இந்தியாவில் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 28 கோடியே 63 லட்சத்து 76 ஆயிரத்து 216 ஆகும். கொரானா கால தற்போதைய நெருக்கடிகள், தேக்கநிலைகள் ஆகியவை சுட்டிக்காட்டும் அறிகுறிகளை வைத்தே இதில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு திரும்பமாட்டார்கள் என்று யுனஸ்கோ அறிக்கைத் தெரிவித்துள்ளது. வேதனை தரும் இந்த செய்தியை முன்வைத்தே நமது அணுகுமுறைகளை ஆய்ந்து பார்க்கலாம்..
இந்த மூன்றுமாத காலகட்டத்தில் இந்தியாவில் 14 கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கொரானாகால நெருக்கடிகள் இப்படியே தொடரும் பட்சத்தில் பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன.
கொரானா கால கல்விச் சூழலை உலகளாவிய நிலையில் வைத்து பார்த்தோமானால் உலகம் முழுதும் பள்ளிகளில் கல்வி பயிலும் 172 கோடி குழந்தைகளில், கோவிட் அச்சம் உச்சம் தொட்ட ஏப்ரல் மாத காலகட்டத்தில், 95% மேல் கல்விக்கூடங்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
இவர்களை மீண்டும் கல்விச் சூழலுக்குள் பொருத்த முன்வைக்கப்பட்ட இணையவழிக் கல்வி (Online education) குறித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ள யுனஸ்கோ, உலகெங்கும் பரவலாக புகுத்தப்பட்ட பலவகைப்பட்ட தொலைதூர கற்பித்தல் முறைகள், பாரம்பரிய வகுப்பறை போதானா முறையைக் காட்டிலும் குறைபாடுள்ள, மோசமான வழிமுறைகளை கொண்டுவந்து தந்து தோல்வியடைந்துள்ளது. சொல்லப்போனால் பல்வேறு பின்தங்கிய நாடுகள் இணையத்தைப் புறக்கணித்து தொலைக்காட்சி, வானொலி வழி கற்பித்தலையே தேர்வு செய்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தேசங்களின் வளர்ச்சிக் குறியீட்டு புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் குறைந்த தனிநபர் வருமானம் உள்ள நாடுகளில் 55%னரும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 73%னரும், உயர் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் 93%னரும் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளுக்கு இணையவழிக் கல்விதளங்களைத் தேர்வு செய்துள்ளனர் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. இது கல்வி பெறும் உரிமையில் நேரடியாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் தலையீட்டை அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது..
இந்தியாவைப் பொருத்தவரை மொத்த மக்கள்தொகையில் 29% குழந்தைகளாக இருக்கின்றனர். அதில் 19.29 % குழந்தைகள் 6-14 வயதினராக உள்ளனர். இவர்களுக்குத் தடையற்ற கல்வியை வழங்குவது 2019 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாகும்.. அந்த உரிமையில் தான் தற்போது கொரானா கிருமியைக் காரணம் காட்டி கைவைக்கப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்தில் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) ‘ஆசிரியர் மற்றும் கற்பித்தலியலை’ (Teacher and Pedagogy) கவலைக்குரிய விசயமாக பார்த்து இணையவழிக் கல்வியை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளது. சொல்லப் போனால் அதைமட்டுமே ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் நிலவும் ஒற்றைச் சிக்கலாக வரையறுத்திருக்கிறது.
உதாரணத்திற்கு இங்குள்ள பள்ளிகளை மட்டும் எடுத்துக் கொள்வோமேயானால், இந்தியாவில் மொத்தம் 14 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் சுமார் 12% பள்ளிகள் மட்டுமே கல்வி உரிமைச்சட்ட வரையறைகளுக்குட்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.. இது இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 11 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள பரிதாபமான நிலை.
2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO) நடத்திய ஆய்வில் இந்திய மக்களில் வெறும் 27% மட்டுமே திறன்பேசி (smartphones) வைத்திருப்பதாகவும் 23.8% வீடுகளில் மட்டுமே இணைய வசதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தத்தின் காரணமாக இந்தளவு சற்றே கூடியிருக்கக் கூடும்.. எப்படியிருந்தாலும் 40% மக்கள் இணையத் தொடர்பில் உள்ள வசதி கொண்ட இந்திய மாநிலங்கள் இரண்டு மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் தொிவிக்கின்றன. இந்த பழுதுபட்ட அமைப்பில் தான் சிபிஎஸ்இ இணையவழிக் கல்வியை சர்வரோக நிவாரணியாக முன்வைத்திருக்கிறது நிச்சயமாக இது மறைமுக நோக்கங்களைக் கொண்டதாகும்.
(தொடரும்)
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்