தேசியவாதம் என்றால் என்ன?
இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன.
ஐரோப்பிய தேசியவாதம்
ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது.
முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கூட. அது எப்போதுமே ‘உள்ளுக்குள் எதிரி’ (உதாரணத்துக்கு யூதர்கள்) என்ற கருத்தாக்கத்தை எழுப்பிக்கொண்டேயிருந்தது.
இரண்டாவதாக, அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாகவே இருந்தது.
மூன்றாவதாக, தேசம் என்பது தன்னளவில் உச்ச வடிவத்தை அடைந்தது. தேசத்தை வலுவாக்குவது பரவலான கருத்தாக இருந்தது.
ஏனைய நாடுகளை ஒப்பிட, மிகப் பிற்காலத்தில், 19-ம் நூற்றாண்டில் உருவான தேசமான ஜெர்மனி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. தேசியவாதம் என்ற கருத்தாக்கத்தில் மற்ற நாடுகளைவிட உறுதியானதாக இருந்ததுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துக்கொண்டது. இவை அனைத்தும் பாசிஸக் கோட்பாட்டின் கீழ் வளர்ந்து உச்சமடைந்தன. இரண்டு உலகப் போர்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்ததன் மூலம் தேசியவாதத்தைவிட, முற்போக்கான, ஜனநாயகமான மரபு சமீப ஆண்டுகளாக ஐரோப்பாவில் வளர்ந்துவந்திருக்கிறது.
இந்திய தேசியவாதம்
காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் உருவான தேசியவாதக் கொள்கை முற்றிலும் வேறு மாதிரியானது. மிகவும் சக்தி வாய்ந்த எதிரியாக இருந்த காலனி ஆதிக்க நாடுகளை எதிரான போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அப்போராட்டம் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இயன்றவரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டியிருந்தது. அதேபோல், இதே மாதிரியான போராட்டங்களுடன் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டியிருந்தது. அதன் காரணமாக, மற்ற மூன்றாவது உலக நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொள்ள நேர்ந்தது. இறுதியாக, தேசத்தின் பெருமையைவிடவும் மக்களின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டதாக இந்திய விடுதலைப் போராட்டம் அமைந்தது. “ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரையும் துடைத்தகற்றுவதுதான் சுதந்திரத்தின் நோக்கம்” என்று காந்தி குறிப்பிட்டது அதைத் தெளிவாக வெளிப்படுத்தியது.
இந்தியாவின் இந்த தேசியவாதம் ஒப்புமை இல்லாததாகவும், இதற்கு முன்னர் உலகம் பார்த்திராத நிகழ்வாகவும் இருந்தது. மிகைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய தேசியவாதத்தை ஒப்பிட, அது ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் சமத்துவமானதுமாகவும் இருந்தது. முன்பு குறிப்பிட்ட மூன்று விஷயங்களிலும், ஐரோப்பிய தேசியவாதத்திலிருந்து வேறுபட்டு நின்றது, இந்திய தேசியவாதம்.
கிரேக்கப் புராணங்களில் வருவதுபோல் ஜியூஸின் தலையிலிருந்து வெளிவந்த அதீனா போல் முழுமையாக உருவான அற்புத விளைவாக இந்திய தேசியவாதத்தைச் சொல்ல வரவில்லை. அதிலும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் போக்கும் கலந்தே இருந்தது. ஆனால், அதை முன்னிறுத்தியபோதெல்லாம் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. தனது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால் அனைவரையும் உள்ளடக்கியதான ஜனநாயகபூர்வமான தேசியவாதமாகவே அது இருக்க வேண்டியிருந்தது.
தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கான நிலுவைத் தொகையை இந்தியா கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் காந்தி தனது இறுதி நாட்களில் வலியுறுத்தியபோது அவர் தேச விரோதியாகக் கருதப்படவில்லை. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டப் பின்னணியிலான ஜனநாயகபூர்வமான தேசியவாதத்தில் ஒரு இணக்கமான நிலைப்பாட்டைத்தான் அவர் எடுத்தார். சகிப்புத்தன்மை, ஒற்றுமை, வேறுபாடுகள் ஏற்படும்போது பேச்சுவார்த்தை, அமைதியை ஏற்படுத்தவோ, மேலாதிக்கத்தை நிலைநாட்டவோ வன்முறையைப் பிரயோகிக்காமை ஆகியவைதான் இந்த தேசியவாதத்தின் மையம்.
தேசியவாதத்தின் மையம்
இந்த தேசியவாதத்தின் அடிப்படையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டால், அதிலும் பயங்கரவாதச் சம்பவங்களோ வன்முறையோ இல்லாதபோது, வன்முறையைத் தூண்டும் சம்பவங்கள் நிகழாதபோது, அது சுயபரிசோதனைக்கான, ஆய்வுக்கான தருணமாக ஆக வேண்டும். மாறாக, காலனியாதிக்க யுகத்தைச் சேர்ந்த தேச விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடக்கூடாது.
ஐரோப்பாவின் மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதத்துக்கும், நமது சூழலில் உருவான தேசியவாதத்துக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்: ஐரோப்பாவின் தேசியவாதத்தின்படி, உள்ளுக்குள் எதிரி எனும் கருத்தாக்கத்தின் கீழ், குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களே எதிரிகளாக்கப்பட்டனர். ஜெர்மனியின் மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 0.7%தான் என்று நாஜிக்களே கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மிகைப்படுத்தப் பட்ட தேசியவாதம் எதிர்கொள்ளவிருக்கும் ‘உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள்’ எண்ணிக்கை மிகப் பெரியது. இந்த தேசியவாதம் கொண்டுவரும் சமூகப் பிளவின் அபாயமும் மிகப் பெரியது. தோல்வியடைந்த நாடாக இந்தியா மாறும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், இதுபோன்ற ‘தேசியவாத’த்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்!
இந்திய தேசியமும், பன்முகத்தன்மையும்
இந்தியா ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியோடும் எல்லைகளையும் கொண்டுள்ள தேசம் என்பதை அங்கீகரிக்கும் இந்த தேசியம், இந்த தேசத்திற்குள் பல வேற்றுமைகள் உள்ளன என்பதையும், இந்த வேற்றுமைகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதையும் இந்த தேசியம் ஏற்றுக்கொள்கிறது.
இந்த வேற்றுமைகள் ஏன் உருவாகின என்பதைப்பற்றி அதிகமாக இந்த தேசியம் கவலைப்படுவது இல்லை. எனவே இந்த வேற்றுமைகள் அகற்றப்படவேண்டும் என்பதும் இதன் முன்னுரிமையாக இருப்பது இல்லை. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சமூகத்தில் இந்த வேறுபாடுகள் ஏன் மறையவில்லை? என்பதைப்பற்றி இந்த தேசியம் அதிகமாக அலட்டிக்கொள்வது இல்லை.
இந்த தேசியவாதத்தின் பிரநிதிகள்தான் விடுதலைக்கு பிறகு பல ஆண்டுகள் அரசு அதிகாரத்தில் இருந்தனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்திட வாய்ப்புகளும், தேவையும் வலுவாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்மறைதான் நிகழ்ந்தது. பல்வேறு தேசிய இனங்கள் இந்தியா எனும் கோட்பாடிற்குள் மனப்பூர்வமாக அங்கம் வகிப்பதை இந்த தேசியம் உத்தரவாதப்படுத்த தவறிவிட்டது. இதற்கு சிறந்த சிறந்த உதாரணம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லை மாநிலங்கள்.
அதிகாரம் மையப்படுத்தப்பட்டது என்பது ஒரு பிரச்சனை. மேலும் பல பிரச்சனைகளும் இருந்தன. சமூகத்தின் வேற்றுமைகளை அங்கீகரிக்கும் இந்த தேசியவாதம் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை மாற்று கோட்பாடுகளை உருவாக்கவில்லை. சமூகத்தையும், பொருளாதாரத்தையும் தம் ஆளுமையின் கீழ் வைத்திருக்கத் துடிக்கும் ஒரு சிறு பகுதியினரின் பிரதிநிதிகளாகவே ஆட்சியாளர்கள் தொடர்ந்து விளங்கி வந்துள்ளனர். பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக உழைக்கும் மக்களளின் வாழ்வாதாரம் கடுமையாக பின்னோக்கி பயணித்தது. இதனால் உருவான பிரச்சனைகள் இந்தியா எனும் கோட்பாடிற்கு பலவீனத்தை உருவாக்கியது.
உண்மையில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்று சிந்தனை இல்லாததால் இந்த வகையிலான தேசியம் வாழ்வாதாரத்தை இழக்கும் உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினரை மதவாத தேசியத்தை நோக்கி துரத்தும் விரும்பத்தகாத ஆபத்தையும் விளைவித்தது.
இந்தியா எனும் கோட்பாடின் மீது நம்பிக்கை இழக்கும் தேசியம்
நவீன தாராளமயக் கொள்கைகள் உருவாக்கியுள்ள புதிய சூழலை கணக்கில் எடுத்துக்கொள்ள இந்த இந்திய தேசியம் தவறுகிறது. தன் ஆளுமைக்கு பயன்படும் எனில் முதலாளித்துவம் புதிய மாநிலங்களை உருவாக்கவோ அல்லது புதிய தேசங்களை உருவாக்கவோ தயங்குவது இல்லை. சுயநிர்ணய கோட்பாடு எவருக்கு பயன்படும் என்பது மிக முக்கியம்.
எனினும் இந்த வகை தேசியம் தான் விரும்பாவிட்டாலும் இந்துத்துவா தேசியத்திற்கு தனது அடக்குமுறையை அல்லது கருத்தை சாதாரண மக்களிடம் வலுவாக்கிட உதவி செய்துவிடுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கூட இதுதான் நடந்தது என செய்திகள் கூறுகின்றன. இந்துத்துவ தேசியத்திற்கும், முற்போக்கு தேசியத்திற்கும் இடையே வலுவான கருத்து மற்றும் களப்போராட்டங்கள் உக்கிரத்துடன் நடக்கும் வேளையில் “தேசிய இனங்களின் சிறைச்சாலைதான் இந்தியா” எனும் சுவரொட்டிகள் முளைக்கின்றன. இக்கருத்தை முன்வைக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இது எவருக்கு ஆயுதமாக பயன்படும் என்பதை புரிந்துகொள்வது கடினமான ஒன்று அல்ல. இந்தியா எனும் கோட்பாடை நிராகரிக்கும் எந்த ஒரு தேசம் அல்லது தேசியக் கருத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே யதார்த்த உண்மை.
அரசு – அரசாங்கம் – தேசியம்:
எந்த ஒரு தேசியமும் வெற்றிடத்தில் செயல்படுவது இல்லை. குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட அரசியல் பொருளாதார சூழலில்தான் தேசியம் எனும் கருத்தாக்கம் உருவாகிறது. தேசியம் குறித்த பல கோட்பாடுகளிடையே மோதலும் இச்சூழலில்தான் அரங்கேறுகிறது.
அரசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பது அனைவரும் அறிந்த ஒன்று! எதிரி வர்க்கங்களிடம் அரசு அதிகாரம் இருக்கும்பொழுது உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது இல்லை. அதே போல தேசிய இனப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுவது இல்லை. தமது சுரண்டலுக்கு எத்தகைய தேசியம் தேவையோ அதனையே ஆளும்வர்க்கங்களின் அரசு நிறைவேற்றிட முனைகிறது. தேவை எனில் தேசிய இனங்களிடையே முரண்பாடுகளை விசிறிவிடவும் அரசு தயங்குவது இல்லை.
ஆளும் வர்க்கங்கள் தமது இலாபத்தை உத்தரவாதப்படுத்தும் பொருளாதார கொள்கைகளில் தலையிடுவது போல சமூக பிரச்சனைகளில் தலையிடுவது இல்லை. உதாரணத்திற்கு குஜராத் படுகொலைகளில் எந்த ஒரு முதலாளிகள் அமைப்பும் தமது கருத்தை வெளியிடவில்லை. குஜராத் முதலாளிகள் முற்றிலும் மோடி பக்கம் நின்றனர். அதில் தீவிரமாக செயல்பட்டது கவுதம் அதானி. அதற்கு நன்றிக் கடனாகவே டாலர் பில்லியனராக அதானி இன்று முன்னுக்கு வந்துள்ளார். குஜராத் கலவரம் குறித்து இரத்தன் டாட்டா, இராகுல் பஜாஜ் போன்றோர் சிறு முணுமுணுப்பை வெளியிட்டனர். அதனாலேயே இந்த பெரிய முதலாளிகள் குஜராத்தில் பல திட்டங்களை இழந்தனர். இதனைக் கண்டு கிலியுற்ற முதலாளிகள் அமைப்பு மோடியிடம் மன்னிப்பு கேட்டது. மக்கள் செத்து மடிந்தாலும் தமது இலாபம் மட்டுமே இலக்கு என்பதே ஆளும் வர்க்கங்களின் குறிக்கோள்!
இன்றைய மோடி அரசாங்கம் இந்துத்துவா தேசியத்தை திணிக்க முனைகிறது. இந்துத்துவா தேசியத்தை ஏற்றுக்கொள்வதில் ஆளும் வர்க்கங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்துத்துவா தேசியம் முரட்டுத்தனமாக “ஒரு தேசம்; ஒரு தத்துவம்” என்பதை அமுல்படுத்த முனைகின்றன. இது தமது கொள்ளைக்கு மிகவும் உகந்தது என ஆளும் வர்க்கங்கள் எண்ணுகின்றன. ஏனெனில் ஒருங்கிணைந்த சந்தை தம் ஆளுமைக்குள் வரும் என அவர்கள் நம்புகின்றனர்.
இன்றைய அரசு மற்றும் அதன் ஒரு பகுதியான அரசாங்கம் இரண்டும் இந்தியாவின் பல்வேறு தேசியப் பிரச்சனைகளை காலில் போட்டு மிதிப்பதை வழமையாகக்கொண்டிருக்கின்றன.
ஃபக்ருதீன் அலி – எழுத்தாளர்