தமிழ் தேசியம் குறித்து விவாதிக்கும் பொதுவான நிலைகள் இரண்டு அடிப்படை வினாக்களில் இருந்து துவங்குவது எளிமையான அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஏன்? எப்படி? என்ற மூல கேள்விகளுடன் தமிழ் தேசியத்தை தொடர்பு படுத்தி விவாதிப்பதன் வழி தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் போதாமைகளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
முதலாவதாக தமிழ் தேசியத்தின் தேவை என்ன? என்பதிலிருந்து இது குறித்த உரையாடலை தொடங்க முடியும் என்றாலும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த தெளிவு மிக முக்கியமாகும். ஆனால் துரதஷ்ட வசமாக ‘இதுதான் தமிழ் தேசியம்’ என்று அறுதியிட்டுக் கூறக் கூடிய உறுதியான; எல்லாரும் ஏற்றுக் கொண்ட கொள்கை வரையறையை தமிழ் தேசியம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
தமிழ் தேசியம் ‘தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில் தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் நோக்கிச் சில பொதுப் பண்புகளை சுட்டலாம்.
தமிழ்த் தேசியம் தமிழர் மரபுத் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூக–அரசியல்–பொருளாதார நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்ற சூழமைவை கட்டமைப்பதை நோக்காக கொண்டது.
மேலே, தமிழ் தேசியம் குறித்து முன்வைக்கும் விளக்கங்கள், பல்வேறு தரப்பு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் விளக்கங்களின் தொகுப்பாகவே இருப்பதை உணரமுடிகிறது. காரணம் சமயம், சாதியம் வர்க பேதங்கள் குறித்த நடைமுறை சிக்கல்களில் தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை தனித்தனி கருத்துக்களை கொண்டவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் தேசியம் திட்டவட்டமான கருத்து வடிவத்தை இன்னும் அடையாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், தமிழ் தேசியத்தை முன்னிருத்த பொதுவான தலைவர் யாரும் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகிறது. தற்போது தமிழ் தேசியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு செயல்படும் அனைத்து தலைவர்களும், விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் மேதகு பிரபாகரனையே தமிழ் தேசிய தலைவர் என்று வரித்துக் கொண்டதாக கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். ஆயினும் பிரபாகரன் தன் போராட்டத்தில் தமிழ் தேசியம் குறித்தோ தன்னை தமிழ் தேசியத் தலைவன் என்று கூறிக் கொண்டதோ கிடையாது என்பதே உண்மை. பிரபாகரன் தன் மண் சார்ந்த விடுதலை வீரராகவே செயல்பட்டார் என்பதை சிலர் தங்கள் வசதிக்கு மாற்றி அமைத்து பிரச்சாரம் செய்வது சுயநல அரசியல் அன்றி வேறில்லை.
இதன் வழி,
- தமிழ் தேசியம் பொதுவான சட்டகம் எதையும் கொண்டிருக்கவில்லை
- தமிழ் தேசியத்தின் தலைவன் என்று கூறத்தக்க தலைவன் ஒருவன் இன்றுவரை தோன்றவில்லை
என்பதும் தெளிவாகிறது.
தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.
ஆகவே, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் மிகுந்த நெகிழ்வு தன்மையுடன் அமைந்திருப்பதானது அதனை தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை வலுவாக்குகிறது என்றே கூற முடியும்.
ஆயினும், பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியமாக கருதப்படவேண்டும் என்னும் அடுத்த கட்ட உரையாடலுக்கு நாம் செல்லவேண்டியது அவசியம்.
தமிழ்த்தேசியம் எனும் கருத்தியல்
- தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.
- தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ்மொழிப் பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது.
- தமிழ்த்தேசியத்தின் உட்பிரிவுகளாக தமிழகத் தமிழ்த்தேசியம், தமிழீழத் தேசியம் ஆகியன உள்ளன. இவற்றுள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் மெய்யியல் நோக்கில் தமிழ்த்தேசியம் எளிமையானதாக இருக்கிறது.
தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் எனக்கூறலாம். மேலும் தமிழ்த்தேசியம் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும் விளக்கப்படுத்தப்படுகிறது. தமிழ்த்தேசியம் சாதியொழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான உயர்நுட்பக்கருவி எனலாம். மொழிவாரித்தேசியர்கள் சாதிய முரணைப் பின்னுக்குத் தள்ளி மொழி மற்றும் தேசிய இன அடிப்படையிலான முரண்களை முதன்மைப்படுத்த முனைந்தனர். இவ்வாறு திரட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு இரு பற்றுக்கோடுகள் நடைமுறையில் உள்ளன. நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவனவே அவையாகும்.
தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா?
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை, தமிழக மக்களைக் கொண்டு அமையும் தேசியமே தமிழ்த்தேசியம் ஆகும்.
எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம்.
அது தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாக அமைந்துள்ளது.
ஆகவே, பொதுக்கொள்கையோ தனி தலைவனோ இல்லாத தமிழ் தேசியம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதையே நாம் கவனப்படுத்துதல் அவசியமாகிறது. தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம், நீண்ட காலமாக தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளத்தில் கிளர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமை மீட்சியின் கூட்டு வெளிப்பாடாக அமைகிறது. ஆக தமிழ் தேசியம் என்பது தங்கள் அரசியல் உரிமையைக் கோர விளையும் ஒரு இனத்தின் ஒளிவு மறைவு அற்ற உள்ள வெளிப்பாடு என்றே கொள்ள முடியும். ஆகவே தமிழ் தேசியம் தற்போது பரவலாக பேசப்படுவது போல் அரசியல் தளத்தில் விவாதிக்கப்படும் ஆற்றலை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதே தெளிவு.
இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருக்கும் தமிழ்நாடு தனது இறைமையை இழந்தமையால் அரசியலுரிமை, பொருண்மியவுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, கனிமவளவுரிமை, ஆற்றுரிமை, கடலுரிமை, தொழிலுரிமை போன்ற எல்லா அடிப்படை உரிமைகளையும் இழந்து, வந்தேறிகளின் வேட்டைக் காடாகத் தமிழ்நாடு மாறி, மண்ணை, மொழியை, இனத்தை, வளத்தை, சுற்றுச் சூழலை எனத் தமிழகத் தமிழ்த் தேசத்தின் அத்தனை கூறுகளையும் காக்க முடியாமல் அல்லலாடுகின்றது.
இத்தனை துன்பச் சுமைகளையும் சுமந்து வருவதாலும், தனது குருதிவழி உறவுகள் ஈழத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் போது தடுக்க முடியாமல் கையாலாகாமல் பார்த்திருந்தமையால் ஏற்பட்ட வெஞ்சினமும் தமிழகத்தில் தமிழ்த் தேசிய இனவெழுச்சியை கருத்தியல் ரீதியாகவெனினும் வீறுகொண்டெழச் செய்து விட்டது. இந்தக் கருத்தியற் தெளிவு செயல் வடிவம் பெறுகையில் வரும் மாற்றம் தேசிய இன விடுதலை என்பதாகவே இருக்கும். இதனை சாத்தியப்படுத்துவதற்காக பாரிய ஈகங்கள் தமிழ்நாட்டில் செய்யப்பட வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது.
தமிழீழத் தமிழ்த் தேசம் மற்றும் தமிழகத் தமிழ்த் தேசம் ஆகிய தமிழர் தேசங்களை விடுதலை பெறச் செய்வதற்கான கருத்தியலாய் இப்போதைக்குத் தமிழ்த் தேசியம் அமையும்.
மாறாக, அச்சிந்தனை போக்கை உணர்ச்சிமிகு அரசியலாகவும் பாசிச இனச்சிந்தனையாகவும் வளர்த்தெடுக்க முனையும் சில தரப்பினரின் செயல்பாட்டை நாம் கண்டித்தே ஆகவேண்டும். காரணம் முழுவதும் பக்குவப்படாத ஒரு இன உரிமை சார்ந்த சிந்தனையை தம் போக்கிற்கும் தம் சுயநலத்துக்கும் சாதகமாக மாற்றி அமைக்க முயலுவது அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய தீங்காகவே முடியும். அம்மக்கள் முன்னெடுக்க நினைக்கும் உரிமை சார்ந்த சிந்தனையின் ஞாயமும் உலக பார்வையில் மறைக்கப்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இயங்கிவரும் போலி இனமீட்சி சிந்தனையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் தேசியம் மிக கவர்ச்சிகரமான, மக்களைக் கவரக் கூடிய, மேடைப் பேச்சுக்கு உதவக் கூடிய ஒரு கருத்தாக்கமாக மட்டுமே பயன்பட்டு வருவதையே காணமுடிகிறது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு முரண்பட்ட கருத்துகளையும் பாசிச வெறுப்பையும் மிகச் சாதாரணமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.
ஃபக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்