ஒரு இயக்கமோ, அமைப்போ அல்லது அரசியல் கட்சியிலோ ஒரே நபர் நீண்ட நாட்களாக தலைவராக இருந்தால் அவர் சர்வாதிகாரியாகத்தான் இருப்பார், அதனால் அவர் தலைமையின் கீழ் இயங்கும் அமைப்போ கட்சியோ ஒரு கட்டத்தில் அழிந்து விடும் என்கிற கருத்துதான் பொதுவான கருத்தாக நிலவிவருகிறது. சில நேரங்களில் அதை ஊர்ஜீதப்படுத்தும் விதத்தில் நேரடியாக நடைமுறையில் காணும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஒருவர் வாழ்ந்து வருகிறார், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த கட்சி,பெரியாரின் கொள்கைகளுக்கு அரசியல் வடிவம் கொடுத்து அதை மக்களிடம் கொண்டு சென்ற கட்சி, அக்கட்சிக்கு 1969 ஆம் ஆண்டு ஜீலை 27 ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்கிறார். அன்று முதல் கட்சியையும் தமிழ் நாட்டையும் தன் இரு கண்களாக பாவித்து வழிநடத்தினார். விளைவாக 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதன்மையாக்கியதில் முக்கிய பங்காற்றினார். அவர் தான் கலைஞர் என்று அழைக்கப்படும் மு.கருணாநிதி.
தி.மு.க வின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எண்ணற்ற இன்னல்களை அவர் சந்திக்க நேர்ந்தது. கட்சிக்கு வெளியே மட்டும் அல்ல, கட்சிக்குள்ளேயும் கூட. அதனால் அறிஞர் அண்ணா கண்டெடுத்த அவ்வியக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டது. அந்த பிளவின் காரணமாக கருணாநிதி கொடுத்த விலை மிக அதிகம். 13 ஆண்டு காலம் தனது பதவியையே இழக்க நேரிட்டது. இருந்தபோதும் மனம் தளராது தன் கட்சியின் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. ஒரு கட்சி தலைவராக தன் கட்சியின் நலனில் மட்டும் அக்கறைக் காட்டாமல் தமிழ் நாட்டின் நலனுக்கு அதிக அக்கறை செலுத்தினார்.
இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்த போது தன் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் உறுதியோடு நின்று தன் கட்சியை தனி ஆளாக நின்று சிறப்பாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் அவசர நிலையையும் கடுமையாக எதிர்த்தார். அதே காலகட்டத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்கிற தகவல் பரவியதையடுத்து அண்ணா தி.மு.க வை அனைத்திந்திய அண்ணா தி.மு.கவாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால் கருணாநிதியோ எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என உறுதியோடு நின்றார். அவையெல்லாம் தன் தலைவன் நமக்காக இருக்கிறார் என அக்கட்சியின் தொண்டர்களை நம்ப வைத்தது.
தனக்கே உரிய பாணியில் அவர் மேடையில் பேசிய பேச்சுக்கள் தான் அக்கட்சியின் தொண்டர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் கட்டிப்போட்டது.
ஒரு தலைவர் அக்கட்சியின் அடிமட்ட தொண்டரோடு தொடர்பில் இருக்க வேண்டும், அது தான் ஒரு சிறந்த தலைவருக்கான தகுதி. அதை திறம்பட செய்தவர் கருணாநிதி. அதற்கு சிறிய உதாரணம் தங்கள் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் இரண்டு முறை செல்வார், அங்கு கட்சிப் பணிகளை கவனிப்பார், தொண்டர்களை சந்திப்பார், இது கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து உற்சாகப்படுத்தும்.
ஒரு இயக்கம் திறம்பட தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அது அவ்வியக்கத்தின் தலைவரின் கையில் இருக்கிறது, அதை தெளிவாக உணர்ந்தவர் கருணாநிதி. தன் கட்சியை சுறுசுறுப்பாக இயங்க வைக்க தான் பல மடங்கு சுறுசுறுப்பாக இயங்கினார். அதனால் தான் அவரை அக்கட்சி தொண்டர்கள் ஓய்வறியா சூரியன் என புகழ்வார்கள். அதற்கு தகுந்தாற்போல் அவருடைய செயல்பாடுகளும் இருக்கும்.
ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக இருந்தாலும் தேசிய அரசியலையும் நிர்ணயித்தவர் கருணாநிதி. மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்தபோது தேவகவுடா பிரதமராவதற்கு முக்கிய பங்காற்றியது கருணாநிதி.
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே எனக் கூறி தன் பேச்சை ஆரம்பிக்கும் கருணாநிதி, தன் கட்சி தொண்டர்களை உடன்பிறப்பாகவே கருதி அவர்களை அணுகியுள்ளார்.
அந்த உறவு தான் ஒரு தலைவரை தொண்டர்களோடு இணக்கமாக இருக்க வைத்தது.
இப்படி தலைமைப் பண்புக்கு சிறந்த உதாரணமாக விளங்கிய கருணாநிதி தி.மு.க தலைவராக ஜீலை 27,2018 ஆம் ஆண்டான இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். ஆனால் அந்த மகிழ்ச்சியை தன் தொண்டர்களோடு கொண்டாட முடியாமல் முடங்கிக் கிடக்கிறார் அந்த ஓய்வறியா சூரியன். வயது மூப்பு, அதனால் ஏற்பட்ட நோய்த் தொற்று அவரை முடக்கி வைத்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று தன் அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் விருப்பம் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு மக்கள் பலரது எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
பெரியாரின் சீடரான கருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இறைவன் இருக்கிறான்,வாழ்வும் மரணமும் அவன் கையிலேயே இருக்கிறது, அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வேண்டுதல்கள் பலன் தந்து மீண்டும் அந்த தலைவனின் குரலை அவரது உடன்பிறப்புகள் கேட்கட்டும்.
-முஜாஹித்
ஊடகவியலாளர்