கோல்டா மேயர். 1969இல் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடுமையான ஆறு நாள்கள் யுத்தம் 1967இல் முடிவடைந்து, மத்திய கிழக்கு பிராந்தியமே ஒரு மயான அமைதியில் அடுத்தகட்ட நிகழ்வை யோசிக்கின்ற சூழலில் இஸ்ரேலின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரேட் தாட்சர் இரும்புப் பெண் என அழைக்கப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேலிய அரசியலில் இரும்புப் பெண் அவர்.
டேவிட் பென்குரியன் தன் அமைச்சரவையில் இருந்த கோல்டாவை மிகச்சிறந்த ஆண் ஆளுமைகளுக்கு நிகரான பெண் என்று வர்ணிப்பது உண்டு. அவர் வெளிநாட்டு விவகாரத்துறையில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பழுத்த அனுபவமிக்கவர். பிரதமராக 1969லிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் அவர் எடுத்த பல முடிவுகளில் மனிதாபிமானம் மருந்துக்குக் கூட இல்லை.
போலந்திலிருந்து யூதர்கள் அதிக அளவில் இஸ்ரேலுக்கு வரத் தொடங்கினார்கள். கோல்டா மேயர் போலந்து நாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். இங்கு யூதர்கள் வரட்டும் பிரச்னை இல்லை. ஆனால் நோய்வாய்ப்பட்ட, உடல் ஊனமுற்ற யூதர்களை இனியும் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இவர் இரும்புப் பெண்மணி அல்ல, கடின மனம் படைத்த பெண்மணி என பத்திரிகைகள் எழுதின. ‘இஸ்ரேலின் மனித வளம் நாட்டிற்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும், ராணுவத்திற்கு ஆள் வேண்டும், மருத்துவ உதவிகளும், உபகரணங்களும் வேண்டும் எவரையும் தேவையற்று இங்கு சுமக்க முடியாது. அது யூதர்களாக இருந்தாலும்..!’ என்பதுதான் கோல்டா மேயரின் பார்வை.
யூதனுக்கே இந்த நிலை என்றால் அரேபியனுக்கு எந்த நிலை என நம்மால் ஊகிக்க முடிகிறது. இவரின் ஆட்சிக் காலத்தில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோன்றியது. ஒரு கையில் ஆலிவ்கிளை, மறுகையில் துப்பாக்கி உள்ளது. 1974இல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வாசகத்தை உரக்கப் பேசி அதிர்ச்சியைக் கிளப்பிய யாசர் அரஃபாத் இதன் முக்கிய தலைவர். பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒரு வெளிப்படையான அரசியல் அமைப்பாகவே தன்னை அறிவித்துக் கொண்டாலும், மறுபக்கம் துப்பாக்கிகளும் வெடித்தன. யாசர் அரஃபாத் தம்மை இரண்டுக்கும் நடுவில் பொருத்திக் கொண்டார்.
1970வாக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தாக்குதல்கள் மிகவும் வேகமாக இருந்தன. வெளிநாடுகளில் வாழும் பாலஸ்தீனியர்கள் போராட்டம் பேரணி எனத் தொடர்ச்சியாக நடத்தி இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுத்தனர். பிரதமர் கோல்டா மேயர், மொஸாத்தின் தலைவர் ஸமிரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அனைவர் முகத்திலும் ஒருவித இறுக்கம் தென்பட்டது. அப்போதுதான் ஜெர்மனியில் நடைபெற்ற தாக்குதலில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வெறும் யூதர்கள் அல்லர், இஸ்ரேலின் பிரதிநிதிகள். அவர்களின் முக இறுக்கத்திற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேலைத் தாண்டி வளரச் செய்கிறார் யாஸர். என்ன செய்யப் போகிறோம் நாம்? கோல்டா மேயரின் குரல் கோபமாக வெளிப்பட்டது. கடவுளின் கோபம் என ஒற்றை வரியில் பதில் சொன்னார் மொசாத்தின் தலைவர் ஸமிர். ஜெர்மனியில் நடந்தது சாதாரண விசயம் அல்ல, ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது, பல இலட்சம் பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது நமது வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்று நம்மிடமே பேரம் பேசி நாம் முடியாது என்று சொன்னவுடன் அத்தனை பேரையும் கொலை செய்ய தைரியம் எங்கிருந்து வந்தது?
‘பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்படுவார்கள்’ என்ற பாலஸ்தீன போராளிகளின் எச்சரிக்கையை கோல்டா மேயர் நிராகரித்தார். உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இரக்கம் என்ற வார்த்தைக்கு கோல்டாவிடம் அர்த்தம் தேட முடியாது. தங்களது கோரிக்கையை அலட்சியத்துடன் ஏற்க மறுத்ததால் அத்தனை வீரர்களையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் சுட்டுக் கொன்றது.
உலகம் ஸ்தம்பித்துப் போனது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மட்டுமல்ல கோல்டா மேயரின் முடிவைப் பார்த்தும் தான். ஸமிரின் கடவுளின் கோபம் என்றால் என்ன என அத்தனை பேர்களின் கண்களும் கோல்டா மேயரை நோக்கி விரிந்தது. ஸமிர் சற்று இருமலுடன் சொன்னார் எனவே… போராளி களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக பாலஸ்தீன தலைவர்களையும், முக்கியப் போராளிகளை யும் தீர்த்துக் கட்ட வேண்டும். போராளிகளையும், தலைவர்களையும் தீர்த்துக்கட்டும் இத்திட்டத்திற்கு வைத்த பெயர்தான் ‘கடவுளின் கோபம்‘. படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டிய-லையும் அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸமிர். மொஸாத்தின் திட்டமிடல் அது.
ஒன்றைச் சொல்லும் போதே அதைச் செயல்படுத்தும் முறையையும் சேர்த்தே சொல்வதுதான் மொஸாத்தின் பாணி. பட்டியலை மட்டும்தான் ஸமிர் கொடுத்தார். யாரையெல்லாம் தீர்த்துக்கட்டுவது என்பதை முடிவு செய்ய வேண்டியது பிரதமர். சற்று பெரிய பட்டியலான அதில் புகைப்படத்துடன் பெயர்கள் வரிசையாக இருந்தன. அத்தனை போராளிகளின் பெயரும் சரித்திரமும் அங்கு இருந்தது. அப்பட்டியலிளிருந்து 11 நபர்களை மட்டும் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் 11 ஒலிம்பிக் வீரர்களைத்தான் அந்த போராளிக் குழு துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்தது. பழிக்குப் பழி என்பது கோல்டாவின் தனிப் பாணி.
11 விளையாட்டு வீரர்களுக்கு 11 போராளிகள் என்ற ரீதியில் கணக்கு தீர்க்கத் திட்டம் தயாரானது. இந்த 11 போராளிகள் எங்கிருக்கிறார்கள், எப்போது தீர்த்துக் கட்டப்படுவார்கள் என அமைச்சரவை உறுப்பினர்கள் இப்போதுதான் முதன் முதலாக வாயைத் திறந்தார்கள். ‘அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை என்னால் தரமுடியாது ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப்படுவார்கள்’என்றார் ஸமிர். ஸமிர் சொன்னதுபோல அந்த 11 போராளிகளும் முழுமையாகக் கொல்லப்படுவதற்கு மொஸாத்திற்கு 20 ஆண்டுகள் பிடித்தது.
அந்த 11 பேரில் முதல் நபராக கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தது வாதி ஹத்தாத். பாலஸ்தீன ஷஃபாத்தில் பிறந்த ஒரு கிறித்துவர் என்பதுதான் வியப்பு. ஷஃபாத் என்ற கிராமம் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் நெருக்கமான உறவோடு வாழும் ஊர். அவர்களின் அமைதியான நட்பான வாழ்க்கை முறையில் குறுக்கே வந்தவர்கள் யூதர்கள். 1948 போரில் ஷஃபாத் என்ற அழகிய கிராமம் அழிக்கப்பட்டது. அகதிகளாக தஞ்சம் புகுந்தது ஹத்தாத்தின் குடும்பம். லெபனான் பெய்ரூத்தில் மருத்துவப் பிரிவில் படித்து சிறந்த மருத்துவராகவும் அங்கு பணிபுரிந்தார். தான் அகதியாக்கப்பட்டதில் இஸ்ரேலியர்களின் மேல் கடுமையான கோபம் ஹத்தாத்தின் மனதில் வடுவாகப் பதிந்திருந்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் போராளிகளாக வெறும் முஸ்லிம்கள் மட்டுமே போராடவில்லை. ஒரு சதவீத கிறித்தவர்களும் தங்களின் வாழ்க்கையை இந்தப் போராட்டத்திற்கு அர்பணித்தனர். அதில் ஒருவர் தான் ஹத்தாத். அழகான தங்களின் வாழ்க்கை முறையை ஒழித்தவர்கள் என்ற வகையில் இஸ்ரேலிய அரசு மீது இவர்களுக்கு மிகப்பெரும் கடுங்கோபம் மனதில் தைத்துக் கொண்டிருந்தது. அதிகப்படியான முஸ்லிம் நண்பர்களுடன் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த இவர்கள் மதத்தைத் தாண்டி தங்களின் வாழ்விடத்தை நேசித்தவர்கள்.