அமெரிக்காவின் தற்போதைய கருப்பினர் வெள்ளையினர் பிரிவினைக்குச் சற்றும் சளைக்காத வகையில் இந்தியாவின் நகரங்களில் சாதி, மத, இன அடிப்படையிலான பிரிவினைகள் இருப்பதாக சர்வதேச கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கை, ‘குடியிருப்புப் பிரிப்பு, உள்ளூர் பொதுச் சேவைகளுக்கான சமமற்ற அணுகல்: 1.5 மில்லியன் சுற்றுப்புறங்களின் சான்றுகள்’ (Residential Segregation and Unequal Access to Local Public Services in India: Evidence from 1.5m Neighborhoods) முஸ்லிம்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் (SC) வசிக்கும் சுற்றுப்புறங்களில் அரசின் பொதுச் சேவைகள் மிகவும் குறைவாகவே வழங்கப்படுவதைக் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பொருளாதார பேராசிரியர் பால் நோவோசாட், அதன் முடிவுகளைப் பகிர்ந்து. இந்த ஆய்விற்காக 5 ஆண்டுகள் உழைத்ததாக ட்வீட் செய்துள்ளார்.
நோவோசாட் “பட்டியல் சாதியினருக்கு அநீதியிழைக்கும் வகையில் கிராமப்புறங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளனவோ அதேபோலத் தான் நகர்ப்புறங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேல் நகரங்களில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.” என்று கூறுகிறார்.
இந்த ஆய்வு, இந்தியாவின் பல்வேறு கிராமங்கள், நகரங்களின் பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும்1.5 மில்லியன் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இம்மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசு கூடுதல் சேவைகளை வழங்குவதாகச் சொல்லும் நிலையில், மாவட்ட அளவில் முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும் அச்சேவைகளை பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதையும் அவற்றை அணுகும் வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளது.
ஆய்வின் படி, 26% முஸ்லிம்கள் 80% க்கும் அதிகமான முஸ்லிம்களின் அடர்த்தியுள்ள சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்; 17% எஸ்சிகள் 80% க்கும் அதிகமான எஸ்சிகளின் அடர்த்தியுள்ள சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். அப்பகுதிகளானது, எவ்வாறு கிராமப் பகுதிகளில் சாதியின் அடிப்படையில் தெருக்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றதோ அதற்கும் சற்றும் சளைத்தவையல்ல. மேலும் இதுபோன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நிலை பிறப்படுதப்பட்டவர்களை விட மோசமானதாக உள்ளது.
இந்த ஆய்வு, இவ்வாறான நகரப் பிரிப்பு கடந்த பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்துள்ளது; மேலும் பல தசாப்தங்கள் தொடரவும் வாய்ப்புள்ளது என்றும். நகரப்புறங்களில் வாழும் முஸ்லிம், எஸ்சிக்களின் குழந்தைகளை ஆய்வு செய்ததில் அவர்களின் நிலை அதே நகரத்தில் வாழும் விளிம்பு நிலையில் அல்லாத குழந்தைகளை விட பின்தங்கியதாகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறது.
தீண்டாமை வெறும் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருந்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுபோன்ற இந்தியாவின் சாதி மதப் பாகுபாடுகள் எப்போது ஒழிக்கப்படும் என்பதே சமூக அக்கறையுள்ள அனைவரின் கேள்வியாக உள்ளது.
ஆய்வினை வாசிக்க – https://www.devdatalab.org/segregation