1990களில் தனது ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து வந்த ஹமாஸ், மேற்குக்கரையில் வெறும் 18% நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரத்தை மட்டும் வழங்கியிருந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தை – அமைதி புறப்பாட்டில் இஸ்ரேலின் பிறிதொரு கண்துடைப்பாகவே கண்டது. விளைவு தற்கொலைப் படைத் தாக்குதல்களை ஹமாஸ் முடுக்கிவிட்டது. இந்நிலையில் ஹமாஸை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கியது இஸ்ரேல். ஹமாஸின் தலைவர்களில் பலர் வரிசையாக கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறைபடுத்தப்பட்டனர். மேலும் பலஸ்தீனர்களுக்கு மத்தியில் அப்போது உச்சகட்ட செல்வாக்குப் பெற்றிருந்த அரபாத்தின் அமைதி முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக ஹமாஸ் மீது கற்பிக்கப்பட்ட அவப்பெயர், இயக்கத்தின் வெகுசன ஆதரவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைத்தது. இஸ்ரேலிய பழிவாங்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், அரசியல் – சமூகரீதியான தனிமைப்படுதலை தவிர்க்கவும் ஹமாஸ் அடக்கி வாசிக்க முடிவு செய்தது. விளைவாக 1998 முதல் 2000 வரை தற்கொலைப் படைத் தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தியது ஹமாஸ்.
இதற்கிடையில் ஜூலை 2000 ஆண்டில் டேவிட் முகாமில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ட்டன், இஸ்ரேலிய பிரதமர் யஹூத் பராக், பலஸ்தீன ஆட்சி மன்ற தலைவர் அரபாத் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உச்சி மாநாடு தோல்வியைத் தழுவியதையடுத்து ஹமாஸின் செல்வாக்கு மீண்டும் உயரத் தொடங்கியது. சில மாதங்களுக்குள் இஸ்ரேலின் பிரதம வேட்பாளராக தேர்தல் களத்திலிருந்த ஏரியல் ஷரோன் திடுதிப்பென மஸ்ஜித் அல் அக்ஸாவிற்குள் நுழைந்து பலஸ்தீனர்களை வெறுப்பேற்றினார். (அத்வானியின் ரத யாத்திரை நினைவிற்கு வந்தால் நாம் பொறுப்பல்ல). இதனைக் கண்டித்து மேற்குக்கரையிலும் காஸாவிலும் வெடித்த போராட்டங்கள் பெரும் கலவரங்களாக மாறி, அல் – அக்ஸா இன்டிபடாவிற்கு வழிவகுத்தது. இஸ்ரேலிய பேரினவாதத்திற்கு எதிராக ஹமாஸ் மீண்டும் தன் வழக்கமான பாணிக்குத் திரும்பியது. அரபாத் தலைமையில் நான்காண்டுகள் நடைபெற்ற அதிகாரங்களற்ற பலஸ்தீன ஆட்சியின் குளறுபடிகள் ஹமாஸின் புரட்சி வழிக்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுத் தந்தது. ஒஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தாகி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் சுதந்திர, இறையாண்மை பெற்ற பலஸ்தீன தேசம் அமைவதற்கான விடிவெள்ளி அரசியல் வானில் முளைக்கவேயில்லை. ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இஸ்ரேலிய ஆதிக்கத்தின் பிடியை மேலும் இறுகத்தான் வழிவகுத்தன. பலஸ்தீன மக்கள் வேலையின்மை, வறுமை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு என பல்வேறு சிக்கல்களால் பெருந்துயருக்கு ஆளாகியிருந்தனர். 2002 ஆம் ஆண்டின் கணக்குப்படி பலஸ்தீனர் வேலையின்மை 41% ஆக அதிகரித்திருந்தது. உலக வங்கி நடத்திய கணக்கெடுப்பில் பலஸ்தீனர்களுக்கு மத்தியில் ஏழ்மை 60% மேல் உயர்ந்திருந்தது. பொம்மை அரசாங்கமாக அமைந்திருந்த பலஸ்தீன ஆட்சி மன்றம் நிலைத்த பொருளாதார சூழலை ஏற்படுத்துவதில் பெரும் தோல்வியைத் தழுவியிருந்தது. ஒஸ்லோ ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இஸ்ரேல் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எல்லாம் சேர்ந்து பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இஸ்ரேலிய ஆக்கரமிப்பை விட்டும் பலஸ்தீன விடுதலைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தன. இரண்டாம் இன்டிஃபடாவிற்கு முன்பாக ஆயுதப் போராட்டத்திற்கு 52% ஆக இருந்த பலஸ்தீனர் ஆதரவு, ஒரு வருடத்தில் 86% மாக உயர்ந்ததாக ஒரு கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. அல் அக்ஸா போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே (2000 – 2001) பலஸ்தீன தரப்பு பேரிழப்புகளைச் சந்திக்கத் தொடங்கியது. இஸ்ரேலிய தாக்குதலில் 1781 பேர் கொல்லப்பட்டனர். 20455 பேர் பலத்த காயமுற்றனர். மேலும் ஆயிரக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். எண்ணற்ற வீடுகளும் விளைநிலங்களும் இஸ்ரேலிய ராணுவத்தால் அழிக்கப்பட்டன. இதற்கெல்லாம் பதிலடியாக ஹமாஸ் தற்கொலைப் படைத் தாக்குதலில் இறங்கியது.
இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதால் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச பார்வை முற்றிலும் மாறிப்போனது. அமெரிக்க ஜனாதிபதி புஷ் 2002 ஜூலை 24ம் நாள் ஆற்றிய உரையில், பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும், பலஸ்தீனத்தில் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் பலஸ்தீன ஆட்சி மன்றம் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் இதனை அமெரிக்கா ஒரு நாளும் ஏற்காது என்றும் எச்சரித்தார். இந்த எச்சரிக்கை பிரத்தியேகமாக ஹமாஸை குறிவைத்தே விடுக்கப்பட்டது என்பதை சொல்லத் தேவையில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சர்வதேச மொழியை தனது ராணுவ அட்டூழியங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல். அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புபடுத்தி சர்வதேச அளவில் ஒர் எதிர்மறை பிம்பத்தை ஹமாஸ் மீது உருவாக்கியது இஸ்ரேல். அதே நேரத்தில் ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு போராட்டக் குழுக்களுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தது. பலஸ்தீன மக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 56.1 சதவிகிதத்தினர், ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை பலஸ்தீன விவகாரத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தனர். இந்த நெருக்கடிகளை விட்டு வெளிவர எகிப்தின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்டு ஜூன் 2003ல் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு சம்மதித்தது ஹமாஸ். அந்த ஆறுவார இடைவெளியில் தனது அணுகுமுறையில் ஏகப்பட்ட மாற்றங்களை ஹமாஸ் தலைவர்கள் வெளிப்படுத்தினர். “பலஸ்தீன மக்களின் 78% நிலத்தை பேரத்தின் மூலமாகவே இஸ்ரேல் கையகப்படுத்தி விட்டதால், ஒன்று நாம் நமது மக்களின் உரிமைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் அல்லது நமது எதிர்ப்புநிலையில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று அறிவித்தார் ஹமாஸின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் ரன்டிஸி. இதற்குப் பிறகுதான் ஹமாஸ் தனது “எதிர்ப்புநிலை” (Resistance) எனும் அரசியல் திட்டம் குறித்து விரிவாக பேச ஆரம்பித்தது. அதில் உயிர்த் தியாகம், ஜிஹாத் போன்ற எதற்கும் அழுத்தம் கொடுக்காமல் யூத – சீயோனிஸ அரசின் கெடுபிடிகளை எதிர்த்துத் தொடர்ந்து சமூக, அரசியல், பொருளாதார நிலைகளிலும் தாக்குப் பிடிப்பது, இஸ்ரேலிய அரசை ஏற்காமல் ஒத்துழையாமையை கடைபிடிப்பது ஆகியன வலியுறுத்தப்பட்டன. மேற்குக்கரை – காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகியவை இணைந்த பலஸ்தீனம் அமைந்தால் இரு தேசமாக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட பத்தாண்டு உடன்பாட்டையும் ரன்டிஸி முன்வைத்தார். 2003 ஆம் ஆண்டு தொடங்கியே ஹமாஸ் ஆயுதப் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டு அரசியல்மையப்பட ஆரம்பித்திருந்தது. 2004 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹமாஸ் நிறுவனர் ஷேக் அஹமது யாசீனின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் மக்கள் திரண்டதும் அதிகாரத்தை நோக்கிய ஹமாஸின் பார்வைக்கு வலுசேர்த்தது. காஸாப்பகுதியை விட்டு யூதக் குடியிருப்புகள் மற்றும் ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் ஏரியல் ஷரோனின் முடிவை தன் அரசியல் வெற்றியாகவும் பறைசாற்றிக் கொண்டது ஹமாஸ். உண்மையில் காஸாவை விட்டு விலகிக் கொள்ளும் திட்டத்தின் மூலம் இஸ்ரேலிய அரசு ஹமாஸின் செயல்பாட்டு எல்லைகளை சுருக்கி, அப்பகுதியின் வான் மற்றும் கடல் கண்காணிப்பை பலப்படுத்தி காஸாவை ஒரு மாபெரும் சிறைச்சாலையாக மாற்றியிருந்தது. குச்சு மிட்டாய்க்காக குதூகலிக்கும் குழந்தையின் நிலைதான் அவ்வப்போது போராட்ட இயக்கங்களுக்கும் வாய்க்கப்பெறுகிறது.
எல்லாவற்றையும் விட 2004ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் யாசிர் அரபாத் மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தையும் அதே ஆண்டு ஜூலை மாதம் பலஸ்தீன ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள எண்ணம் கொண்டது ஹமாஸ். பத்தாஹ் கட்சிக்கும் பலஸ்தீன ஆட்சி மன்றத்திற்கும் முழுமையான ஒத்துழைப்புத் தரும் வகையில் புதிய பிரதமர் அஹமது குர்ரே உள்ளிட்ட தலைவர்களுடன் ஹமாஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தைகளில் ஓஸ்லோ ஒப்பந்தம் நிராகரிக்கப்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் பலஸ்தீன அரசியல் நிகழ்ச்சி நிரலில் தன்னை லாவகமாக புகுத்திக் கொண்டது. ஹமாஸின் இந்த அரசியல் பிரவேசத்தை பத்தாஹ் கட்சியினர் விரும்பவில்லை. இருப்பினும் 2005ல் பல கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளைப் பெற்றது ஹமாஸ். பலஸ்தீன ஆட்சிமன்றத்தைக் கவிழ்ப்பதற்காக ஹமாஸ் தேர்தல் களத்தில் நிற்பதாக பத்தாஹ் குற்றம்சாட்டியது. ஊழல் அமைப்பை சீர்செய்யவும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்க தேசிய ஒத்திசைவு ஒன்றை உருவாக்கவும் தாங்கள் களத்தில் நிற்பதாக தெளிவுபடுத்திய ஹமாஸ், அதே ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது. அதில் பத்தாஹ் கட்சியின் வேட்பாளர் மஹ்மூது அப்பாஸ் வெற்றிபெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்சிமன்றத்தில் ஹமாஸ்
பலஸ்தீன அரசியல் கட்சிகளுக்கு இடையேயான குடுமிப்பிடி சண்டைகளைக் களைந்து ஜனநாயக தேர்தல் பாதையில் அனைவரையும் பங்கேற்கச் செய்யவும் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு பல்வேறு குழுக்களிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தவும் அதிபர் அப்பாஸ் முயற்சியில் 13 அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் கெய்ரோவில் கூடி உடன்பாட்டுக்கு வந்தனர்.(‘Cairo Declaration – 17th March 2005). இதன் விளைவாக ஹமாஸ் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஹமாஸ் அரசியல் அதிகாரம் பெறுவதில் இஸ்ரேலுக்கு பதட்டம் இருந்ததால் தேர்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இத்தனைக்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினை வலுவிழக்கச் செய்ய இஸ்ரேல் 1970 – 80களில் ஹமாஸின் ஆரம்ப கட்ட முயற்சிகளை ஊக்குவித்து வந்தது. ஹமாஸை உருவாக்கியதில் இஸ்ரேலுக்கு அதிக பங்குண்டு என்பதை சமய விவகாரங்கள் துறையில் அதிகாரியாக இருந்த அவ்னர் கொஹன் தெரிவித்துள்ளார். எனினும் இன்றைக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துவிட்ட ஹமாஸ் அதிகாரத்திற்கும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான் என்பதை விளங்கிய இஸ்ரேலின் நட்பு நாடுகளும் ஹமாஸ் ஜனநாயக பாதைக்குத் திரும்புவதில் பல்வேறு ஐயங்களை எழுப்பின. ஊழல், குறுங்குழு ஆட்சி போன்றவற்றால் கந்தலாகிக்கிடந்த பத்தாஹ் ஆட்சியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்த அமெரிக்கா 20 லட்சம் டாலர்களைக் கொட்டிக் கொடுத்தது. காஸாவாசிகளின் அமோக ஆதரவோடு ஹமாஸ் எளிதில் வெற்றி பெறுவதைத் தடுக்க இஸ்ரேல் ஜெருசலேமில் வசிக்கும் ஒரு லட்சம் பலஸ்தீனர்களையும் ஓட்டுப் போட அனுமதித்தது. எல்லாவற்றையும் மீறி 25 ஜனவரி 2006ல் நடந்த தேர்தலில் ஹமாஸ் அடைந்த மகத்தான வெற்றி எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. மொத்தமுள்ள 132 இடங்களில் 74 இடங்களை வென்று தனி பெரும்பான்மை பெற்றது ஹமாஸ்.
இந்த வெற்றி ஹமாஸே எதிர்பாராத ஒன்று என்பதால், தனித்தே ஆட்சியமைக்கும் பலம்பெற்றிருந்த போதும் பிற கட்சிகளுடன் சேர்ந்து, தனது எதிர்ப்பு நிலை திட்டத்தோடு சிறந்த ஆளுகையையும் இணைக்கும் ஒரு கூட்டாட்சியை நடத்த விரும்பியது ஹமாஸ். இதன் வாயிலாக இஸ்ரேலிய அரசின் நெருக்கடிகளோடு மேற்கத்திய மற்றும் அரபு நாடுகளின் சவால்களையும் சமாளிக்க முடியும் என கணக்குப்போட்டது ஹமாஸ். இதற்காக தமது எதிர்ப்பு நிலை கொள்கையை மேம்படுத்தி ஒரு “தேசிய திட்டத்தை”யம் முன்வைத்த காலித் மிஷால், இதனை ஒரு ஐக்கிய அரசும் சீரமைக்கப்பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கமும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். ஹமாஸ். மீது பத்தாஹ் உள்ளிட்ட இயக்கங்களுக்கு இயல்பாகவே இருந்த ஒவ்வாமை ஒட்டுமொத்த தேசநலனை பின்னுக்குத் தள்ளியது. பலஸ்தீன பாதுகாப்புப் படை, ஆட்சிமன்றம், விடுதலை இயக்கம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஹமாஸின் உள்நோக்கத்தையும் பத்தாஹ் ரசிக்கவில்லை. எனவே கூட்டாட்சி யோசனை ஆரம்பம் முதலே இழுபறியாகிப்போனது. வேறு வழியன்றி 26 மார்ச் 2006 ஆம் நான் இஸ்மாயில் ஹனியா தலைமையில் ஹமாஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.