பெண் என்றால் இரங்க இவர்கள் பேய்களா…?
குற்றச் செயல்களால் விளையும் அநேக மரணங்கள் நம்மை உலுக்கிப் போடும். குற்றங்களைத் தடுக்கும் – தண்டிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்புகளே அத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கும்போது நாம் பெரும் பீதிக்குள்ளாகிறோம். அதே அதிகாரம் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வகுப்புவெறியில் ஊறித் திளைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமன்றி குறிப்பிட்ட சமூகத்துக்கே எதிராகவும், குற்றவாளிகளுக்கு அரணாகவும் நிற்கும்போது, அந்த கொடூர மரணங்கள் நம்மை நடுநடுங்க வைத்து சர்வநாடியையும் ஒடுக்கிவிடும். அந்த வகையில்தான் ஒரு 21 வயது இஸ்லாமியப் பெண்ணின் மரணம் நம் முதுகுத் தண்டுகளை உறைய வைத்துள்ளது. காவல் துறையில் பணியாற்றுபவர் இந்த பெண். ஒருநாள் பணிக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. குதறி எடுக்கப்பட்ட அவளது உடல் ஆள் அரவமற்ற வனாந்திர பகுதியில் கண்டெடுக்கப்படுகிறது. தனக்கு நடந்த கொடூரத்தைத் தடுக்க முயன்ற அந்த பெண்ணின் கைகள் கத்தியால் குத்தப்பட்டு, பெருமளவு சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இரு மார்பகங்களும் அறுத்தெறியப்பட்டுள்ளன. வாயில் கத்தி இறக்கப்பட்டு தொண்டைக் குழி கிழிக்கப் பட்டிருக்கிறது. ஒரு கசாப்புக் கடைக்காரன் கூட செய்யத் துணியாத அளவுக்கு கழுத்து முற்றிலுமாக அறுக்கப்பட்டு சிறிய பகுதி மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. உடலெங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளது. பிறப்புறுப்பு குரூரமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஓநாய் கூட்டம் மானின் மீது விழுந்த பிறகு இரத்தத்தையும் சதைத் துண்டங்களையும் தவிர்த்து வேறு எதுதான் மிஞ்சும்? அந்த எச்சத்தை மட்டும் பொறுக்கி பொட்டலம் கட்டி கொடுத்த காவல்துறை, இந்த பெண் யாராலும் சூறையாடப்படவில்லை என்ற பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் ஆறுதலாக தந்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது. இப்படியொரு கோரம் எங்கே நடந்தது? கேள்விப்படவே இல்லையே… எங்காவது உகான்டாவில் நடந்ததை – ரோஹிங்கிய முஸ்லிம் பெண்ணுக்கு நடந்ததையா இங்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆயாசப் படாதீர்கள். சம்பவம் உலகத்திலேயே மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெண்ணின் உடலை வேட்டைக்காடாக மாற்றி இந்த வன்மத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். சரி.. அதனாலென்ன? நாடெங்கும் இது மாதிரி சிறிய சம்பவங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது. அதையே பேசிக் கொண்டிருப்பீர்களா என்ற அதட்டலான குரல் ஒலிக்கிறதா? இதே குரல்தான் அந்த அழகுப் பெண்ணின் சிதைக்கப்பட்ட சதைப் பிண்டத்தைப் பார்த்து அலறிக் கொண்டு ஓடிய அந்த அப்பாவி பெற்றோருக்கும் கேட்டது. பாவம் புதிய இந்தியாவில் வளர்ச்சியை மட்டுமே பார்க்கத் தெரியாத தேச விரோதிகளாகிய அவர்கள் தங்கள் புகாரையும் நியாயத்தையும் கேட்பதற்கு ஆள்தேடி இரவும் பகலுமாக புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
தேசத்தின் கவனத்தை – ஊடகங்களின் தர்மத்தைக் கிளறி விட இதில் பெரிதாக ஒன்றுமில்லை என்று எல்லோரும் விலகிப் போனார்கள். நிறுவனமயமாகிவிட்ட வெகுசனத்தின் மனச்சான்றை உலுக்கியெடுக்கும் சின்னமாக ஆகும் அளவிற்கு சபியா என்கிற இந்த அபலை தகுதிபெறவில்லை. தகுதிபெறுவதற்கான சமிக்ஞைகள் எந்த அதிகார பீடங்களிலிருந்தும்
வரவில்லை. அப்படி வராதபோது தன்னிச்சையாக மக்களை வெகுண்டெழச் செய்ய அன்னா ஹசாரேக்களும் அவர்களிடம் இல்லை. “போதும் என்பது இத்தோடு போதும்” (Enough is Enough) என்று அறம் பேசி அணிதிரளவும் யாரும் தயாரில்லை. அந்த பெருநகரத்தில் இந்தியா கேட் இருக்கிறது. ஆனால் அதன் வாசலில் நீதி கேட்கும் யாசகனாக கூட நிற்பதற்கு அந்த அபலையின் உற்றாருக்கு அருகதையில்லை. மனுநீதி தோழர்களின் ஆராய்ச்சி மணியை அசைத்துப் பார்ப்பதற்கு சபியா ஒரு புனிதப் பசுவாகவும் இம்மண்ணில் அவதரிக்கவில்லை. “என் சகோதரியைப் பற்றி – அவளுக்கு நடந்த பாலியல் குரூரத்தை நானே என் வாயால் சொல்ல வேண்டியிருக்கிறதே” என்று அரற்ற மட்டுமே அவள் சகோதரனுக்கு வாய்த்திருக்கிறது. அவனது ஓலத்தைப் படம்பிடித்து “The Nation wants to know” என்று நரம்பு புடைக்க உச்சஸ்தாயியில் கத்தித் தீர்த்து, கோட்டை மதில் சுவர்களைக் கிடுகிடுக்கச் செய்யும் ஆற்றல் படைத்த அர்னாபுகளும் பான்டேக்களும் அவர்களிடம் இல்லை. அவளது படத்தை எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்திகளை ஏந்தி அறப்போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு நேரம் வாய்க்கவில்லை.
இவையெல்லாம் போகட்டும். எந்தவொரு நகரில் நடைபெறும் கொலை – கொள்ளை – கும்பல் வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களின் முதல் தகவல்களை நன்கறிந்தவர்களும் பிறருக்கு அறியத் தருகிறவர்களும் காவல் மற்றும் ஊடகத் துறையினரே. ஒரு நாளில் நடைபெறும் குற்றங்களை, உடனுக்குடன் தொலைகாட்சி அலைவரிசைகளிலும் மறுநாள் காலை தினசரிகளிலும் இடம்பெறச் செய்ய பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்துக்கே படையெடுக்கிறார்கள். காவல்துறையினரும் ஊடகங்களின் மூலமாகவே தங்களின் செயல்திறன்களை மக்கள் முன் கொண்டு செல்கிறார்கள். ஆதலால் குற்றச் செயல்களை வெளிப்படுத்துவதில் ஊடகத்தைக் காட்டிலும் கூடுதலான சுயத் தேவையும் செயல்பாட்டு நிரூபணமும் காவல்துறைக்கே அதிகம் இருக்கிறது. அதுவும் கொடுமைக்குள்ளானவர் காவல்துறையில் பணிபுரிபவராக இருக்கும் பட்சத்தில் காவல்துறையின் அறச் சீற்றம் உக்கிரமாகவே இருக்கும். ஆனால் சபியா சம்பவத்தில் காவல்துறை தங்கள் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டது மட்டுமன்றி ஊடகத்தையும் ஒட்டுமொத்தமாக ஊமையாக்கிவிட்டது. பொது அமைப்புகளில் சாதி – மத பாகுபாடுகள் புகுத்தப்பட்டு விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு சபியா விவகாரம் ஒரு மோசமான உதாரணம். அதைக் காட்டிலும் ஒரு பெருங்கொடுமையான வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகும் பெருஞ்சமூகம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அனைத்தும் இயல்பாகவே இருப்பதைப் போல் கடந்துபோவதை நாம் நடுக்கத்தோடு பார்க்கிறோம். இதே தலைகீழாக ஒரு நான்கைந்து தடியன்கள் ஒரு இந்து பெண்ணை அலங்கோலமாக்கித் தூக்கி வீசியெறிந்திருந்தால் இப்படித்தான் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று நீண்ட நெடிய மௌனம் அனுஷ்டிக்கப்படுமா? அதில் சம்பந்தப்பட்டவன் முஸ்லிம் என்ற சந்தேகம் லேசாக தலைதூக்கினால் போதாதா? குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன்னால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இந்நேரம் மண்டியிட்டு கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு சரணாகதி அடைய நிர்பந்தப்பட்டிருக்கும். இந்த அடாவடி அராஜக அறம் குறித்து ஒரு சிலரைத்தவிர வேறு எவருக்கும் எந்த கவலையும் இங்கே இல்லை. ஒரு சிறுபான்மைச்சமூகம் தான் கொடூரமாக பழி தீர்க்கப்படும் தருவாயிலும் தனிமைப்படுத்தப்படுவது பெரும்பான்மைவாத எழுச்சியின் அப்பட்டமான அடையாளமாகும்.
இந்த வழக்கில் அடுக்கடுக்காக வந்து மோதும் பேயுருக்கள் (Nightmares) இந்த அடையாளங்களை நம்மீது உக்கிரமாக செலுத்தி நம்மை திக்குமுக்காட வைத்து மனக்கிலேசம் அடையச் செய்கின்றன. //நமது செயல்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் நமக்குப் புலப்படுவதில்லை. அல்லது அதற்கு நாம் கூறிக்கொள்ளும் காரணங்கள் பல நேரம் நிஜமானவை அல்ல/ என்பது ஃபிராய்டின் மையக் கோட்பாடு. மனிதர்கள் தம் நடத்தையினைத் தங்களுக்குள்ளாகவோ அல்லது பிறத்தியாரிடமோ விளக்க முற்படும் போதெல்லாம், தமது செயல் நோக்கம் குறித்த உண்மையை ஒரு போதும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை என்கிறார் சிக்மண்ட் பிராய்ட். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைப் பொறுத்த மட்டிலும் இந்த கோட்பாடு 100% ஒத்துப் போகிறது. இந்த குற்றங்களின் குறிநோக்கம் பெரும்பாலும் மூடுபனியாகவே இருக்கிறது. அதிலும் சபியா விவகாரத்தில் உண்மை, சிந்துபாத்தின் சாகசங்கள் தேவைப்படுமளவுக்கு ஏழு கடல் தாண்டி புதைக்கப்பட்டுவிட்டது. உறவுகள் – நட்புகள் என்று ஒருவரும் அறியாத ஒரு கலாபக் காதலன், ரகசிய கணவன் சபியாவை கந்தர்வ மணம் புரிந்து, அவளது நடத்தையை சந்தேகப்பட்டு, தனியாளாக (ஒற்றைக் கை மாயாவியைப் போல்) அவளைக் கூறு போட்டு விட்டதாக காவல்துறை கதை படிக்கிறது. பிரேதத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஒன்றுபோல இது ஒருவன் செய்திருக்கக்கூடிய காரியமல்ல என்று சொல்கிறார்கள். அப்படியே போலீஸ் சொல்லும் கதையாடலை உண்மையென கொண்டாலும் குற்றவாளி சரணடைந்தவுடன் அவனை பற்றிய விவரங்கள் ஏன் பத்திரிகைகளுக்குத் தரப்படவில்லை. இன்றுவரை அவன் சபியாவைத் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ்கள் ஏதும் ஏன் அளிக்கப்படவில்லை. அதிலும் திருமணம் நீதிமன்றத்தில் நடந்ததாக சொல்லப்படும் போது குறைந்த பட்சம் இந்த திருமணத்திற்கு இரண்டு சாட்சிகளாவது இருந்திருப்பார்கள் அல்லவா? அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
அதைவிட கொடுமை என்னவென்றால் மறுநாள் காலை வந்து சரணடைந்ததாக சொல்லப்படும் முஹம்மது நிஜாமுதீன், ”தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஒரு ஆவேசத்தில் கத்தியால் சதக், சதக்கென்று குத்தி, புதரில் தூக்கியெறிந்துவிட்டு வந்துவிட்ட”தாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.பி.மீனா சொல்கிறார். ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் கொலை செய்பவன் ஆறஅமர ஐம்பது இடத்தில் கத்தியால் குத்தி பிணந்தின்னிக் கழுகு மாதிரி குதறிக் கொண்டிருப்பானா? அல்லது நிதானமாக அவளது மார்பகங்களை அறுத்தெறிவானா? பிறப்புறுப்பை சிதைத்து சின்னாபின்னமாக்குவானா என்றெல்லாம் யாரும் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது. மறுநாள் காலையில் வந்து சரணடைந்தவனை எட்டு நாட்கள் பொத்திப் பாதுகாத்து சாவகாசமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது போலீஸ். இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளி சிக்கினான் என்றால் போலீஸ் எப்படி கவனிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கே காவல் பணியிலிருந்த ஒரு பெண்ணை சீரழித்தவனைக்கூட கண்ணும் கருத்துமாக கவனித்து பொறுப்பாக பேணிக்காத்து இருக்கிறது போலீஸ்.
இன்னும் சபியா காணாமல் போன அன்று இரவு குடும்பத்தினர் அவர் பணியாற்றிய மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் தேடிச் சென்றபோது, அவர்களில் ஒருவரையும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர் உள்ளே அனுமதிக்கவில்லை. வருகை பதிவேட்டையும் காண்பிக்க மறுத்துள்ளார். இரவு 10.00 மணியளவில் உடன் பணியாற்றுபவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, “அவர் ஒரு வழக்கு விசாரணைக்காக உயரதிகாரியோடு போயிருக்கிறார்.
விரைவில் வீடு திரும்பிவிடுவார். கவலைப்பட ஒன்றுமில்லை” என்றே சொல்லியிருக்கிறார். சபியா குடும்பத்தினரால் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் அன்றிலிருந்து தலைமறைவாக இருக்கிறார்கள். சபியா பணியாற்றிய மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து ஒருவர்கூட ஆறுதல் சொல்லவோ விசாரிக்கவோ சபியாவின் வீட்டிற்கு வரவில்லை. இந்த அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து தங்கள் மகள் நிறைய செய்திகளை சொல்லியிருப்பதாக சபியாவின் தந்தை ஷமீர் அஹமது குறிப்பிடுகிறார். இதையெல்லாம் முன்வைத்த தங்கள் தரப்பு விவரங்களை பதிவேற்றக் கூட காவல்துறை தயாராக இல்லாத நிலையில் காவல் நிலையத்திற்கு முன்பாக சபியா குடும்பத்தினர் ஒரு வார காலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் குரல் யார் காதிலும் விழவில்லை.
இதைவிட கூடுதல் சிறப்பாக இந்த விசயத்தில் ஊடகங்கள் ஏன் அக்கறை காட்டவில்லை என்ற கேள்விக்கு, “அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படவில்லை. எனவே அதில் பேசப்படுவதற்கு ஏதுமில்லை” என்று கையை விரித்துள்ளன. ஒருவேளை சபியா கூட்டாக வன்புணரப்படவில்லை என்பது உண்மையாகவே இருந்தாலும் ஒரு கொடூரக் கொலை சாதாரணமாக கடந்துவிடுமா? சாமான்ய பெண்ணாக இருந்தால் யாராக இருந்தாலும் அவளைக் கொலை செய்து வீசிவிட்டுப் போய்விட்டால் ஊடகமும் கண்டுகொள்ளாமல் போய்விடுமா? அப்புறம் ஏன் எங்கோ கழுத்தை வெட்டுவதை மீண்டும் மீண்டும் காட்டி “அய்யகோ.. அடிப்படைவாத அராஜகம் பாரீர்” என்று பொழுதன்னிக்கும் அரற்றுகிறார்கள். முந்தைய நாள் வரை ஆப்கனில் தாலிபான்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டார்கள்.. அங்கிருக்கும் பெண்கள் கதி அதோ கதிதான் என்று மிகை நேரமாக கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த காட்சி ஊடகங்கள், தங்கள் மூக்குக்கு கீழ் நடந்த கோரக் கொலையைக் கேள்விப்பட்டவுடன் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார்கள். இதே கொலையுண்டது ஒரு தலித் பெண்ணாகவோ, முஸ்லிம் பெண்ணாகவோ இல்லாதிருந்தாலும் ஊடகமும் பொது புத்தியும் இப்படித்தான் நடந்து கொள்ளுமா? பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட வில்லையென்றால் கொலை கூட சாதரணமாகி விடுமா? அப்படியென்றால் ஆண்கள் கொல்லப்படும் சம்பவங்களுக்கு செய்தி கனமே இருக்காதா? என்ன பேசுகிறார்கள் இவா்கள்? உண்மையில் இங்கே ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டுவதற்கான காலாட்படைக் கருவியாக – வரன்முறையற்ற வன்முறை வேட்டைக்காடாக – பெண்ணுடலைப் பயன்படுத்திக் கொள்ள இலவச அனுமதி வழங்கப்படும் தினவெடுத்த தடித்தனத்திற்கு, வெகுசன ஊடகமும் பக்கபலமாகவே தொழில்படுகிறது. சிறிது காலத்திற்கு முன்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி “இந்திய அரசு முஸ்லிம்களையும் இதர சிறுபான்மையினரையும் வன்முறை தாக்குதல்களை விட்டு காப்பாற்றத் தவறியதோடு மட்டுமன்றி, அதற்கான அரசியல் ஆதரவையும் வகுப்பு வன்மத்திற்கான மேலுறைகளையும் தாராளமாக வழங்குகிறது” என்று சொல்லியிருப்பதை இவ்விடத்தில் ஊடகத்திற்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். அதனால் தான் ஒரு ஊடக விவாதம் என்ற அளவிற்குக் கூட உப்புப் பெறாத விசயங்களாக முஸ்லிம்கள், தலித்கள் மீதான தாக்குதல்கள் இயல்பான சமாச்சாரங்களாகிவிட்டன.
இதே சபியாவைப் போல் குடிமை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பிரவேஷ் குமார் என்ற அலுவலர் லாரி ஏறி மரணமடைந்த போது ஒரு கோடி நிவாரணமளித்த கெஜ்ரிவால், “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறை பெண்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது” என்று குற்றஞ்சாட்டி தன் கடமையை முடித்துக் கொள்கிறார். மிக சமீபமாக இதே
முதலமைச்சர், உலகத்தரத்தில் இருப்பதாக பெருமை பாராட்டிக் கொண்ட டெல்லி நகரத்து கண்காணிப்பு கேமரா வசதிகள், காவல் பணியாளர் ஒருவரே கடத்திச் செல்லப்பட்டு குரூரமாக குதறி எடுக்கப்பட்டதை கண்சிமிட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஆறுதலளிக்கும் ஒரே விஷயம்… டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து சபியா வழக்கை எடுத்துக் கொண்டு பரீதாபாத் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கே இப்படி குறிவைத்து பலிகொள்ளப்படும் இலக்குகளில் (Targeted Victims) சமுதாயத்திற்கு விடப்படும் பாரிய எச்சரிக்கைகள் உள்ளன. கண்ணும் கருத்தும் இருப்பவர் நோக்கக் கடவர். தங்களுக்காக பரிந்து பேசுவோர் எவருமில்லை என்ற நிலையில் தங்களுடைய இருத்தலை மென்மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாமலிருக்க வலிந்து விட்டுக்கொடுத்துப் போகின்றன ஒடுக்கப்பட்ட சமூகங்கள். ஒருவிதத்தில் தங்களை இரண்டாம் தரக்குடிமக்களாக உணரும் உளவியலின் வெளிப்பாடுதான் இது. சிவில் சமூகத்தில் மூன்றில் ஒரு பங்காவது இத்தகைய அநீதிகளை – அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை என்றால் இங்கே இவை மாறுவதற்கான சாத்தியங்களே இல்லை. எந்த அராஜகமும் நிலைத்ததாக சரித்திரம் இல்லை என்கிறார்கள். ஆனால் அப்படி சரிந்த சரித்திரத்தை மக்கள் தான் எழுதினார்கள் என்பதை வசதியாக மறந்து போகிறார்கள். கசாப்பு கடைக்காரனின் கத்தி ஆடு, மாடு, ஒட்டகம் என எதன் மீதும் இரக்கம் காட்டுவதில்லை. இறக்கம் மட்டும்தான் அதன் நோக்கம். தன்னிடம் இருக்கும் ஆயுதங்களை எப்படி கையாள்வது என்பது மட்டுமே அவனது குறி. ஆடாக இருந்தால் கிடத்தி வெட்டுவது.. மாடாக இருந்தால் தள்ளி வெட்டுவது.. ஒட்டகமாக இருந்தால் நிற்க வைத்து குத்துவது என்பது தான் உத்தி. முஸ்லிம்கள் மட்டுமல்ல அவர்களுக்கு உறுதுணையாக நிற்பவர்களும் இப்படியாகத்தான் வீழ்த்தப்படுகிறார்கள். கபீல்கான், சஞ்சீவ் பட் என நபர்களுக்கு தக்கவாறு உத்திகள் தான் மாறுபடுகின்றன.
இதே டெல்லியில் 2012 ஆம் ஆண்டு கும்பல் வன்புணர்வு செய்யப்பட்ட நிர்பயா என்ற பெண் தேசத்தின் மனச்சான்றை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுக்கிறாள்-. அரசு நிர்பயா கொள்கைத் திட்டத்தை வடிவமைத்து பெண்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களை கௌரவமாக நடத்துவதற்கும் நிர்பயா நிதியத்தை எல்லாம் உருவாக்கியது. அதெல்லாம் ஒரு காலம்… கொஞ்சம் போல் மனசாட்சியும் ஈரஉணர்வும் கொண்ட ஆட்சியும் இருந்த காலம். அதற்கு பிறகு பெண்களின் நிலை மாறும் என்று நம்பி இருந்த நாட்டில், நிர்பயா சம்பவம் நடந்து முடிந்த ஒன்பது மாதங்களில் முஸப்பர் நகரில் நடந்த கும்பல் வன்புணர்வுகள் மீது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் முடிவு எட்டியபாடில்லை. இதே போல் உன்னாவில் வன்புணர்வுக்கு ஆட்பட்ட தலித் பெண்ணின் தந்தை போலீஸ் கொட்டடியில் இறந்து போகிறார். சொல்லொணா துயரத்தை அந்த குடும்பத்தினர் தொடர்ந்து அனுபவித்தனர். இதன்பிறகு சிறிது காலத்தில் எட்டு வயது ஆசிபாவை கோவிலில் வைத்தே மனித மிருகங்கள் சுழற்சி முறையில் கொடூரமாக குதறி எடுக்கின்றன. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களை நாமெல்லாம் கண்குளிர கண்டு ரசித்தோம். ஒரு ஐந்து வருடங்களுக்குள் எத்துணை வளர்சிதை மாற்றம்? நிர்பயாவுக்காக கொதித்தெழுந்த தேசம், நிர்பயாக்களை சிதைப்பவர்களுக்காக கொதித்தெழுபவர்களைக் கண்டு மருகி நின்றது.
ஏன் இப்படி? இங்கே நியாயத்தோடு நடந்து கொள்வது என்பதைவிட நியாய உணர்வு உள்ளதாக சித்தரித்துக் கொள்வதே பழுதில்லாத நடைமுறை. காது குடைய உபயோகப்படுத்தும் பஞ்சைப்போல தேசபக்தி, பெண்ணுரிமை, பகுத்தறிவு, வளர்ச்சி, நீதி, நியாயம் எல்லாமே
மிருதுவாக இருக்க வேண்டியது நம் வசதியின் பாற்பட்டது.. முற்றிலும் நியாயம் செத்துப் போன ஒரு சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள அவ்வப்போது எட்டுப் போட்டு கொண்டே இருக்கிறோம். வண்டி ஓட்டியாகணுமில்லையா? நெட்டை மரங்களாக நின்று புலம்பும் நாம் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்று தேற்றிக் கொள்வதற்கு அடையாளமாக சில முன்னெடுப்புகள் தேவை. அத்தகைய முன்னெடுப்புகளாக கபீல்கான், உமர் காலித், ஐஐடி மாணவி பாத்திமா, கர்ப்பிணி சபூரா போன்றோர்கள் எப்போதும் இருப்பதில்லை. இதில் ஆண் – பெண் வித்தியாசமெல்லாம் இல்லை. அச்சுறுத்தி பணியவைக்க வேண்டும் என்று கட்டம் கட்டப்படும் சமூகம் இந்த வன்முறைகளுக்கு இரையாகியே தீரவேண்டும். இதில் கஃபீல்கான், சபியா போன்ற அரசு பணியாளர்களும் ஒரு சஞ்சீவ் பட்டைப் போல், ஆனந்த் தெல்டும்டே போல் நமது இயலாமையின் குறியீடாக மட்டுமே இருப்பார்கள்.
அரசு ஊழியரான கஃபீல்கானை எடுத்துக் கொள்ளுங்கள். ஏழை குழந்தைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத்திணறி சாவதைக் கண்டு நெஞ்சம் பதறி கைக்காசைப் போட்டு குழந்தைகளுக்கு மூச்சுக்காற்று செலுத்திக் காப்பாற்ற முயற்சித்த ஒரு மானுட மருத்துவன் கஃபீல்கான். அவனைக் காலச் சிறைக்கு அனுப்பிக் கைகொட்டி சிரித்தது இந்துத்துவ அரசு. அதே பிறிதொரு மூச்சுத் திணறல் வைரஸ் படைகொண்டு முற்றுகையிட்டு விட்ட தருணத்தில், டாக்டர்களைப் பாராட்டி கைதட்டி ஆரவாரிக்கிறது. வான்வழியே மலர் சொரிந்து ஆசிர்வதிக்கிறது. கேப்பையில் நெய் வடிகிறது. கேனையன்கள் கைதட்டிக் காத்திருக்கிற கதைதான்.
இதையெல்லாம் விட சொல்லொணா பெருந்துயரம் என்னவென்றால், முஸ்லிம் சமூகம் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு ஊடகம், நீதி, நிர்வாகம் என்று சர்வ துறையிலும் கோலோச்ச வேண்டும் என்று குரல் கொடுக்கும் சமுதாய கல்வி காவலர்கள் ஒருத்தரும், அப்படி கல்வி, வேலைவாய்ப்பு தளங்களில் அரும்பாடுபட்டு நுழைந்து சாலையோர சருகுகளாக வீசியெறியப்படும் பாத்திமா லத்தீப், சபியா ஆகியோரைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. பரிதாபத்திற்குரிய இந்த சமூகத்தின் உள்ளும் புறமுமாக ஊடாடும் இந்த நுண்ணரசியலில் தான் சிறுபான்மையினரின் இருத்தல் விரக்தி நிலையை நோக்கித் தள்ளப்படுகிறது..
சாமான்ய முஸ்லிம்களும் “இது என்ன? மாட்டை மேய்ச்சோமா.. கோலைப் போட்டோமா” விவகாரம் தானே என்று நம்பி நாசமாகப் போகிறார்கள்.
– கோட்டை கலீம் – எழுத்தாளர்