நிதிப் பற்றாக்குறை , உள்கட்டமைப்பு, நிரந்தர பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பது போன்ற அடிப்படை ப்ரச்னைகள் காரணமாக தேசம் முழுவதிலும் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பதுவே ஆய்வறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் சொல்லும் பொதுவான செய்தியாக உள்ளது. இந்த சூழலில் 60 கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அறிவித்திருப்பது அரசின் தோல்வியையும், கல்வித்துறையில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது.
தாராளமயமாக்கல், தன்னாட்சி இவற்றால் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, மாறாக தனியார்மயமாக்கம் மூலம் கல்வி வணிகமாக்கப்படவே வழிவகுக்கும். கல்வித்துறையில் தனியார் பெருமுதலாளிகள், வியாபார முதலைகள் கால் பதிப்பதன் மூலமும், பாடத்திட்டங்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதாலும் ஆற்றல்மிகுந்த தொழிலாளிகளே உருவாக்கப்படுவார்கள். நிதர்சனத்தில் அவர்கள் சட்டப்பூர்வமான குழந்தைத் தொழிலாளர்களே .
கல்வி நிறுவனங்ளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்பது அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்க வழிகோலுவதுடன், உயர்கல்விக்கு நிதி வழங்குவதில் இருந்து அரசு பின்வாங்குவதாகவும் அமையும். பிறகு நிறுவனங்களை நடத்துவதற்கு தன்னாட்சி அமைப்புகள் குறுகிய கால படிப்புகளை துவக்கி பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் படிப்புகள் நடத்தும் தனியார் நிறுவனங்களாக மாறிவிடும். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு செலவிடப்படும் தொகை ஏற்கனவே கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு கல்வி அனைவருக்குமானதல்ல, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகும்.
தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தால் பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி, ஜனநாயக சூழல் புதைக்கப்பட்டு தேசத்தின் எதிர்காலம் பல்கலைக்கழகங்களில் இருந்த நிலை மாறி ராஜாக்களும், அவர்களது வாரிசுகளும் தேசத்தை ஆளும் நிலை உருவாக்கப்படும். கல்வி முறைமை வழிவழியாக தலைவர்களை உருவாக்காது, மாறாக ஆளும் வர்க்கத்தினரின் ஆதரவு பெற்ற பெருமுதலாளிகள், வியாபார முதலைகளின் விரல் சொடுக்கில் ஆடும் இயந்திரங்களையே உருவாக்கும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது தேவையாக உள்ளது. தேசத்தின் அறிவுசார் நிபுணர்கள் அதற்காக விவாதிக்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்கவும் குரல் எழுப்ப வேண்டும்.
சையது அசாருதீன்
தேசிய செயலாளர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு