என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது
அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி
என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது..
அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம்,
அவள் நிம்மதியாய் வாழ்வதற்கு நாள் ஒதுக்கவில்லையே!
நீதியை மறைப்பதற்கு துப்பாக்கி சுமந்தவன் மகிழ்ச்சியாய்
உறங்குகிறான்..
“குடியுரிமை எங்கள் உரிமை” என்று அறவழியில் முழங்கியவள்
தேசதுரோகியாய் சிறை செல்கிறாள்..
உரிமைக்காக தன் நெஞ்சில் அநீதியின் நெருப்பையும் குளிராக்கிடுவாள்..அவள் என்னை சுமப்பதற்கு
நான் ஆனந்தம் அடைகிறேன்..
உலகமே!! என்னை மதியற்றதாய் நினைக்காதே!!
என் தாயின் மனவழியால் நான் அவதியுறுகிறேன்..
நான் என் தாய் வயிற்றில் உதைப்பதையும் தடுத்துக்கொண்டேன்
என் தாயின் சிறை வேதனையைக் கண்டு..
இனவாதமும் மதவாதமும் துருப்பிடித்த முற்களாய் என் தாயின்
சிந்தையை கிழித்துவிட்டது.
மன வேதனையில் ஊறிய இரத்ததை நான் உணவாக
உட்கொள்கிறேன்..
அசைவில்லாத மண்ணினம் கூட தன் வயிற்றில் முளைக்கும்
வெடித்த வித்தை மலரச்செய்கிறது..
ஆனால், மகிழ்ச்சி என்னும் மலராய் பூமியில் உதிக்கப்போகும்
நான் வாடிய செடியாய் பிறக்கப் போகிறேன்..
நான், பசுமை உள்ளம் கொண்டவர்கள் இப்பூமியில் உண்டு என்பதை
அனுதினமும் என் தாயிடம் ஆறுதலாக கூறுகிறேன்.
உங்கள் முதுகுதண்டுகளிலும் கருவரைகளிலும் நீங்கள் சுமந்திருக்கும் சேய்களின் சாட்சியாக!!
என் தாயை காப்பாற்றுங்கள்!!!
- முஹம்மது பைஜ்
அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி திருச்சி.