் ரோமிலிருந்தது.
வர்ண அமைப்பிலேயே அவரவர்களுக்கான நிலையை வரையறுத்த இந்தியாவில் அடிமை முறையும் நிறுவனப்பட்டு இருந்தது. வேதகால இந்தியாவில் ‘தஸ்யூ’ அல்லது ‘தாஸ’ என்ற சொல் ஆரம்பத்தில் பகைவரையும், பின் ‘தாஸர்’ என்று அடிமைகளையும் குறிப்பிடுகிறது. ‘இனக்குழுக்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் தோல்வியடைந்து சிதறுண்ட மக்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். பின், அவர்கள் தீண்டதகாதவர்களாக மாற்றப்பட்டு கீழ்நிலையில் நடத்தப்பட்டனர்’ என்கிறார் டாக்டர் அம்பேத்கர். மேலும், அவர்களின் நிலை அடிமை நிலைக்கு நிகராகவும், பல நேரங்களில் அதைவிட மோசமாகவும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியாள், பண்ணையாள், குடிப்பறையன், கொத்தடிமை என்ற பல்வேறு பெயர்களின் கீழ் ஒரு பிரிவினர் அல்லல்பட்டு ஆறாது அழுது மடிந்தனர் என்று விளக்குகிறார் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன்.
அடிமை வர்த்தகம் :
தொழிற்புரட்சியைத் தோற்றுவித்த நவீனக் காலம் அடிமை வர்த்தகத்தை உலகளாவிய சந்தையாக மாற்றியது. ஐரோப்பிய வர்த்தக பரிவர்த்தனை ஆப்ரிக்க கண்டத்திலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தது. அமெரிக்க என்ற நிலத்தில் ஐரோப்பியர்கள் குடியேறியவுடன் இவ்வர்த்தகம் மேலும் விரிவடைந்தது. ஐரோப்பியப் பொருட்களை ஆப்பிரிக்க ஆளும் வர்க்கத்திடம் கொடுத்து அதற்குப் பதிலாக அடிமைகள் பெறப்படுவார்கள். அந்த அடிமைகள் அமெரிக்காவில் விற்கப்பட்டு, மாறாக அங்குள்ள பொருட்களுடன் வர்த்தகர்கள் ஐரோப்பிய திரும்புவதுமாக முக்கோண வர்த்தக முறை நடைபெற்றது. ஆப்ரிக்க கறுப்பின மக்கள் பல நேரங்களில் பலவந்தமாக, ஏமாற்றி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனை, ’22 மில்லியன் ஆப்பிரிக்கர்களை அமெரிக்க வல்லாதிக்கம் திட்டமிட்டுக் கடத்தியது’ என்பார் கறுப்பினத் தலைவர்களுள் ஒருவரான மால்கம் எக்ஸ். அடிமைகள் சந்தைப்படுத்துதல் என்பது நிர்வாணமாக்கி உடல் அங்கங்களைச் சோதனையிடும், முத்திரை பதிக்கும், விலங்குகளைப்போல் கட்டுப்படுத்தும் முறையாக இருந்தது. அமெரிக்கா அடிமைகளை மிகவும் இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தியது. அவர்களுக்கான எந்தவித உரிமையும் வழங்கப்படவில்லை. கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் வாழ்க்கை முழுவதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற கொடூர சட்டம், 1680ல் வர்ஜீனியா சட்டசபையில் இயற்றப்பட்டது.எனவே, இன்று அமெரிக்கா என்ற பிரம்மாண்டத்திற்குப் பின் அடிமைகளின் கருப்பு வாழ்வியல் அடங்கியுள்ளது.
இன்றும் கடுமையாகத் திணிக்கப்படும் வேலை, குறைவான கூலி, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழில் போன்ற நவீன முறைகளில் அடிமை முறை கையாளப்படுகிறது. இதில் ஈடுபடுத்தப்படும் பெரும்பாலானோர் எந்தவித சுதந்திரம் இன்றி அச்சுறுத்தப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய அறிக்கைகள். வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் இடம்பெயர்தலும், பாதுகாப்பற்ற சமூகச் சூழல்களில் நிகழும் கடத்தல்களும் இன்றைய அடிமை வர்த்தகத்தில் முதன்மையாக உள்ளது. ‘டிரான்ஸ்அட்லான்டிக்’ எனப்படும் அட்லான்டிக் கடலை மையம் கொண்டிருந்த அடிமை வர்த்தகம் இன்று உலகளாவிய உள்நாட்டு இடம்பெயர்வு வரை தாக்கம் செலுத்துவது வர்த்தக நிலையின் மோசமான வெளிப்பாடையே குறிக்கிறது.
-அப்துல்லா.மு