இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?
இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இதுகுறித்த அக்கறையும், கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மால் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே.
அதற்கான நமது சிந்தனைகள் எல்லாம் அடிப்படையில் பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களுக்கு சிக்கல்களைப் பகுத்தறிவைக் கொண்டு விளக்கிப் புரியவைத்தால், மக்கள் ஒன்று திரண்டு ஆதரிப்பர் என்ற எண்ணம் இருக்கிறது. இப்பொழுது இந்த கருதுகோள் தவறு என்றால் என்னவாகும்?
அரசியலில் உணர்வும், பகுத்தறிவும்:
பொதுவாக மனிதன் பகுத்தறிவானவன் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே அரசியல் செயல்பாடுகள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் அரசியலைப் பற்றி சிந்திப்பதில்லை, மாறாக அவர்களின் உணர்வுகளின் வழியாக அரசியலைப் பார்த்து எது பிடித்திருக்கிறதோ அந்த அரசியலை ஆதரிக்கின்றனர். தீர விசாரித்து நன்மை, தீமைகளை கணக்கிட்டு எடுக்கப்படுவதல்ல. அரசியலில் உணர்வுக்கும், பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார் வெசுடன். அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.
அரசியல்வாதிகள் மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை, மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம், வெறுப்பு, பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.
இன அரசியல்:
உணர்வுகளின் முக்கியத்துவத்தை அடைப்படையாகக் கொண்டு சுடூவர்டு காஃப்மன் அவர்கள் இன அரசியலை ஆராய்ந்து “குறியிட்டு அரசியல் தத்துவம்” (Theory of Symbolic Politics) என்று ஒரு தத்துவத்தை வெளியிட்டுள்ளார். அவரின் தத்துவப்படி இன அரசியலின் அடிப்படையாக இருப்பது வரலாற்றுக் கற்பிதங்கள். இந்த கற்பிதங்கள் அண்டைய இனங்களைப் பற்றி பாரபட்சங்களையும் ஓரவஞ்சனைகளையும் கற்பித்தால், அது இனங்களுக்கிடையே பயத்தை உருவாக்குகிறது. அவற்றை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி கருத்துருவாக்கம் செய்து மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர். பின்பு அந்த ஆதரவின் துணையுடன் நல்ல பரவலாக்கப்பட்ட அடிமட்ட அமைப்புகளை உருவாக்கி, மக்களை அணி திரட்டுகின்றனர்.
உதாரணமாக, சிங்கள தேசியத்திற்கும் அதன் தமிழின அழிப்பிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சிங்களர்களின் மகாவம்சக் கட்டுக்கதைகளே என்கிறார் கேப்வெரர்:
குறியீட்டு சார்புகள், ஓரவஞ்சனைகள் (Symbolic Predispositions, Prejudice) உணர்வுகளைத் தூண்டி செயல்படுத்தும் குறியீடுகள் அனைத்தும் குறியீட்டு சார்புகளாகும். கொடி, சின்னம், சித்தாந்தம் (இந்துத்வா, தமிழ்த்தேசியம்) ஆகியவையும் குறியீட்டு சார்புகளே. குறியீட்டு சார்புகளும் ஓரவஞ்சனைகளும் மக்களுக்கு அவர்களின் கற்பிதங்கள்
மூலம் வருகிறது. இரு இனங்களுக்கிடேயே எவ்வளவு ஓரவஞ்சனை (Prejudice) உள்ளதோ, அதனைப் பொறுத்தே பகையும் இருக்கும்.
அச்ச உணர்வுகள்:
ஓர் இனம் எவ்வளவு தூரம் ஓரவஞ்சனை கொண்டுள்ளார்களோ, அவ்வளவு தூரம் வேற்றின மக்களிடமிருந்து ஆபத்தை உணர்வார்கள். ஓரவஞ்சனை இல்லாவிட்டால், அச்சம் தோன்றுவதில்லை. அது போன்ற நிலையில், அரசியல் என்பது பெரும்பாலும் எவ்வாறு பொருளாதாரப் பயனைப் பங்கிடுவது என்றே இருக்கும்.
கருத்துருவாக்கம்:
எப்படிப்பட்ட கருத்துருவாக்கத்தையும் கொண்டு ஒரு தலைவரால் வெற்றி பெறமுடியாது. எப்பொழுது கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளை ஒத்து இருக்கிறதோ, அப்பொழுதுதான் மக்களின் ஆதரவு பெருகும். சுருக்கமாகக் கூறினால் தலைவர்கள் கருத்துருவாக்கம் மூலம் தலைமை தாங்குகிறார்கள். அக்கருத்துருவாக்கம் சாதகமான உணர்வலைகளை ஏற்படுத்தினால், மக்கள் ஒன்று திரள்வர். உதாரணமாக, இலங்கைத்தீவு புத்த தர்மத்திற்காக கடவுளால் அளிக்கப்பட்டது என்று மகாவம்ச புராணக் கதைகளினால் சிங்கள தேசிய கருத்தியலை கட்டமைத்துள்ளனர். அதுபோலவே இந்துத்வாவும் இராம இராச்சியம் அமைப்போம், இந்தியா ஒரு இந்து தேசம் என்ற கருத்தியலை புராணங்கள் மூலம் கட்டியமைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்களது கருத்துருவாக்கம் மக்களிடம் உள்ள கற்பிதம் சார்ந்த குறியீடுகளுடன் ஒத்து வருவதால், மக்கள் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். திராவிட அரசியல் என்பது பகுத்தறிவு இயக்கத்திலிருந்து வந்தது என்றாலும், அவர்களின் வெற்றிக்குக் காரணம் பகுத்தறிவு அல்ல. அன்று மக்களிடம் பரப்பப்பட்ட ஆரிய-திராவிட கற்பிதங்கள், மொழிப் பற்று,
திரைப்படங்கள், உணர்வுப் பூர்வமான மேடை பேச்சுக்கள், சமூக நீதி ஆகியன மக்களின் உணர்வுகளைத் தூண்டி இழுத்தது. மக்களின் உணர்வுகளை வென்றதால்தான் அரசியலில் வெல்ல முடிந்தது.
அமைப்புகள்:
கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளுடன் ஒத்து இருக்கும்பொழுதே ஆதரவு பெருகும், ஆனால் அது மட்டும் மக்களை அணி திரட்டிவிடாது. மக்களை பல்வேறு அமைப்புகள் மூலம் ஒரு வலைப்பின்னலாக இணைக்கவேண்டும். கருத்துருவாக்கம் என்பது வான்போர் போன்றது; வலைப்பின்னல் என்பது தரைப்போர் போன்றது. இரண்டு போர்களையும் சரியாக நடத்தினால்தான் மக்கள் அணிதிரள்வர்.
இன்று இந்துத்வா அமைப்புகள் நாடு முழுவதும் பலவேறு கிளைகளை உருவாக்கி இந்துக்களின் குறியீட்டு சார்புகளைக் கொண்டு அவர்களின் அமைப்புகளில் சேர்த்து வருகிறது. இந்த அமைப்புகள்தான் இந்துத்வ அரசியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். அவர்கள் குறியீட்டு சார்புகளின் தன்மையை நன்றாக உணர்ந்து அதை பயன்படுத்துகின்றனர்.
இன எழுச்சிக்கு தேவையான நிலைமைகள்:
இதுவரை பார்த்ததிலிருந்து, ஒர் இன எழுச்சி ஏற்பட பல சாதகமான நிலைமைகள் இருக்கவேண்டும் என்பது தெளிவாகின்றது.
- இனங்களுக்கிடைய ஓரவஞ்சனை
- தலைவர்கள் அதைப்பயன்படுத்தி கருத்துருவாக்கம் செய்யதல்
- நாடு முழுவதும் பரவலான அமைப்புகளை ஏற்படுத்தி மக்களை ஒருங்கிணைத்தல்
- மேலும் எதிர்கொள்ள முடியாதபடி அதீத அடக்குமுறை இருந்தாலும், எழுச்சி ஏற்படாது. இத்தனையும் சாதகமாக இருக்கும்பொழுதே எழுச்சி ஏற்படும். ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் எழுச்சி ஏற்படாது. இதனால்தான் இன எழுச்சி என்பது அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை.
ஃபக்ருதீன் அலி – எழுத்தாளர்